கண்களின்றிப் பிறந்த சீனக் குழந்தை

0
378

-எம்.ஐ.அப்துல் நஸார்-

சீனாவின் குஅன்குஸு பிரதேசத்தில் பெண்ணொருவருக்கு இரு கண்களுமின்றி ஆண் குழந்தையொன்று பிறந்துள்ளது.

இந்த நிலையினை ‘அனோப்தல்மியா’ எனக் கூறப்படும். ஒரு இலட்சம் குழந்தைகளுள் ஒரு குழந்தைக்கே இவ்வாறான அபூர்வ நிலைமை தோன்றுவதாகவும், இந்தக் குழந்தைக்கு வாழ்நாளில் பார்க்கும் சக்தியைப் பெறுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை எனவும் தேசிய சுகாதார சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 20ஆந் திகதி லியு பெய்ஹுஆ என்ற பெண்ணே இக் குழந்தையைப் பிரசவித்தார்.

குழந்தையினை முழுமையாகப் பரிசோதித்து பூரணமான அறிக்கையினைப் பெறுவதற்காக குஅன்குஸுவிலுள்ள பெரிய வைத்திசாலைக்கு லியு பெய்ஹுஆ தனது மகனைக் கொண்டு சென்றதாக மக்கள் தினசரி இணையத்தளம் தெரிவித்தது.

கண்களின்றி குழந்தை பிறந்த தகவல் சீனாவின் பிரதானமான ஊடகங்களில் வெளியாளதையடுத்து ‘கண்களற்ற குழந்தை’ என ஊடகங்கள் செல்லப் பெயர் சூட்டியுள்ளன

எமது குழந்தைக்கு அனைத்து விதமான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் எமக்கு ஆறுதலளிக்கக்கூடிய எவ்வித பெறுபேறும் கிடைக்கவில்லை என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

கர்ப்பமுற்றிருக்கும் போது மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனை மற்றும் நேரடிப் பரிசோதனைகளில் கருவில் இருக்கும் குழந்தை ‘அனோப்தல்மியா’ வினால் பாதிக்கபட்டுள்ளது என கண்டறியப்படவில்லை.

குஅன்குஸுவிலுள்ள பெரிய வைத்திசாலை குழந்தைக்கு வேறு ஏதேனும் ஆரோக்கியப் பிரச்சினைகள் உள்ளனவா என்பதை பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

குழந்தையின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு தர்ம ஸ்தாபனங்களின் உதவியினை குழந்தையின் குடும்பத்தினர் நாடியுள்ளனர்.

எங்களது குழந்தை ஏனைய குழந்தைகளைப்போல் பாலுக்காக அழுகின்றான், கைகளை நீட்டுகின்றான் என அவர்கள் கூறுகின்றனர்.

‘எனது மகன் கண்கள் இல்லாமல் பிறந்திருக்கும் தகவலை கேட்டவுடன் மிகவும் அதிர்சியடைந்தேன். ஆனால் எதிர்காலத்தில் எனது குடும்பம் எந்தத் தடைகளை எதிர்நோக்கினாலும் பரவாயில்லை, அவனை வளர்த்தெடுப்பதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளேன்’ என லியு பெய்ஹுஆ தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் ‘அனோப்தல்மியா’ என்ற இந்த குறைபாட்டுக்கு சிகிச்சைகள் ஏதும் இல்லை, ஆனால் கண்கள் இருக்க வேண்டிய எலும்புகளுக்கிடையே செயற்கைக் கண்களைப் பொருத்த முடியும்

எக்ஸ்ரே கதிர்கள், இரசாயனம், மருந்துப் பொருட்கள், கிருமி நாசினிகள், நச்சுப் பொருட்கள், கதிர் வீச்சு என்பனவற்றிக்கு உட்படுவதால் ‘அனோப்தல்மியா’ குறைபாட்டுடன் பிள்ளைகள் பிறப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் அந்த ஆய்வுகள் இதுவரை முற்றுப் பெறவில்லை.

LEAVE A REPLY