தெற்கில் வாசுவும் வடக்கில் விக்கியும் இனவாதத்தை தூண்டுகின்றனர்

0
169

எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தனும் அமைச்சர் மனோ கணேசனும் தமிழர்களே. ஆனால், அவர்கள் இந்த நாட்டில் இனவாதத்தை தூண்டவில்லை. தெற்கில் வாசுதேவ நாணயக்காரவும், வடக்கில் முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் முழு நாட்டிலும் இனவாதத்தை தூண்டும் விதத்தில் செயல்பட்டுக்கொண்டிருப்பதாக குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார நேற்றுத் தெரிவித்திருக்கிறார்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு அவர் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

இனவாதத்தை முற்றாகப் புறந்தள்ளி அனைவரும் ஒன்றுபட்டு இனங்களுக்கு அன்பு செலுத்தும் ஒரு தேசத்தையே நாம் கட்டியெழுப்ப வேண்டும். கொள்ளையர்களால் நாடு சூறையாடப்பட்ட கடந்தகாலம் போன்று மீண்டும் இந்த நாட்டில் அவ்வாறான ஒரு வாய்ப்புக்கு இடமளிக்கக் கூடாது.

காலத்துக்குக் காலம் பயன்படுத்தப்படும் சுலோகங்களை வைத்துக்கொண்டு மக்களை பிளவுபடுத்த முனையக்கூடாது. அவ்வாறானதொரு சுலோகத்தையே விக்கினேஸ்வரனால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தமிழ் மக்களை எழுந்திருக்குமாறு கூறும் விக்கினேஸ்வரனின் கருத்து மறைவாக இனவாதத்தையே வெளிக்காட்டுகின்றது. இதனை எந்தவிதத்திலும் அனுமதிக்க முடியாது.

சிங்கள இனவாதத்தை பரப்புவது போன்று தமிழ் இனவாதத்தை பரப்புவோரும் இந்த நாட்டில் இருக்கின்றார்கள். எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் அமைச்சர் மனோ கணேசன் போன்றவர்கள் தமிழர்கள்தான். ஆனால், அவர்கள் ஒருபோதும் இனவாதத்தை தூண்டுவதற்கு வாய்ப்பளிக்கவுமில்லை, செயற்படவுமில்லை.

விக்கினேஸ்வரன் என்பவர் வாசுதேவநாணயக்காரவின் சம்மந்தியாவார். அவர்கள் இருவரும் கோப்பி அருந்திக்கொண்டு இரவில் இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகளுக்கு சதித்திட்டமிடுகின்றனர். விக்கினேஸ்வரன், வாசுதேவ, உதய கம்மன்பில ஆகியோர் இணைந்து முன்னெடுக்கின்ற இனவாதத்துக்கு புதிய முகம் கொடுக்க முடியும்.

அதுதான் இவர்கள் மூவரதும் இணைப்பானது அவர்கள் எதிர்பார்ப்பது போன்று பெறுமதிவாய்ந்ததல்ல. வெறும் பூச்சியமே. விக்கினேஸ்வரனும் வாசுதேவவும் இணைந்து வடக்கிலும் தெற்கிலும் இனவாதத்தை தூண்டுவதற்கு சதித் திட்டமிடுகின்றனர். இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

Source: Thinakaran

LEAVE A REPLY