வடக்கு முதல்வருக்கு எதிராக வவுனியாவில் பொதுபலசேனா ஆர்ப்பாட்டம்

0
289

வடமாகாண முதலமைச்சர் தெரிவித்து வரும் கருத்துக்களுக்கு எதிராக பொதுபலசேனாவின் ஏற்பாட்டில் வவுனியாவில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நேற்று இடம்பெற்றது.

வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள றோயல் விருந்தினர் விடுதி முன்பாக ஆரம்பித்த இந்த ஆர்ப்பாட்டப் பேரணி பசார் வீதி வழியாக நகரை வந்தடைந்து அங்கிருந்து சைவப்பிரகாச மகளிர் கல்லூரி வீதி வழியாகச் சென்று மன்னார் வீதியை அடைந்து அங்கிருந்து மாவட்ட செயலகம் வரை சென்று ஆர்ப்பாட்டப் பேரணி முடிவடைந்தது. மாவட்ட செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டோர் ஏ9 வீதியை மறித்தும் சுமார் 30 நிமிடங்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். இதன் போது பொலிசார் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்த விடாது தடுத்து நிறுத்தினர்.

ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டவர்கள் ‘ இது சிறிலங்கா, தமிழ் நாடு அல்ல, நாட்டை அராஜகத்துக்குள்ளாக்கி பிரிவினைக்கு வலுவூட்டும் வடக்கின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் உள்ளிட்ட அனைத்து தீவிரவாதிகளையும் ஓரங்கட்டுவோம், இது பௌத்த நாடு, தமிழ்- சிங்கள பேதமின்றி வாழ்வோம்’ மற்றும் எழுக தமிழ் மக்கள் பேரணிக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பியதுடன் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களில் கொண்டு வந்து இறக்கப்பட்ட சுமார் 300 பேர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் பொதுபலசேனாவின் ஞானசார தேரர் உள்ளிட்ட பௌத்த மதகுருமார், கலாபஸ்வெவ பகுதி மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இவ் ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னிட்டு வவுனியா நகர்ப் பகுதியில் காலை முதலே பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பேரணியின் முடிவில் ஆர்ப்பாட்டக்காரர்களால் வடமாகாண ஆளுனரின் செயலாளர், அரச அதிபர் ரோஹண புஸ்பகுமார, பொலிஸ் அதிகாரி ஆகியோரிடமும் மகஜர் கையளிக்கப்பட்டது.

தமிழ் பேசும் மக்கள் செறிவாக வாழும் நகரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக ஒரு பதற்றநிலையும் நகரில் காணப்பட்டது. காலை 10 மணிக்கு ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் 12.15 வரை இடம்பெற்றிருந்தது. இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக அவ்வப் போது வீதிகளில் போக்குவரத்து பாதிப்புக்களும் ஏற்பட்டது. பொலிசார் மாற்று வழிகள் ஊடான போக்குவரத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்திருந்தனர்.

இதேவேளை, கொக்குவெளி இராணுவக் குடியிருப்பில் வியாழக்கிழமை ஏற்பட்ட பதற்றநிலையால் இப் ஆர்ப்பாட்டப் பேரணி தொடர்பில் மக்களிடையே அச்சநிலை ஏற்பட்டிருந்தது.

Source: Thinakran

LEAVE A REPLY