ஒரு வாரத்துக்குள் முறிந்த போர் நிறுத்தம்; மேலும் அழிவை நோக்கி சிரியா

0
291

( எம்.ஐ.முபாறக்)

ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பறித்து ஐந்து வருடங்களாக இடம்பெற்று வரும் சிரியா நாட்டு யுத்தத்துக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கு நல்ல சந்தர்ப்பங்கள் பல கைகூடி வந்தபோதிலும், யுத்தத்தில் ஈடுபடுகின்ற தரப்புகள் ஒத்துழைப்பு வழங்காததால் சிரியா தொடர்ந்தும் அழிவை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றது.

சிரியா யுத்தத்தில் எதிர் எதிராக நின்று போராடி வரும் இரு பெரும் வல்லரசுகளான அமெரிக்காவும் ரஷ்யாவும் மனது வைத்தால் மாத்திரமே இதற்கு ஒரு முடிவு கட்ட முடியும் என்ற நிலை அங்கு இருப்பதால் யார் ஒத்துழைத்தாலும் யுத்தத்தை நிறுத்த முடியாது.

2011 இல் யுத்தம் தொடங்கப்பட்டது முதல் யுத்த நிறுத்தத்தை நோக்கி பல நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால்,அவை எவையும் வெற்றியளிக்கவில்லை. 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதமும் 2014 ஜனவரி மாதமும் யுத்தத்தில் ஈடுபடும் இரு தரப்புகளுக்கும் இடையில் ஜெனிவாவில் அமைதிப் பேச்சுக்கள் இடம்பெற்றன. அவை தோல்வியிலேயே முடிந்தன.

இதனைத் தொடர்ந்து இந்த வருடம் ஜனவரி மாதம் 29 ஆம் திகதி மீண்டும் இரு தரப்புகளுக்கும் இடையில் ஜெனிவாவில் பேச்சுக்கள் தொடங்கப்பட்டன. ஆனால், அந்தப் பேச்சும் எதுவித பலாபலன்களையும் எட்டாது ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வருடம் பெப்ரவரி மாதம் அமெரிக்காவும் ரஷ்யாவும் கூடிப் பேசி யுத்த நிறுத்த முடிவுக்கு வந்தன. சிரியா அரசும் அந்த அரசுக்கு எதிராகப் போராடும் எதிர்க்கட்சிகளும் யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ளுதல் என்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் மற்றும் அல்-கைதா சார்பு, அல்-நுஸ்ராவுடன் இணைந்ததான ஆயுதக் குழுக்கள் உள்ளிட்ட மேலும் பல ஆயுதக் குழுக்களுக்கு எதிரான யுத்தத்தைத் தொடர்வது என்றும் அதில் இணக்கம் காணப்பட்டது.

இந்தப் பகுதியளவிலான யுத்த நிறுத்தம் சிரியா நாட்டு மக்களுக்கு எதுவித நன்மையையும் கொடுக்கவில்லை. யுத்த நிறுத்தம் சம்பந்தப்பட்ட தரப்பால் தொடர்ச்சியாக மீறப்பட்டுக்கொண்டே வந்தது. பயங்கரவாதிகளை ஒழிக்கின்றோம் என்ற பெயரில் மக்களே கொன்று குவிக்கப்பட்டனர். இந்த யுத்த நிறுத்தத்துக்குப் பிறகுதான் மக்கள் மீதான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டன. குறிப்பாக, அலெப்போ மாகாணம் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானது.

மக்கள் ஆயுதங்களால் கொன்றுகுவிக்கப்பட்ட அதே நேரம் பட்டினியாலும் கொல்லப்பட்டனர். சுமார் நான்கு லட்சம் பேர் ஆயுதக் குழுக்களினதும் அரச படையினரினதும் முற்றுகைக்குள் சிக்கியுள்ளனர். அவர் பட்டினியால் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லப்படுகின்றனர்.

இவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அனுப்பி இவர்களைக் காப்பாற்றுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில்,மற்றுமொரு யுத்த நிறுத்தத்துக்கு அமெரிக்காவும் ரஷ்யாவும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் இணக்கம் கண்டன.

பெப்ரவரி மாதம் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம்போல் இதுவும் ஆயுதக் குழுக்களை தவிர்த்தே செய்யப்பட்டது. ஆனால், ஒப்பத்தம் நடைமுறைக்கு வந்து ஒரு வாரத்திலேயே அது கிழித்து வீசப்பட்டதுதான் கவலைக்குரிய விடயம்.

சிரியா படையினர் மீது அமெரிக்காவின் யுத்த விமானங்கள் தவறுதலாக மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்தே இது முறிவுக்கு வந்தது. இதற்கு அமெரிக்கா மன்னிப்புக் கேட்டபோதும்கூட சிரியா அரசு அந்த மன்னிப்பை ஏற்காது அமெரிக்காவைப் பலி வாங்கியது.

ஒப்பந்தத்தின் அடிப்படையில் முற்றுகைக்குள் சிக்கியுள்ள சிரியா மக்களுக்கு வழங்குவதற்காக நிவாரணப் பொருட்களை எடுத்து வந்த வாகனத் தொடரணிமீது சிரியா மற்றும் ரஷ்யாவின் விமானங்கள் தாக்குதல்களை நடத்தி அந்தப் பொருட்களை அழித்ததோடு நிவாரணப் பணியாளர்களையும் கொன்றன.

