புசல்லாவை பொலிஸ் தடுப்பில் உயிரிழந்த ரவி மரணம் சாா் பாக மனித உரிமை மனு சமா்ப்பிப்பு

0
62

(அஷ்ரப் ஏ சமத்)

புஸல்லாவை பொலிஸ் தடுப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த நடராஜா ரவிச்சந்திரனின் மரணம் தொடர்பாக நீதி கேட்டு இன்று(28) மலையக ஆய்வு மையம் பொரளையில் உள்ள மனித உரிமை ஆனைக்குழுவிடம் மனுவை கையளித்த்து.

மலையக ஆய்வு மையத்தின் இணைப்பாளராகப் பணிபுரியும் வண.மா. சகத்திவேல் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து இம் மனுவை ஆணையாளரிடம் கையளித்தனர்.

இம் மனு சம்பந்தமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வண. மா சக்திவேல்,

நீதிமன்ற உத்தரவுக்கமைய 2016.09.17ஆம் திகதி கைது செய்யப்பட்டு புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தின் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த நடராஜா ரவிச்சந்திரன் 2016.09.17ஆம் திகதி இரவு தனது ரீசேர்ட்டைப் பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இச்சம்பவம் மனித உரிமை ஆர்வலர்களை மட்டுமன்றி நாட்டு மக்கள் மத்தியிலும் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பொது மக்களை பாதுகாக்க வேண்டிய பொலிஸ் நிலையத்திற்குள்ளே இவ்வாறானதோர் சம்பவம் இடம்பெற்றமை பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இலங்கையின் சட்டத்தின் ஆட்சி ரவிச்சந்திரன் சம்பவத்தில் தெளிவாகியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் அனுமதியின்றி கள் வைத்திருந்த குற்றத்திற்காக ரவிச்சந்திரன் புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டிருந்தார். தண்டனையாக பொது வேலையில் ஈடுபடுமாறு நீதிபதியால் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், அதை மீறிய குற்றத்திற்காக மீண்டும் நடராஜா ரவிச்சந்திரன் கடந்த 17ஆம் திகதி கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அடுத்த நாள் (2016.09.18) காலை ரவிச்சந்திரன் புஸ்ஸல்லாவை வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்தார் என அவரது குடும்பத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது. சிறையினுள் தான் அணிந்திருந்த ரீசேர்ட்டைக் கொண்டு தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ரவிச்சந்திரன் கைதுசெய்யப்படும்போது பொலிஸாரால் தாக்கப்பட்டார் என்று உறவினர்கள் கூறுகிறார்கள். அத்தோடு, பொலிஸ் நிலையத்தில் வைத்தும் தாக்கப்பட்டதை தான் கண்டதாக ரவிச்சந்திரனின் சகோதரர் கூறுகிறார். பொலிஸார் நடத்திய தாக்குதலினால்தான் ரவிச்சந்திரன் கொல்லப்பட்டுள்ளார் என அவரது உறவினர்கள் தற்போது குற்றம் சுமத்துகிறார்கள்.

இதனைக் கண்டித்து புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையம் முன்பாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்றிரவே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் தலைமையகத்தால் இரு பொலிஸ் அதிகாரிகள் (ரவிச்சந்திரன் தூக்கிலிட்டு உயிரிழந்ததாகக் கூறும் 18ஆம் திகதி இரவு கடமையில் இருந்தவர்கள்) இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.

மலையக சமூக ஆய்வு மையத்தைப் பொறுத்தவரை, சுயாதீனமான ஒரு விசாரணை குழுவை ஏற்படுத்தி விசாரணை துரிதப்படுத்தப்படல் வேண்டும். நடராஜா ரவிச்சந்திரனின் உயிரிழந்தமையுடன் தொடர்புடைய புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உட்பட அனைத்து சிரேஷ்ட அதிகாரிகளும் விசாரணை முடியும் வரை இடைநீக்கம் செய்யப்படவேண்டும்.

நடராஜா ரவிச்சந்திரனின் உறவினர்களுக்கு முக்கியமாக குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கப்படல்வேண்டும்.

தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக கூறப்படுகின்ற நடராஜா ரவிச்சந்திரனின் உடலை விரிவான தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும், அதனை சுயாதீனமான சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் மேற்கொள்ளவேண்டும் என்பதேயாகும். மேலும், அவர் கைதுசெய்யப்படும் போதும், சிறைச்சாலையினுள்ளும் தாக்கப்பட்டிருந்தால் அதனையும் தடயவியல் பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முடியும் என்பதே எமது கருத்து. நடராஜா ரவிச்சந்திரனின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படல்வேண்டும்.

LEAVE A REPLY