ஹக்கீமினால் உருவெடுக்கும் கிழக்கு தலைமைத்துவ வாதம்

0
220

-ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்-

இன்று இலங்கை முஸ்லிம்களிடையே பிரதேச வாதம் தலைவிரித்தாடி கொண்டிருக்கின்றது.தேர்தல் காலங்கள் வந்துவிட்டால் தங்களது ஊரிலிருந்தே அரசியல் பிரதிநிதித்துவம் வர வேண்டுமென தத்தமது ஊரார்கள் வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பி விடுவார்கள். இதன் விளைவாக சிறிய ஊர்களில் வாழும் சிறந்த ஆளுமைமிக்க நபர்கள் அரசியல் பிரதிநிதித்துவம் பெறுவது எட்டாக்கனியாகிவிடும்.

தனது ஆளுமை மூலம் தெரிவாகாது ஊர் பெயரைக் கொண்டு பாராளுமன்றம் செல்பவர்களிடமிருந்து சிறந்த அடைவு மட்டத்தை எதிர்பார்க்க முடியாது. இவ்வாறு தெரிவு செய்யப்படுபவர்கள் தங்களது ஊரை மாத்திரம் கவனத்திற் கொண்டு செயற்பட்டாலே எதிர்வரும் காலங்களிலும் மிக இலகுவாக தங்களது அரசியல் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும். இதன் காரணமாக சிறிய ஊர்களில் வாழும் மக்கள் மிகக் கடுமையான புறக்கணிப்புக்களை சந்திக்க நேரிடும்.

அண்மையில் பாலமுனையில் மு.காவிற்கெதிராக மக்கள் எதிர்ப்புக்களை வெளிக்காட்டியமையின் பின்னால் பிரதேச வாத புறக்கணிப்பு இருந்தமை இங்கு நினைவூட்டத்தக்கது. இதனை அங்கு உரையாற்றிய கலைக்கப்பட்ட பிரதேச சபையின் தவிசாளர் அன்சிலின் உரையிலிருந்து தெளிவாக அறிந்துகொள்ளலாம். மு.கா உதயமான காலப்பகுதியில் பிரதேச வாதத்தை இல்லாதொழிக்கும் போராட்டங்கள் இடம்பெற்றதாக அக் காலத்து வரலாறுகளை நினைவூட்டுவதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

மு.காவின் ஸ்தாபக தலைவர் அஷ்ரப் மரணித்த நாள் தொடக்கம் இன்று வரை இலங்கை முஸ்லிம்களை அரசியல் விடயங்களில் வழி காட்டக்கூடிய தலைமை கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவராகவே இருக்க வேண்டும் என்ற கோசம் கிழக்கு மாகாண மக்களிடையே நிலவி வருகிறது.

அஷ்ரப் மரணித்த சந்தர்ப்பத்தில் கிழக்கு தலைமைத்துவ கோசம் மு.காவின் தலைமைத்துவத்தை கைப்பற்றும் நோக்கில் கிளறப்பட்டதால் அது மக்களிடையே அவ்வளவு தூரம் எடுபடவில்லை. தற்போது கிழக்கு தலைமைத்துவ கோசம் கிழக்கு மக்களிடையே வலுவடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இக் கோசத்தை முன் வைப்பவர்கள் பலரும் பல்வேறான காரணங்களை முன் வைக்கின்றனர்.

கிழக்கு மாகாணத்திலுள்ள மக்களின் தேவைகளை ஒரு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒருவரால் தான் அறிந்து கொள்ள முடியும் என்பது சிலரது வாதம். இது தலைமைத்துவ பண்பை அறியாதவர்களின் கோசமாக நோக்கலாம்.சிறந்த தலைமைத்துவப் பண்பு கொண்டவர் ஒரு சமூகத்தின் அனைத்து தேவைகளையும் நன்கு அறிந்தவராக இருப்பார்.இலங்கை என்பது மிகச் சிறிய நாடாகும்.

இந்த மிகச் சிறிய நாட்டில் பத்து சதவீதம் வாழும் முஸ்லிம் மக்களின் தேவைகளை அறிந்து கொள்ளுமளவு ஒரு அரசியல் தலைவனை உருவாக்குவதொன்றும் பெரிய விடயமல்ல. கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் சிறந்த அரசியல் பிரதிநிதிகளை உருவாக்கும் போது அப் பிரதிநிதிகள் கிழக்கு மாகாணத்தின் தேவைகளை தங்களது தலைமையிடம் எடுத்துரைத்து நிறைவேற்றிக்கொள்ள முடியும். கிழக்கு மாகாணத்திற்கு வெளியே மூன்றில் இரண்டு பங்கு முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.

கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்றில் ஒரு பங்கினருக்குள் ஒரு சிறந்த தலைமைத்துவம் கொண்ட ஒருவரை பெறுவதற்கான நிகழ்தகவை விட கிழக்கிற்கு வெளியே மூன்றில் இரண்டு பங்கினர் வசிப்பதால் அவர்களுக்குள்ளிருந்து சிறந்த தலைமைத்துவமிக்க ஒருவரை பெற்றுக்கொள்வதற்கான நிகழ்தகவு அதிகமாகும்.

இன்று இலங்கை முஸ்லிம் மக்களின் பல்வேறு தேவைகள் கேட்பார் பார்ப்பார் அற்றுக் கிடப்பது மறுக்க முடியாத உண்மை. ஏனைய இடங்களைப் போல் அல்லாது கிழக்கு மக்கள் தங்களது தேவைகளை முஸ்லிம் கட்சிகளினூடாக சாதிக்கவே அதிகம் விரும்புகின்றனர். தங்களது தேவைகளை நிறைவேறாததைக் கண்ணுறும் போது அவர்களிடையே கிழக்கில் தலைமைத்துவம் இருந்தால் இந்த நிலை வராது, கிழக்கு தலைமை தான் தங்களது தேவைகளை நன்கு அறிவார்கள் என்ற எண்ணங்கள் தளைத்தோங்குவதாகவே நான் கருதுகிறேன்.

இவர்கள் நன்றாக ஒரு விடயத்தை விளங்கிக்கொள்ள வேண்டும். இன்றுள்ள முஸ்லிம் கட்சித் தலைமைகள் முஸ்லிம் மக்களின் தேவைகளை நன்கு அறியாமையால் தான் பிரச்சினைகள் தீராமல் இருக்கின்றதென ஒரு போதும் கூற முடியாது. அவர்கள் தகுந்த முறையில் அதனை தீர்ப்பதற்கு முயலாமல் இருக்கின்றார்கள் என்பதே உண்மை.

தற்போதுள்ள தலைமைத்துவங்களைப் போன்ற பண்புள்ளவர்கள் கிழக்கில் அரசியல் தலைமையாக இருந்தாலும் இதே இழுத்தடிப்புத் தான் நடக்கப்போகிறது. நாம் இங்கு சிந்திக்க வேண்டிய கோணம் கிழக்கு தலைமை அல்ல. மாறாக சிறந்த தலைமையாகும்.

அமைச்சர் ஹக்கீம் கடந்த பதினாறு வருட காலமாக இலங்கையின் பல பாகங்களிலும் அரசியல் செய்து வருகிறார். இவர் இலங்கை முஸ்லிம்களை தகுந்த விதத்தில் அறியாமல் இருந்திருந்தால் பதினாறு வருடங்கள் அரசியலில் நிலைத்திருக்க வாய்ப்பில்லை.

சிலர் அமைச்சர் ஹக்கீம் ஏமாற்றி அரசியல் செய்வதாக கூறினாலும் ஏமாற்றுவதற்கு கூட அந்த மக்களை தகுந்த விதத்தில் அறிந்திருக்க வேண்டும். அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வாக்குறுதியை பகிரங்கமாக கூறிவிட்டு எந்த வித சிறு அச்சமுமின்றி அவர் அங்கு நடமாடுகிறார் என்றால் அந்த மக்களை எந்தளவு அறிந்திருப்பார் என்பதை நான் சொல்லத் தேவையில்லை.

கிழக்கிற்கு தலைமைத்துவம் வேண்டும் என்ற வாதத்திற்கு சில புவியியல் சார் நியாயங்களுமுள்ளன. இன்று இலங்கையில் கிழக்கு மாகாணமே அதிகம் முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரு மாகாணமாகும். இந்த மக்கள் பேரின மக்களுடன் இணக்க ரீதியாக செல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது. கிழக்கிற்கு வெளியே வாழ்பவர்களில் அதிகமானவர்கள் பேரின மக்களுடன் ஒத்திசைந்து சென்றால் தான் பிரச்சினைகள் இன்றி தங்களது வாழ்வை கொண்டு செல்ல முடியும்.

