ஒப்பந்தத்தில் அடிப்டையில் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை செய்வதற்கு SLMC தவறியிருக்கிறது: NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான்

0
212

(NFGG ஊடகப்பிரிவு)

“எம்மோடு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பலனாக உச்சக்கட்டப் பிரயோசனத்தை அடைந்து கொண்ட SLMCகட்சி, அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தேர்தலுக்குப் பின்னர் தாம் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை செய்வதற்கு தவறியிருக்கிறது.

எதிர்வரும் காலங்களில் பொது நோக்கங்களுக்கான கூட்டணிகளை SLMC உடன் செய்யக்கூடிய நம்பகத் தன்மையினை இது கடுமையாகப் பாதித்திருக்கிறது.” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

அண்மையில் ‘நேத்ரா’ தொலைக்காட்சியில் இடம் பெற்ற ‘வெளிச்சம்’ அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கு பற்றிய சந்தர்ப்பத்திலேயே NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதிச் செயலாளர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் அவர்களும் கலந்து கொண்டனர்.

கடந்த பொதுத் தேர்தலின் போது NFGG க்கும், SLMC க்கும் இடையில் மேற் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பில், தேர்தலுக்குப் பின்னர் SLMC யின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இருக்கிறதா என கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அப்துர் ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொறியாலாளர் அப்துர் ரஹ்மான் மேலும் தெரிவித்ததாவது,

‘ஒரு ஜனநாயக அரசியல் சூழலில் அரசியல் கட்சிகளின் கூட்டணிகள், கூட்டு முயற்சிகள் என்பன தவிர்க்க முடியாதவை. ஆனால், அவ்வாறான கூட்டணிகள் எவ்வாறு அமைய வேண்டும் என்ற ஒரு அடிப்படைப் பார்வை எம்மைப் பொறுத்த வரையில் இருக்கிறது.

அதாவது, அதிகாரங்களையும், பதவிகளையும் மாத்திரம் கட்சிகளுக்கிடையில் பங்கு போடுகின்ற கூட்டணிகளாக அல்லாமல் மக்களின் நலன்களை கூட்டிணைந்த உழைப்பின் மூலமாக வென்றெடுக்கின்ற கூட்டணிகளிகளாகவே அவை இருக்க வேண்டும். இந்த அடிப்படையிலேயே பல்வேறு கட்சிகளுடனும் பலவகையான கூட்டணி ஒப்பந்தங்களை நாம் செய்துள்ளோம். வட மாகாணத்தில் நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்போடு செய்து கொண்ட ஒப்பந்தம் இதற்கு நல்ல உதாரணமாகும்.

வட மாகாணத்தில் நாம் பெரும் அரசியல் ஆதரவுத்தளத்தைக் கொண்டிருக்காவிட்டாலும் கூட, தமிழ் தேசிய கூட்டமைப்பு வழங்கிய போனஸ் ஆசனத்தின் மூலமே எமது உறுப்பினர் வடமாகாண சபையில் அங்கத்துவம் வகித்தாலும் கூட மக்களின் நலன்களை முதன்மைப்படுத்துவதற்கு அவசியாமன எமது சுயாதீனத்தை நாம் எப்போதும் விட்டுக் கொடுக்கவில்லை.

வட மாகாண சபையில் அரசியல் தீர்வு பற்றிய பிரேரணை கொண்டு வரப்பட்ட போது அதில் எமது மக்களுக்கு பாதகமாகக் காணப்பட்ட அம்சங்களை நாம் மாத்திரமே எதிர்த்தோம். ஏனைய முஸ்லிம் பிரதிநிதிகள் அவ்வாறு எதனையும் செய்யவில்லை. இதிலிருந்து கூட்டணிகளின் ஊடாக சமூக நோக்கத்திற்கு நாம் கொடுக்கின்ற முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும். அந்த அடிப்படையிலேயே SLMC யுடனான ஒப்பந்தத்தையும் நாம் மேற் கொண்டோம்.