இதனைத் தொடர்ந்து யுத்த நிறுத்தத்தைக் கிழித்து வீசுவதாக சிரியா அரசு அறிவித்தது. இப்போது அங்கு யுத்தம் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இனி ஒரு யுத்த நிறுத்தம் ஏற்படவேமாட்டாது. யுத்தத்தால்தான் தீர்வு காணப்படும் என்ற நிலைதான் அங்கு இப்போது ஏற்பட்டுள்ளது. இது மக்கள் எவரும் அற்ற சிரியாவைத்தான் உருவாக்கப்போகிறது.

யார் வல்லரசு என்று காட்டுவதற்காக அமெரிக்காவும் ரஷ்யாவும் நடத்தும் இந்த நாடகத்தாலும் சிரியா மக்கள் முழுவதும் அழிந்தாலும் நானே இறுதிவரைக்கும் ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என்ற சிரியா ஜனாதிபதியின் பேராசையாலும் இன்று சிரியா அழித்துக்கொண்டு செல்கின்றது.

உலகில் தற்போது இடம்பெற்று வரும் யுத்தங்களுள் மிகவும் கொடூரமான-அதிக சேதங்களை ஏற்படுத்திய யுத்தமாக சிரியா யுத்தம்தான் உள்ளது. சிரியா ஜனாதிபதி பசர் அல் அசாத்தைப் பதவி கவிழ்பதற்காகத் தொடங்கப்பட்ட இந்த யுத்தத்தால் இது வரை எந்தத் தரப்பும் வெற்றி பெறவில்லை. தினம் தினம் உயிர்ச் சேதங்களையும் பொருட் சேதங்களையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்த யுத்தத்தில் எந்தத் தரப்பும் வெல்ல முடியாமல் இருப்பதற்குக் காரணம் யுத்தத்தில் ஈடுபடும் இரு தரப்பும் சம பலத்துடன் காணப்படுவதுதான்.

சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஆள்பலத்துடன் பல்வேறு ஆயுதக் குழுக்கள் அமெரிக்காவின் உதவியுடன் சிரியா அரசுக்கு எதிராகப் போராடி வருகின்றன. மறுபுறம், சிரியா அரசைக் காப்பாற்றுவதற்காக ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற நாடுகளும் ஹிஸ்புல்லாஹ் அமைப்பும் சிரியா ஜானதிபதி ஆசாத்துடன் இணைந்து போராடி வருகின்றன.

ஈரானின் ஆதரவில் சிரியாவுக்குள் களமிறக்கப்பட்டுள்ள ஈரானியத் துணைப்படை மற்றும் இராணுவத்தின் உதவியுடனும் ரஷ்யாவின் விமானத் தாக்குதலின் உதவியுடனும் சிரியா படையினர் முன்னேறி வருகின்றனர்.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம்தான் ரஷ்யாவின் விமானத் தாக்குதல்கள் தொடங்கப்பட்டன. உலக வல்லரச நாடுகளுள் ஒன்றான ரஷ்யா, சிரியா அரசுடன் கை கோத்துள்ளதால் சிரியா அரசு பலம் பெற்றுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

ரஷ்யாவின் விமானத் தாக்குதல்களின் உதவியால் சிரியா படையினர் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பல இடங்களை மீளக் கைப்பற்றியுள்ளனர். மறுபுறம், அமெரிக்க ஆதரவு பெற்றுள்ள ஆயுதக் குழுக்களும் அதிக பலத்துடன் போராடி வருகின்றன.

சிரியா யுத்த களத்தில் உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான ரஷ்யாவும் அமெரிக்காவும் எதிர் எதிர் நின்று போராடுவதால் நீயா, நானா என்ற போட்டி ஏற்பட்டுள்ளது.

உண்மையில்,சிரியாவில் இடம்பெற்றுக் கொண்டிருப்பது சிரியா அரசுக்கும் ஆயுதக் குழுக்களுக்கும் இடையிலான யுத்தம் அல்ல. இரு பெரும் வல்லரசுகளான அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான மறைமுக யுத்தமாகும்.

இந்த யுத்தத்தில் எந்தத் தரப்பு வெல்கிறதோ அந்தத் தரப்புக்கு உதவிய வல்லரச நாடே வென்றதாக அண்மையும். இதனால், எது வல்லரச நாடு என்று உலகம் அடையாளங் காண்பதற்கான ஒரு யுத்தமாகவே இது அமைந்துள்ளது.

பல நாடுகளில் அமெரிக்க இராணுவம் நேரடியாகக் களமிறங்கிப் போராடி வருகின்றபோதிலும், சிரியா விவகாரத்தில் அமெரிக்கா அவ்வாறு நடந்துகொள்ளவில்லை. அங்கு போராடி வருகின்ற ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்களையும் ஏனைய உதவிகளையும் வழங்கியே இந்த யுத்தத்தில் கலந்து கொண்டுள்ளது. அத்தோடு,விமானத் தாக்குதல்களையும் நடத்தி வருகிறது.

இவ்வாறு சிரிய ஜனாதிபதிக்கு எதிராக ஆட்பலத்தையும் ஆயுத பலத்தையும் அமெரிக்கா சிரிய மண்ணில் அதிகரித்துக் கொண்டே போகின்றது.

மறுபுறம்,ரஷ்யா சிரியாவில் இரண்டு விமானத் தளங்களை நிறுவி அமெரிக்க ஆதரவு ஆயுதக் குழுக்களுக்கு எதிராக விமானத் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

இவ்வாறு இரண்டு வல்லரச நாடுகளும் தங்களது போராட்ட பலத்தை அதிகரித்துக் கொண்டு செல்வதால் சிரியா மேலும் மேலும் அழிவை நோக்கியே செல்கிறது. விரைவில் மக்கள் எவரும் அற்ற சிரியா உதயமாகும் அபாயம்தான் அதிகம் உள்ளது.

LEAVE A REPLY