சீனாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் வெடிப்பு – 18 பேர் பலி

0
110

-எம்.ஐ.அப்துல் நஸார்-

சீனாவில் நிலக்கரிச் சுரங்கமொன்றில் 20 பேர் கொண்ட குழுவினர் சட்டவிரோத நிலக்கரி அகழ்வில் ஈடுபட்டபோது எரிவாயு வெடிப்பு ஏற்பட்டதனால் சுமார் 18 பேர் பலியானதாகவும் இருவர் காணாமல் போயுள்ளதாகவும் சீன ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் கடந்த செவ்வாய்கிழமை வடமேற்கு சீன நகரான ஷிஸியுஷான் நகரில் அமைந்துள்ள சிறிய நிலக்கரிச் சுரங்கமொன்றில் நிகழ்ந்துள்ளது என சீன அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத நிலக்கரி அகழ்வே இந்த விபத்துக்குக் காரணமென தெரிவித்pருக்கும் சீன அரசாங்க ஊடகமான ஷின்ஹுவா மேலதிக விபரங்கள் எதனையும் வெளியிடவில்லை.

குறித்த நிலக்கரிச் சுரங்கத்தை உரிமையாகக் கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட லின்லி நிலக்கரிச் சுரங்க கம்பனியின் பிரதிநிதிகள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடுமையான எரிவாயுச் செறிவு மற்றும் நிலக்கரி அகழும் சுழல் தகடுகள் சரிந்து வீழ்திருந்தமை காரணமாக பணியாளர்களை மீட்பதில் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கியதாக ஷிஸியுஷான் நகர பிரதி மேயர் வூ யூகோ தெரிவித்தார்.

ஆபத்தான சூழ்நிலை நிலவிய போதிலும் தீயணைப்புப் படை வீரர்கள் மற்றும் சுரங்கப் பணியாளர் மீட்பு விஷேட உத்தியோகத்தர்கள் இணைந்து கடந்த புதன்கிழமை காணாமல் பொனோரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

நிலக்கரிச் சுரங்கங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை சீன அரசாங்கம் எடுத்துள்ள போதிலும், இன்னும் அவை உலகின் ஆபத்தான இடமாகவே காணப்படுகின்றன.

சீன நிலக்கரிச் சுரங்க விபத்து என்ற செய்திகள் தொடர்ந்து ஊடகங்களில் வந்துகொண்டுதான் இருக்கின்றன, ஆனாலும் விபத்துக்கள் குறைந்தபாடில்லலை. அதற்குக் காரணம் அதிகரித்த இலாபத்தை அடைந்து கொள்ளும் நோக்கில் நிலக்கரிச் சுரங்க உரிமையாளர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை சரியாகப் பின்பற்றாமையாகும்.

உத்தியோகபூர்வ கணக்கீட்டின்படி, சீனாவில் நிலக்கரிச் சுரங்க விபத்துக்களால் 1,000 இற்கும் குறைவானோரே உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைத்துக் கூறப்பட்டுள்ளதாகவும், உண்மையில் அந்த எண்ணிக்கை அதிகமானது எனவும் மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன.

LEAVE A REPLY