அளுத்கமை பற்றி எரிகிறதென கிழக்கு முஸ்லிம்கள் தங்களது எதிர்ப்புக்களை வெளிக்காட்டும் வண்ணம் ஆர்ப்பாட்டங்களையும், கடை அடைப்புக்களையும் செய்திருந்தனர். அச் சந்தர்ப்பத்தில் கிழக்கிற்கு வெளியில் இருந்த அதிகமான கடைகள் பேரின வாதிகளின் பார்வைக்குள் தங்களை அகப்படாது பாதுகாத்துக் கொள்ள திறந்திருந்தனர்.

அழுத்கமைக்கு அண்மையில் இருந்த பல ஊர்களில் கூட இந்த நிலையை அவதானிக்க முடிந்தது. அவர்கள் தங்களது கடைகளை திறந்தமையை பிழை எனக் கூற முடியாது. அது தான் அவர்கள் வசிக்கும் இடத்தின் புவியியல் தன்மைக்கான பொருத்தமான போக்கு.

அரசியலமைப்பு மாற்றத்திற்கான முயற்சிகள் இடம்பெறும் இத் தருவாயில் கிழக்கு முஸ்லிம்களின் தேவையாக மு.காவினால் மர்ஹூம் அஷ்ரப் காலம்தொடக்கம் கூறப்படும் கல்முனை கரையோர நிர்வாக மாவட்டக் கோரிக்கை பற்றி அமைச்சர் ஹக்கீம் வாய் திறக்க முடியாத நிலையிலேயே உள்ளார். இது பற்றி இத்தனை நாளும் மு.காவின் செயலாளர் ஹசனலியே மு.கா சார்பாக கதைப்பார். இப்போது அவரையும் மூக்குடைத்து மூலையில் உட்கார வைத்துவிட்டார்கள். இது பற்றி அமைச்சர் ஹக்கீம் கதைக்கும் போது அதில் பேரினவாத எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும்.

அமைச்சர் ஹக்கீம் பேரின மக்களின் எதிர்ப்புகளை சந்தித்தால் தனது அரசியல் தளம் சரிக்கப்பட்டு விடும் என்ற அச்சம் தான் இது போன்ற விடயங்களில் அமைச்சர் ஹக்கீமின் மௌனத்திற்கான காரணமென மு.காவின் சில முக்கிய புள்ளிகள் கூறுகின்றனர். அமைச்சர் ஹக்கீம் தனது மரத்தில் கண்டியில் தனித்து தேர்தல் கேட்டு வெற்றி பெற முடியாது.

அமைச்சர் ஹக்கீமைப் பொறுத்தமட்டில் அவருக்கு கண்டி மகாநாயக்க தேரர்களின் ஆசீர் வாதம் இருந்தால் தான் கண்டியில் இலங்கையின் பிரதான கட்சிகளில் அவருக்கு ஆசனம் வழங்கப்படும். தேர்தல் நெருங்கும் காலப்பகுதியில் மலர்ச் செண்டுகளுடன் சென்று அவர்களை சந்திப்பதை அவதானிக்கலாம். கண்டி மாவட்டத்தை,கண்டி முஸ்லிம்களின் வாக்குகளை கவர பேரினக் கட்சிகளுக்கு அமைச்சர் ஹக்கீம் அவசியமில்லை என்ற நிலைமையே தற்போதுள்ளது. ஒரு கட்சியின் தலைவர் தனது பாராளுமன்ற ஆசனத்திற்கு இன்னுமொரு கட்சியில் தங்கிருத்தல் ஒரு போதும் ஏற்கத்தகுந்ததல்ல.

அதற்காக கண்டியில் இருந்து இலங்கை முஸ்லிம்களை தலைமை தாங்கக் கூடிய ஒருவர் வரக்கூடாது எனக் கூறவில்லை. கண்டியில் இலட்சக்கணக்கான முஸ்லிம் வாக்குகள் உள்ளன.

அமைச்சர் ஹக்கீம் சிறந்த முறையில் கண்டி மக்களை கவர்ந்திருந்தால் இன்று யாரும் அவரை புறக்கணித்து கதைக்க முடியாது.கண்டி மாவட்டத்தில் இவரோடு சேர்ந்து போட்டியிட்ட சக ஐ.தே.க வேட்பாளர் ஹலீம் இவரை விட பத்தாயிரம் வாக்குகள் அதிகம் பெற்றிருந்தமை ஹலீமின் வாக்குகளில் (ஐ.தே,க வாக்குகளில்) ஹக்கீம் அரசியல் முகவரி பெற்றுள்ளதை அறிந்துகொள்ள முடிகிறது.

