இனியொரு யுத்தமில்லை. ஆனால் …

0
495

tna-sampanthar(எம்.ஐ.முபாறக்)

வடக்கு-கிழக்கு தமிழர்களின் போராட்டத்தை 30 வருட ஜனநாயகப் போராட்டம், 30 வருட ஆயுதப் போராட்டம் மற்றும் மீண்டும் இப்போது ஜனநாயகப் போராட்டம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

ஆரம்பத்தில் தமிழர்கள் முன்னெடுத்த ஜனநாயகப் போராட்டம் சிங்கள ஆட்சியாளர்களால் நசுக்கப்பபட்டதால் தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தைத் தேர்ந்தெடுத்தனர். அதுவும் நசுக்கப்பட்டதால் மீன்டும் அவர்கள் ஜனநாயகப் போராட்டத்துக்குத் திரும்பியுள்ளனர்.

மொத்தத்தில் தங்களது உரிமைகளை அடையும்வரை அவர்கள் போராடிக்கொண்டே இருப்பார்கள் என்பது தெளிவாகின்றது. முதல் இரண்டு போராட்டங்களுக்கும் ஆட்சியாளர்கள் உரிய பதிலை வழங்காதபோதிலும் தற்போதைய ஜனநாயகப் போராட்டத்துக்கு இப்போதைய ஆட்சியாளர்கள் செவி சாய்க்கத் தொடங்கியுள்ளனர்.

சிங்கள அரசைத் தீர்மானிக்கும் சக்தியை தமிழர்கள் தங்களுக்குள் கட்டியெழுப்பியமையே இதற்கு காரணம். இதனால்-தங்களின் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதனால் தமிழருக்கு ஏதாவது கொடுத்தே ஆக வேண்டும் என்ற இக்கட்டு நிலைக்கு அரசு இப்போது தள்ளப்பட்டுள்ளது.

ஆட்சி மற்றம் ஏற்பட்டதும் தமிழருக்கான அரசியல் தீர்வு விடயத்தில் புதிய அரசு கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. அதற்கு ஏற்ப புதிய அரசமைப்பும் கொண்டு வரப்படவுள்ளது. அதன் முதல் கட்டப் பணிகளும் நிறைவடைந்துள்ளன.

அந்த அரசியல் தீர்வை வழங்குவதன் மூலம்தான் இந்த நாட்டில் ஸ்தீரத்தன்மையைக் கட்டியெழுப்ப முடியும் என்பது யதார்த்தமாகும். அரசு விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அரசியல் தீர்வை முன்வைத்தே ஆகவேண்டும்.

இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதை எவரும் விரும்பவில்லை. இந்த ஆட்சியாளர்களும் விரும்பவில்லை. இனியொரு யுத்தம் ஏற்பட்டால் இந்த நாடு மீண்டும் சீரழிந்துவிடும் என்று இவர்கள் நினைக்கின்றனர். இந்த நினைப்பைத்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா பொதுச் சபையின் 77 ஆவது கூட்டத் தொடரில் நேற்று முன்தினம் பிரதிபலிக்கச் செய்துள்ளார்.

மீண்டும் யுத்தம் ஏற்பட்டால் இந்த நாடு அழிந்துவிடும் என்று கடந்த கால அனுபவத்தை வைத்தே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார் எனலாம். ஆனால், யுத்தம் ஏற்பட்டால் மாத்திரம்தான் இந்த நாடு சீரழியும் என நினைப்பது தவறாகும். தமிழருக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள்-தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் யுத்தம் இல்லாமலேயே இந்த நாடு சீரழியும் என்பதை ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

30 வருட யுத்தத்தால் இந்த நாடு சீரழிந்தது உண்மைதான். அந்த யுத்தத்தை மஹிந்த முடித்து வைத்தபோது இனி இந்த நாடு முன்னேறிவிடும்-அழிவில் இருந்து தப்பிவிடும் என்று எல்லோரும் நினைத்தனர். அந்த நினைப்பு பலித்ததா?

