ஜோர்தானிய எழுத்தாளர் படுகொலையின் எதிரொலி – அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டம், சடலத்தை பொறுப்பேற்பதற்கும் குடும்பத்தினர் மறுப்பு

0
151

எம்.ஐ.அப்துல் நஸார்-

ஜோர்தானின் அம்மானிலுள்ள நீதிமன்ற வாயிலில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்தினையடுத்து அரசாங்கத்திற்கு எதிராக எழுத்தாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த திங்கட்கிழமை (26) நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டதின் போது படுகொலை செய்யப்பட்ட கிறிஸ்தவ ஜோர்தானிய எழுத்தாளர் நாஹெட் ஹாட்டாரை காப்பாற்றத் தவறிய ஜோர்தானிய அரசாங்கம் பதவி விலகவேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

‘அரசாங்கம் பதவி விலகுவதை மக்கள் விரும்புகின்றனர், பாதுகாப்பு இல்லை, அவர்கள் நாஹெட்டை அம்மானில் வைத்து கொன்று விட்டனர்’ போன்ற சுலோக அட்டைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.

நூற்றுக்கணக்கான அனுதாபிகளும், எழுத்தாளர் அமைப்பின் அங்கத்தவர்களும் பிரதமர் அலுவலகத்திற்கு முன்னால் குழுமி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹட்டாருக்கு உயிர் அச்சுறுத்தில் இருக்கிறது என அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியிருந்த போதிலும், அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டனர் எனக் குற்றம் சாட்டும் குடும்பத்தினர், அடக்கத்திற்காக அவரது உடலை பொறுப்பேற்பதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாத்திற்கு எதிரான கார்டூன் தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்கொள்வதற்காக நீதிமன்றத்திற்கு வந்த ஹட்டார் படுகொலை செய்யப்பட்ட மறுநாள் ஊடகங்கள் குறித்த படுகொலை தொடர்பான செய்திகளை இருட்டடிப்புச் செய்ததாக ஜோர்தானிய நீதித்துறை கடும் விசனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ‘விசாரணையின் இரகசியத் தன்மையயைப்’ பாதுகாப்பதற்காகவே இது தொடர்பான தகவல்கள் சமூக ஊடகங்கள் மற்றும் பாரம்பரிய ஊடகங்கள் ஆகியவற்றின் வாயிலாக தகவல்கள் வெளியிடப்படவில்லை என தகவல்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமையன்று வீதியில் நாஹெட் ஹாட்டாரின் உருவப்படத்தை ஏந்தி நின்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் ஹானி அல்-மலிகி மற்றும் உட்துறை அமைச்சர் ஸலாமா ஹம்மாட் ஆகிய இருவரும் தமது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

‘எழுத்தாளருக்கு அச்சுறுத்தல் விடுத்த 200 இற்கும் மேற்பட்டோரின் பெயர்ப்பட்டியலொன்றை அம்மான் ஆளுநரிடம் கையளித்துள்ளதோடு பாதுகாப்பையும் கோரியுள்ளோம்’ என கொல்லப்பட்டவரின் சகோதரர்களுள் ஒருவரான கஹாலிட் ஹட்டார் தெரிவித்தார்.

‘ஆனால், உண்மையில் அச்சுறுத்தல் காணப்படுகின்றதா? ‘ என்பது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்க மறுத்து விட்டார்.

அப்டலி மாவட்டத்தில் துப்பாக்கிதாரியினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக மூன்று துப்பாக்கி ரவைகள் ஹட்டாரினைத் தாக்கியிருந்தன. சம்பவ இடத்திலேயே துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டதாக அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கிதாரி ஜோர்டானைச் சேர்ந்த 49 வயது நபர் எனவும், அவரே பொலிஸாரிடம் சரணடைந்ததாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY