நீதிமன்ற முன்றலில் எழுத்தாளர் சுட்டுக்கொலை – ஜோர்தானில் சம்பவம்

0
172

-எம்.ஐ.அப்துல் நஸார்-

ஜோர்தானின் முன்னணி எழுத்தாளரான நாஹெட் ஹட்டார் இஸ்லாத்தை கொச்சைப்படுத்தும் வகையில் கேலிச் சித்திரமொன்றை பகிர்ந்துகொண்ட குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டிருந்த நிலையில் துப்பாக்கிதாரியொருவரினால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அரசாங்க செய்தி முகவர் நிறுவனமான பெட்றா தெரிவித்துள்ளது.

ஹட்டார் மீது மூன்று துப்பாக்கி ரவைகள் பாய்ந்திருந்ததாகவும், துப்பாக்கிதாரி ஞாயிற்றுக்கிழமையன்று கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பெட்றா தெரிவித்துள்ளது. ஜோர்தான் – அம்மானின் அப்டலி மாவட்டத்தில் அமைந்துள்ள நீதிமன்றத்தின் முன்றலில் துப்பாக்கிதாரி சரமாரியாக துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

தாடி வைத்த நபர் பரலோகத்தல் பெண்களுடன் அமர்ந்து புகைத்துக்கொண்டு தனக்கு மதுவும் முந்திரிப் பருப்பும் தருமாறு கடவுளைக் கேட்பது போன்ற கேலிச் சித்திரமொன்றைப் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து 56 வயது கிறிஸ்தவரான இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆந் திகதி கைது செய்யப்பட்டார்.

அந்தக் கேலிச் சித்திரத்தை யார் வரைந்தார் என்று இது வரை தெரியவரவில்லை.

அதிகமான ஜோர்தானிய முஸ்லிம்கள் அந்த கேலிச் சித்திரம் தமது மனதைப் புண்படுத்துவதாகவும், தமது சமயத்திற்கு எதிரானது எனவும் கருதுகின்றனர். அந்தக் கேலிச் சித்திரத்தை பரவலாக பகிர்ந்துகொண்டதன் மூலம் ஹட்டார் சட்டத்தை மீறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மதங்களுக்கிடையில் முறுகலையும் இஸ்லாத்தை கொச்சைப்படுத்தும் வகையிலும் அவர் நடந்து கொண்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் மாத முற்பகுதியில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மனதைப் புண்படுத்தும் நோக்கில் பிரசுரிக்கப்படவில்லை.

வேண்டுமென்றே முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் நோக்கில் இது பிரசுரிக்கப்பட்டதாக கேலிச் சித்திரம் பிரசுரிக்கப்பட்டவுடனேயே ஜோர்தானின் சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் எழுத்தளருக்கு எதிரான கருத்துக்கனை பதிவு செய்ய ஆரம்பித்தனர்.

உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டுமென சமூக ஊடக பயன்பாட்டாளர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டதேடு ஹட்டார் மீது கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தனர்.

குறித்த கேலிச் சித்திரத்தை பகிர்ந்து கொண்டது முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் நோக்கில் அல்ல எனவும், ஈராக்கிலுள்ள ஐ.எஸ் அமைப்பு மற்றும் இஸ்ஸாமிய சகோதரத்துவ அமைப்பு ஆகியவற்றின் செயற்பாடுகளை ‘வெளிப்படுதத்துவதற்காகவே’அதனை பகிர்ந்ததாகவும் ஹட்டார் தெரிவித்தார்.

‘விசுவாசிகளை நான் புண்படுத்தவில்லை. மாறாக ஐ.எஸ் அமைப்பு மற்றும் இஸ்ஸாமிய சகோதரத்துவ அமைப்பு ஆகியன கடவுளையும் சுவர்க்கத்தையும் எவ்வாறு தவறாக புரிந்து கொண்டுள்ளன என்பதை வெளிப்படுத்துவதே எனது நோக்கமாக இருந்தது’ என தனது விளக்கத்தை முன்வைத்தார் ஹட்டார். ஹட்டார் முன்வைத்த இரண்டாவது விளக்கத்தில் ‘விசுவாசியல்லாத நான் கார்டூனின் மறைந்துள்ள கருத்தை புரிந்து கொள்ளாத விசுவாசிகளை மதிப்பதாகவும்’ தெரிவித்திருந்தார்.

ஹட்டார் முன்வைத்த விளக்கத்தைத் தொடர்ந்து ஜோர்தானின் முஸ்லிம் சகோதரத்துவக் குழு அறிக்கையொன்றை வெளியிட்டு தேசிய ஐக்கியத்தை கருத்திலெடுக்காது இவ்வாறான தேசத் துரோக ஆவணங்களைப் பிரசுரிப்போர் மீது அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டது.

அண்டை நாடுகளான ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான சண்டையில் ஈடுபட்டு வரும் அமெரிக்கக் கூட்டணியின் முன்னணி உறுப்பு நாடாக ஜோர்தான் காணப்படுவதால் ஜுன் 21 ஆந் திகதி தற்கொலைத் தாக்குதலில் ஜோர்தான் இலக்கு வைக்கப்பட்டதோடு அந்தத் தாக்குதலில் எல்லைக் காவல் படையினர் 7 பேர் கொல்லப்பட்டனர்.

ஜோர்தான் ஐ.எஸ் அமைப்புக்கெதிரான வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதோடு கூட்டுப் படையினருக்கு தனது நாட்டில் தங்குவதற்கு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

பெரிய தவறு

‘இந்த ஒட்டு மொத்த சர்ச்சையும் அரசியல் நோக்கம் கொண்டதாக ஹட்டாரினால் உருவாக்கப்பட்டதோடு, அவரின் எதிராளிகள் அவரைப் பழிவாங்குவதற்கு இந்த சர்ச்சையினை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்’ என ஹட்டார் கைது செய்யப்பட்டதன் பின்னர் ஜோர்தானிய எழுத்தாளரான பஹட் அல்-ஹைத்தான் அல்-ஜெஸீராவுக்குத் தெரிவித்தார். ஹட்டாரை ‘முட்டாள்’ என வருணித்த ஹைத்தான், அவர் ‘மிகப்பெரும் தவறொன்றை’ செய்துள்ளதாக தெரிவித்தார்.

ஹட்டார் சிரிய ஜனாதிபதி பசீர் அல்-அசாத்திற்கு ஆதரவாக வெளிப்படையாகப் பேசும் ஒருவர். அசாத்தின் அரசாங்கத்திற்கு எதிரான அனைவரையும் ‘பயங்கரவாதிகள்’ அல்லது ‘பயங்கரவாத அனுதாபிகள்’ என அவர் வருணித்தார்

ஜோர்தானில் பிற்படுத்தப்பட்டுவரும் பலஸ்தீனத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜோர்தானியர்களின் சட்ட மற்றும் சிவில் உரிமைகளுக்காக ஹட்டார் குரல் கொடுத்து வந்துள்ளார்.

பலஸ்தீனக் கூறுகளற்ற பிரத்தியேகமான கிழக்குக் கரை ஜோர்தானிய அடையாளத்தை அவர் கோரி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY