எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒபெக் இணக்கம்

0
177

எண்ணெய் உற்பத்தி நாடுகளின் ஒபெக் அமைப்பு கடந்த எட்டு ஆண்டுகளில் முதல் முறை எண்ணெய் உற்பத்தியை குறைக்க இணங்கியுள்ளது. மசகு எண்ணெய் விலையை உயர்த்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அல்ஜீரியாவில் புதனன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலேயே மேலதிக உற்பத்தியை மட்டுப்படுத்த பிரதான எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் இந்த உடன்பாட்டுக்கு வந்துள்ளன.

“ஒபெக் இன்று சிறப்பான முடிவொன்றை எடுத்துள்ளது” என்று ஈரான் எண்ணெய் அமைச்சர் பிஜான் சகனேஹ் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த உடன்பாடு குறித்த முழு விபரமும் நவம்பரில் இடம்பெறவுள்ள ஒபெக் உத்தியோகபூர்வ மாநாட்டிலேயே உறுதி செய்யப்படும் என்று எண்ணெய் அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த செய்தியை அடுத்து எண்ணெயின் சர்வதேச தரம் சுமார் 6 வீதமாக உயர்ந்து பீப்பாய் ஒன்று 49 டொலரை எட்டியது.

இந்த எண்ணெய் உற்பத்தி குறைப்பின் விளைவாக நாளொன்றுக்கு சுமார் 700,000 பீப்பாய்கள் வரை விழ்ச்சி ஏற்படும் என்பதோடு அது முழு உறுப்பு நாடுகளிடமும் சரி சமமாக பகிரப்படவில்லை. ஈரான் தொடர்ந்து தனது உற்பத்தியை அதிகரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் கடந்த கால முயற்சிகள் பிராந்திய எதிரிகளான சவூதி மற்றும் ஈரானுக்கு இடையில் கருத்தொற்றுமை எற்படாததால் முடியாமல் போனது.

குறைவான கேள்வி மற்றும் அளவுக்கு அதிகமான விநியோகம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுக்கு மேலான காலத்தில் எண்ணெய் விலை 110 டொலரில் இருந்து பாரிய வீழ்ச்சி கண்டது. இதனால் எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒபெக்கின் சிறு நாடுகள் அழுத்தம் கொடுத்து வந்தன.

இது ஒரு சாதகமான முடிவு என்று நைஜீரிய எண்ணெய் அமைச்சர் எம்மானுவல் இபே கசிக்வா குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்மானம் ஒருமனதாக எடுக்கப்பட்டது என்று அல்ஜீரிய எண்ணெய் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

-Thinakaran-

LEAVE A REPLY