இதன் மூலம் அமைச்சர் ஹக்கீம் கண்டி முஸ்லிம்களின் வாக்குகளைக் கவர ஐ.தே.கவிற்கு தேவையில்லை என்ற விடயமும் புலனாகிறது. இப்படியானர் ஒரு முஸ்லிம் கட்சிக்கு தலைமை தாங்க தகுதியானவராக குறிப்பிட முடியாது.

பேரினக் கட்சிகளின் கொள்கையில் முரண்பட்டு ஒரு கட்சி எதிர்த்து போராட வேண்டுமாகவிருந்தால் குறித்த கட்சியின் தலைமைத்துவமுள்ள பிரேதேசத்தில் அக் கட்சியின் தலைவர் தனித்து கேட்கும் நிலை இருக்க வேண்டும். அமைச்சர் ஹக்கீமால் கண்டியில் தனித்து தேர்தல் கேட்டு வெற்றி பெற முடியாது. இதனால் பேரினக் கட்சிகளின் கொள்கையில் முறண்பட்டாலும் தனது தேர்தல் வெற்றியை கருத்திற் கொண்டு அமைதியாகவே இருக்க வேண்டும். இது தான் இன்று அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான மு.காவின் நிலையாகும்.

அமைச்சர் ஹக்கீம் தேர்தல் வருவதற்கு முன் எக் கட்சியுடன் இருந்தாலும் தேர்தல் வந்துவிட்டால் ஐ.தே.கவுடன் தேனிலவு கொண்டாடச் செல்லுவதே இது வரை காலமும் நடந்தேறி வருகிறது. இதற்க்கு அமைச்சர் ஹக்கீமின் அரசியல் வாழ்வு ஐ.தே.கவில் தங்கி இருப்பது பிரதான காரணமாகும்.

இலங்கை முஸ்லிம்களை அரசியல் ரீதியாக தலைமைத்துவம் தாங்கும் ஒருவர் தான் வசிக்கும் இடத்தில் தனித்து கேட்டு வெற்றி பெறக் கூடிய சாதகமான நிலை இருக்க வேண்டும் என்பதை மேலுள்ளவைகளிலிருந்து அறிந்துகொள்ளலாம். கிழக்கிற்கு வெளியிலும் இச் சாதகமான புவியியல் போக்குடைய இடங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் ஒரு பக்கம் சாய்ந்தால் அம் மாவட்டத்தை வெற்றிகொள்ள முடியும். இலங்கையில் முஸ்லிம்கள் தனித்து நின்று வெற்றிகொள்ள சாத்தியமான ஒரே ஒரு மாவட்டம் அம்பாறையாகும். இம் மாவட்டத்தை ஒரு கட்சி வெற்றி கொள்ள வேண்டுமாக இருந்தால் அதற்கு முஸ்லிம்களின் ஆதரவு தேவை.

ஒரு கட்சி ஒரு மாவட்டத்தை வெற்றிகொள்வது சாதாரண விடயமுமல்ல. இதன் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் இலங்கை முஸ்லிம்களை தலைமை தாங்கும் ஒருவர் வந்தால் அக் கட்சி மிகப் பலமிக்கதாக திகழக் கூடிய சாதகமான நிலை உள்ளது.

பேரினக் கட்சிகள் அம்பாறை மாவட்டத்தை முஸ்லிம் கட்சிகளின் வாக்குகளில் நனைந்து கொண்டு வெற்றி கொள்ள, கிழக்கு மாகாண சபையை கைப்பற்ற அங்குள்ள முஸ்லிம் கட்சிகளுக்கு சில விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுவார்கள். இவ்வாறான விட்டுக்கொடுப்புக்களில் ஒன்றாகத் தான் அமைச்சர் ஹக்கீமிற்கு கண்டியில் வழங்கப்படும் ஆசனத்தையும் பார்க்கலாம்.

எனினும், இந்த நிலை அமைச்சர் றிஷாத்திற்கில்லை என்பதும் இங்கு சுட்டிக் காட்டத்தக்கது. வன்னி மாவட்டம் சிறு பான்மையினரை பெரும்பான்மையாக கொண்டதொரு மாவட்டம்.தமிழ் மக்கள் ஒரு போதும் பேரினக் கட்சிகளை ஆதரிக்கப்போவதில்லை.

