இந்தியாவும் பாகிஸ்தானும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்: ஐக்கிய நாடுகள் கோரிக்கை

0
176

இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளின் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பதட்டமான சூழல் காணப்படுவது குறித்து கவலை தெரிவித்த ஐக்கிய நாடுகள் அவை இருநாடுகளும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவுடன் பயங்கரவாதிகள் நடத்திய உரி தாக்குதலில் 19 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் நேற்று முன்தினம் இரவு அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் எல்லைக்குள் 2-கி.மீ தொலைவு உள்ளே சென்று தாக்குதல்கள் நடத்தப்பட்டன.இந்த தாக்குதலின்போது பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் 7 முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், 38 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், பாகிஸ்தான் சிப்பாய்கள் 2 பேர் உயிரிழந்ததாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலையடுத்து பாகிஸ்தானும் பதில் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் எல்லையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் பான் கீ மூனின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் இரு நாடுகளும் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துஜாரிக் கூறியதாவது:- “ எல்லைக்கட்டுப்பாடு பகுதியில் அதிகரித்து வரும் பதட்டத்தை கவலையுடன் ஐநா கவனித்து வருகிறது. இந்தியா-பாகிஸ்தானுக்கான ஐநா ராணுவ கண்காணிப்பு குழு, போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதையடுத்து விழிப்புடன் உள்ளது. இது குறித்த மேலும் தகவல்களை பெறுவதற்காக சம்பந்தப்பட்ட இரு தரப்பு அதிகாரிகளையும் ஐநா குழு தொடர்பு கொண்டுள்ளது.

இந்தியாவும் பாகிஸ்தானும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். இருநாடுகளும் தங்கள் வேறுபாடுகளை அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க தொடர்ந்து முன்வரவேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.

-Daily Thanti-

LEAVE A REPLY