இதன் பிரகாரம் இரண்டு கட்சிகளுக்கும் பல்வேறு கடமைகளும் பொறுப்புக்களும் இருக்கின்றன. தேர்தலுக்கு முந்திய கடமைகள் தேர்தலுக்குப் பிந்திய கடமைகள் என இரண்டு வகையான கடமைகள் இருக்கின்றன. தேர்தலுக்கு முன்னரான எமது கடமைகளை நாம் நூறு வீதம் நிறைவேற்றியுள்ளோம். அதன் பலனாக SLMC கட்சி உச்சகட்டப் பிரயோசனத்தை அடைந்துள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனியாக நின்று முழுவீச்சுடன் போட்டியிட்ட SLMC யினால் 23000 வாக்குகளையே பெறமுடிந்தது. ஆனால், கடந்த பொதுத் தேர்தலில் எம்முடன் கூட்டிணைந்ததன் காரணமாக வரலாற்றில் எப்போதுமே பெற்றிராத அளவு 38500 வாக்குகளை SLMC – NFGG கூட்டணியினால் பெற முடிந்தது.

கடந்த தேர்தலில் 32000 வாக்குகளைப் பெற்ற UPFA அணியினால்கூட பாராளுமன்ற ஆசனம் ஒன்றைப் பெறமுடியவில்லை. இந்நிலையில் NFGG உடனான கூட்டணி இல்லாது போயிருந்தால் SLMC ஆசனம் ஒன்றைப் பெற்றிருக்கவே முடியாது என்பதனை பொதுப் புத்தியுள்ள எவராலும் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும்.

இந்த ஆசனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெறப்பபட்ட சாதாரண ஒரு ஆசனம் கிடையாது. முழு இலங்கையிலும்SLMCயின் சொந்தப் பெயரில் பெறப்பட்ட ஒரேயொரு ஆசனம் இது மாத்திரமேயாகும். ‘பாராளுமன்றத்தில் ஆசனத்தினைக் கொண்டுள்ள கட்சி’ என்கின்ற அந்தஸ்த்தும் கூட இந்த ஆசனத்தின் காரணகவே SLMC க்குக் கிடைத்துள்ளது.

இப்படியாக NFGG உடனான கூட்டணி மூலமாக உச்சக்கட்டப் பிரயோசனத்தை SLMC அடைந்து கொண்டுள்ளது. அப்படியிருந்தும் குறித்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை SLMC தேர்தலுக்குப் பின்னர் ஏறத்தாள 100 வீதம் மறந்து விட்டது. இது ஒரு ரகசிய ஒப்பந்தம் அன்று. மிக பகிரங்கமாகவே இது கைச்சாதிடப்பட்டு தேர்தலுக்கு முன்னரே அனைத்து மக்களோடும் பகிர்ந்து கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தமாகும்.

இது தொடர்பில் பல ஞாபக மூட்டல்களை SLMC தலைமைத்துவத்திட்டம் பல வழிகளில் செய்திருக்கிறோம். இங்கிருக்கின்ற நிஸாம் காரியப்பர் அவர்களுக்கும் இந்த விடயங்கள் அனைத்தும் தெரியும். ஆனால் அவை பற்றி எதையும் பொருப்படுத்தாது SLMC மிக அசிரத்தையாகவே இதுவரை நடந்து கொண்டு வருகிறது. மொத்தத்தில் NFGGதொடர்பில் SLMC க்கு இருக்கும் கடமைகளை நிறைவேற்றுவதில் அந்தக் கட்சி படுபயங்கரமாக தவறியிருக்கிறது.

எதிர்வரும் காலங்களில் பொது நோக்கங்களுக்கான இது போன்ற கூட்டணிகளை SLMC உடன் செய்யக்கூடிய நம்பகத் தன்மையினை இது கடுமையாகப் பாதித்திருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் NFGG தனது கடமையினை முழுமையாக நிறைவேற்றியிருக்கும் நிலையில் இது முடிவடைந்தாலோ அல்லது இது போன்ற பொது உடன்பாடுகளை எதிர்காலங்களில் செய்ய முடியாது போனாலோ அதற்கான முழப் பொறுப்பையும் SLMCயே ஏற்றுக் கொள்ள வேண்டும்.”

LEAVE A REPLY