இம் மாவட்டத்தில் த.தே.கூ பலமிக்கதாக திகழ்வதால் பேரினக் கட்சிகள் தங்கள் ஆதரவை தக்க வைக்க அவர்களுக்கு வன்னி மாவட்ட முஸ்லிம் மக்கள் வாக்குகள் தேவை. இன்று வன்னியில் மு.கா தனது வாக்கு வங்கியை வெட்டுப்புள்ளியைக் கூட நெருங்க முடியாதளவு இழந்துவிட்டது. இதன் காரணமாக பேரினக் கட்சிகளுக்கு வன்னியில் தங்களது ஆதரவை வெளிக்காட்ட அமைச்சர் றிஷாத் தேவை என்ற நிலை உள்ளது.

வன்னியில் சு.க ஒரு ஆசனத்தை பெற்றிருந்தாலும் அதில் போட்டியிட்டவர்கள் மிகக் குறைவானளவு விருப்பு வாக்குகளையே பெற்றுள்ளனர். வன்னியில் பாராளுமன்றம் தெரிவாகிய மஸ்தான் 7298 விருப்பு வாக்குகளையே பெற்றிருந்தார். இதன் காரணமாக அமைச்சர் றிஷாத் பேரினக் கட்சிகளுக்கு அடங்கிச் செல்ல வேண்டிய அவசியமில்லை.

கிழக்கிற்கு வெளியில் வாழும் முஸ்லிம்களில் அதிகமானவர்கள் பேரின கட்சிகளுடன் ஒத்திசைந்து செல்லும் பண்பைக் கொண்டவர்கள். இன்று கிழக்கிற்கு வெளியில் வாழ்பவர்களில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவானோரே மு.காவை ஆதரிக்கின்றனர்.

கடந்த முறை மு.கா தனது தேசியப் பட்டியலில் ஒன்றை களுத்துறைக்கு வழங்கியிருந்தது. இந்த இடத்தில் பணியிரண்டாயிரம் வாக்காளர்கள் இருந்தும் கடந்த தேர்தலில் மு.காவிற்கு வெறும் நானூறு அளவிலான வாக்குகளே அளிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இவ்வாறானவர்களிடம் தலைமைத்துவத்தை ஒப்படைத்துவிட்டு வேடிக்கை பார்க்க வேண்டிய அவசியமில்லை என்ற ஒரு கருத்து நிலவுகிறது.

இது ஒரு கோணத்தில் சரியாக இருந்தாலும் மறு கோணத்தில் இன்றுள்ள மு.கா முஸ்லிம்கள் ஆதரிக்கும் வகையில் இல்லை என்பதையும் ஏற்கத்தான் வேண்டும்.அன்று பல இடங்களிலும் வியாபித்திருந்த மு.கா இன்று மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்திற்குள் தனது எல்லையை சுருக்கிக்கொண்டுள்ளது.

பல இடங்களில் அஷ்ரபினால் வளர்க்கப்பட்ட மு.கா அழிந்து கொண்டிருக்கும் போது பேரினக்கட்சிகளுக்கு வாக்களித்து பழக்கப்பட்டவர்கள் இந்த கட்சியை ஆதரிப்பார்களா? கிழக்கிற்கு தலைமைத்துவம் வேண்டுமென முன் வைக்கப்படும் காரணங்களில் ஒன்றாக இது இருப்பதன் காரணமாகவே இதனை இங்கு குறிப்பிடுகிறேன்.

சிலர் தங்கள் குறைகளை தலைவரிடம் தான் முன் வைக்க விரும்புவர். குறித்த கட்சியின் முக்கியஸ்தர்கள் பிழை செய்யும் போது, பொடு போக்காக செயற்படும் போது அவற்றை ஒரு கட்சித் தலைவரிடம் தான் முன் வைக்க முடியும். அமைச்சர் ஹக்கீம் கிழக்கிற்கு வருவது கரடி பிறையைக் கண்ட கதை போன்று தான். இதன் காரணமாக .அமைச்சர் ஹக்கீம் கிழக்கு மக்களை சந்திப்பது கடினமான விடயம்.

இலங்கை முஸ்லிம் அரசியலின் அடித்தளம் கிழக்கில் உள்ளதன் காரணமாக இதன் போது மக்களிடையே ஒரு உணர்ச்சியுடன் கூடிய கிழக்கு தலைமைத்துவ எண்ணம் எழும். அமைச்சர் ஹக்கீம் கிழக்கு மக்கள் கரையோர மாவட்டம் போன்ற சில கோரிக்கைகளை முன் வைக்கின்ற போதும் அது பற்றி வாய் திறக்காது தொடர் மௌனம் பேனுகிறார். இதன் போது இவர் தான் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர் அல்ல என்பதால் தான் வாய் திறக்காமல் இருக்கின்றாரா? என்ற எண்ணம் மக்களிடையே எழுகின்றது.

