மாகாண சபை உறுப்பினரை சுற்றிவளைத்த வாழைச்சேனை பாடசாலை மாணவிகள்

0
611

( Riyas Aatham)

unnamedமட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை ஆயிஷா மகளிர் கல்லூரிக்கு இன்று (26) காலை தளபாடங்கள் கையளிப்பதற்காகச் சென்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபையிர் அக்கல்லூரி மாணவிகளால் சுற்றிவளைக்கப்பட்டார். க.பொ.த உயர் தரம் கலைப்பிரிவில் கல்வி பயிலும் 1ஆம், 2ஆம் வருட வகுப்புக்களைச் சேர்ந்த சுமார் 40 மாணவிகளே இச்சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மாதகாலமாக அரசியல் விஞ்ஞானத்துறை பாடம் தங்களுக்கு கற்பிக்கவில்லை எனவும் தங்களுக்கு அப்பாடத்தினை கற்பித்த ஆசிரியரை எந்தவிதமான பதிலீடுமின்றி முதலமைச்சர் தனது அதிகாரத்தினைப் பயன் படுத்தி விடுவித்துள்ளதாகவும், சுதந்திரமாக தங்களது கல்வியை தொடர வழியேற்படுத்தித் தருமாறும் கோரியே மாணவிகள் மாகாண சபை உறுப்பினரை வழிமறித்து சுற்றிவளைத்தனர்.

இதுதொடர்பில் கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபையிர் தான் இந்த விடயமாக அறிந்திருக்கவில்லை என்றும் எனது நிதியொதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட தளபாடங்களை இப்பாடசாலைக்கு வழங்குவதற்காகவே நான் இங்கு வந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் உயர்தரப்பிரிவில் பயிலும் மாணவிகளுக்கு ஆசிரியரின்றி ஒருமாத காலமாக அரசியல் விஞ்ஞானத்துறை பாடம் கற்பிக்கப்படாமை கவலையளிப்பதாகவும், இதுதொடர்பில் கவனத்திற்கொண்டு கல்வி அமைச்சர் மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளரை தொடர்பு கொண்டு தீர்வொன்றினை பெற்றுத்தருவதற்கு முயற்ச்சிப்பேன் எனவும் கூறி அவ்விடத்திலிருந்து விடைபெற்றார்.

LEAVE A REPLY