தவறான நோய் நிருணயத்தால் 43 ஆண்டு காலத்தை சக்கர நாற்காலியில் கழித்த நபர்

0
283

-எம்.ஐ.அப்துல் நஸார்-

போர்சுகல் நாட்டைச் சேர்ந்த நபரொருவர் தவறான நோய் நிருணயம் காரணமாக 43 ஆண்டு காலத்தை சக்கர நாற்காலியில் கழித்துள்ளதோடு, தற்போது ஐம்பதுகளைத் தாண்டிய வயதில் நடப்பதற்குப் பழகிக்கொண்டிருப்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) செய்தித்தாழொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ரூபினோ பொரிகோ என்ற நபருக்கு அவரது 13ஆவது வயதில் குணப்படுத்த முடியாத தசை வலுவிழப்பு நோய் ஏற்பட்டுள்ளதாக லிஸ்பன் வைத்தியசாலையினால் நோய் நிருணயம் செய்யப்பட்டதாக ஜேர்னல் டி நொடிசியஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அதன் பின்னர் நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமாக, 2010ஆம் ஆண்டு நரம்பியல் நிபுணரொருவரால் இவரது தசைகள் வலுவிழப்பதற்கு ‘மையஸ்டேனியா’ என்ற தசைப் பலவீனமே காரணம் என கண்டறியப்படும் வரை அவர் சக்கர நாற்காலியினையே பயன்படுத்தி வந்தார்.

இந்த அரிதான நோய் ஆஸ்துமா நோய்கான மருந்துகளைப் பயன்படுத்தியதன் மூலம் இலகுவாக குணப்படுத்தப்பட்டது. புதிய நோய்நிருணயம் செய்யப்பட்டு ஒரு வருடத்தில் ரூபினோ பொரிகோ, அவர் வழக்கமாகச் செல்லும் அருகிலுள்ள தேனீர்க்கடைக்கு நடந்தே சென்றார்.

‘இது மிகவும் ஆச்சரியப்படத்தக்க விடயம்’ என போர்சுகலின் தென்கிழக்கே அலன்ட்டெயல் பிரதேசத்தில் அமைந்துள்ள தேனீர்க்கடை உரிமையாளரான மானுயெல் மெலானோ அந்த செய்தித்தாளுக்கு தெரிவித்தார்.

தற்போது ரூபினோ பொரிகோவிற்கு வயது 61. அவர் வருடமொன்றிற்கு இரண்டு தடவைகள் மாத்திரம் உடற்பயிற்சி மருத்துவ சிகிச்சையினை பெற்றுக்கொண்டு இயல்பு வாழ்க்கையினைத் தொடர்கின்றார்.

‘தவறான நோய் நிருணயம் செய்த வைத்தியசாலையின்மீது எனக்கு எவ்வித கோபமும் இல்லை’ எனத் தெரிவித்த ரூபினோ பொரிகோ, ‘1960களில் மருத்துவத்துறையில் ‘மையஸ்டேனியா’ என்ற வியாதி அறியப்படாத ஒன்றாகவே இருந்தது’ எனவும் தெரிவித்தார்.

‘இனி எனது வாழ்க்கையினை சிறந்த முறையில் பயன்படுத்தப்போகிறேன்’ என மகிழ்வுடன் தெரிவித்தார் ரூபினோ பொரிகோ

LEAVE A REPLY