இன்று அமைச்சர் றிஷாத்தின் அமைச்சீன் கீழ் உள்ள நிறுவனங்களது பதவிகளில் மிக முக்கியமான மூன்று பதவிகள் அம்பாறை மாவட்டத்திற்கே வழங்கப்பட்டுள்ளன. அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு கிழக்கு மாகாணத்தவர்களுக்கு ஒரு போதும் முன்னுரிமை வழங்குவதில்லை.

மு.கா கடந்த பாராளுமன்ற தேர்தலில் கிழக்கிற்கு வெளியே ஒரு ஆசனத்தையே பெற்றுள்ளது. எதிர்வரும் காலத்தில் இதனையும் இழந்துவிடலாம். பல தசாப்தங்களாக மு.கா தக்க வைத்து வந்த கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை மாவட்ட ஆசனம் இம்முறை இழக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் ந.தே.மு உடன் கூட்டிணைந்து மு.கா தனது ஆசனத்தை தக்க வைக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அம்பாறையில் தயா கமகே முஸ்லிம் வாக்குகளையும் தன் பக்கம் ஈர்த்து முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இப்படியே அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான மு.காவின் போக்கை விடும் போது மு.கா வெகு விரைவில் கிழக்கு மாகாணத்தையும் இழந்துவிடும்.

மு.கா இவ்வாறான தேர்தல் இழப்புக்களை சந்திக்க அமைச்சர் ஹக்கீமின் ஆளுமைப் பிரச்சினையே பிரதான காரணமென பலராலும் சுட்டிக்காட்டப்படுகிறது. முஸ்லிம் காங்கிரசுடன் முட்டி மோதும் அ.இ.ம.கா மிக இலகுவாக திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் தனது ஆசனத்தை பெற்றுள்ளதோடு அம்பாறையிலும் நுழைந்துவிட்டது.

மு.காவை உடைத்துக்கொண்டு அ.இ.ம.காவினால் முன்னேற முடியும் என்றால் அது அமைச்சர் ஹக்கீமின் சாணக்கிய சறுக்கல் தானே. மு.கா கிழக்கு மக்களின் இரத்தத்தில் முளைத்த கட்சி. அது அழிவதை மக்கள் பார்த்துக்கொண்டிருக்க மாட்டர்கள்.

இன்று கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒருவரே கிழக்கு மாகாணத்தை ஆழ வேண்டும் என்ற கோசத்தை கிழக்கின் எழுச்சி அமைப்பு தூக்கிப் பிடித்துள்ளது. இந்த அமைப்பின் பிரதான கோரிக்கை கிழக்கிற்கு தலைமைத்துவம் வேண்டும் என்பதை விட ஹக்கீமை மு.கவை விட்டும் துரத்துவதே எனக் கூறலாம். இதன் பின்னணயில் செயற்படுபவர்கள் யார் என்றால் அவர்கள் கூட ஹக்கீமின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் தான்.

இன்று மு.காவின் தலைவரை மு.காவின் யாப்பின் அடிப்படையில் அவ்வளவு இலகுவில் மு.காவை விட்டும் துரத்திட முடியாது. கிழக்கு மக்களை அமைச்சர் ஹக்கீமை விட்டும் வேறு பக்கம் திருப்பினால் ஹக்கீம் வேறு வழியின்றி தானாகவே மு.காவை விட்டும் விலக நேரிடலாம்.

மக்களை ஹக்கீமின் பிழையை சுட்டிக் காட்டி புரிய வைப்பது கடினம். அதற்கு மிக நீண்ட காலமும் தேவைப்படலாம்.கிழக்கு மாகாண தலைமைத்துவம் போன்ற உணர்ச்சியூட்டும் சிந்தனைகளை மக்களின் உள்ளங்களில் விதைத்தால் மக்கள் இலகுவாக ஹக்கீமை விட்டும் பிரித்தெடுக்கலாம். இவற்றின் மூலம் விளங்கிக்கொள்ள முடிமான ஒரு விடயம் தான் ஹக்கீமின் ஆளுமைக் குறைபாட்டினால் எழுந்துள்ள ஒரு கோசமே கிழக்கு மாகாண மக்களை அரசியலில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒருவரே ஆழ வேண்டும் என்ற சிந்தனையாகும்.

LEAVE A REPLY