யுத்தம் முடிந்த பின்னர் தமிழர்கள் ஜனநாயகப் போராட்டம் என்ற ஒன்றைத் தேர்ந்தெடுத்தனர்.அது யுத்தத்தை விடவும் மோசமான விளைவுகளை மஹிந்தவுக்கு ஏற்படுத்தியது. மஹிந்தவின் அரசு-இந்த நாடு சர்வதேசத்தில் இறுகி நின்றமைக்கும் வெளிநாட்டு முதலீடுகள் தடைப்பட்டு நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டமைக்கும் காரணம் தமிழர்களின் பிரச்சினை யுத்த முடிந்த பின்னரான காலத்தில் அதிகம் அதிகமாக சர்வதேசமயப்படுத்தப்பட்டமைதான்.

யுத்தம் முடிந்தபோதிலும் இந்த நாட்டில் நீதி இல்லை;ஜனநாயகம் செத்துவிட்டது; மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்று சர்வதேசத்தில் அதிகமாக பிரசாரம் செய்யப்பட்டது. அதன் விளைவாக முதலீட்டாளர்கள் இலங்கை வருவதற்கு மறுத்தது மாத்திரமன்றி மஹிந்த அரசு யுத்தக் குற்ற விசாரணை, மனித உரிமை மீறல்கள் என்று மேலும் பல தலையிடிகளையும் எதிர்கொள்ளத் தொடங்கியது.

ஒப்பீட்டளவில் யுத்தம் முடிந்த காலத்தை விடவும் யுத்தத்துக்குப் பின்னரான காலப் பகுதியில்தான் மஹிந்த அரசு பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டது. இதற்கு காரணம் யுத்தத்துக்குப் பின்னரான தமிழர்களின் ஜனநாயகப் போராட்டம்தான்.

யுத்தத்தால் கவிழ்க்கமுடியாமல் போன மஹிந்த அரசை இந்த ஜனநாயகப் போராட்டம்தான் கவிழ்த்தது என்ற உண்மையை ஏற்றுக்கொண்டால் யுத்தத்தை விடவும் பயங்கரமானது இந்த ஜனநாயகப் போராட்டம் என்பதை உணரலாம்.

யுத்தம் என்பது முன், பின் விளைவுகள்பற்றி யோசிக்காது குடித்துவிட்டுச் சண்டையிடும் சண்டியன் போன்றது. ஆனால், ஜனநாயகப் போராட்டம் என்பது பல வருடங்களாக வாழ்ந்து வரும் ஆலமரத்தை அடியோடு சாய்க்கும் விஷம் போன்றது; தூர நோக்கம் கொண்டது.

ஒரு சண்டியனுடன் மோதுவதற்கும் ஒரு இராஜதந்திரியுடன் மோதுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இந்த இரண்டிலும் இராஜதந்திரம்தான் பலம்வாய்ந்தது.

ஆகவே, இந்த யதார்த்தத்தை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும். மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாமல் ஆயுதரீதியாக ஏற்பாடுகளை செய்வது இலகுவான விடயம். அந்த ஏற்பாட்டின் மூலம் நாடு அழிவில் இருந்து தப்பிவிட்டது என்று அர்த்தம்கொள்ள முடியாது. அந்த யுத்தத்தை விடவும் ஜனநாயகப் போராட்டத்தை நிறுத்துவதன்மூலம்தான் நாட்டை அழிவில் இருந்து பாதுகாக்கலாம்.

தமிழர்களின் மிக பயங்கரமான இந்த ஜனநாயகப் போராட்டத்தை தடுத்து நிறுத்தும் ஓர் ஆயுதம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரசியல் தீர்வுதான். அந்த அரசியல் தீர்வு உரிய முறையில் வழங்கப்படவில்லையென்றால் அவர்களின் அந்த ஜனநாயகப் போராட்டம் மேலும் வலுக்கும். அது மஹிந்த அரசைக் கவிழ்த்தது போன்றொரு பாதகத்தன்மையை மைத்திரி-ரணில் அரசுக்கும் ஏற்படுத்திவிடும்.

யுத்தம் ஒன்று இல்லாத நிலைமையை இந்த நாட்டுக்கும் உலகிற்கும் காட்டுவதில் இந்தப் பயனும் இல்லை. யுத்த மனோநிலையில் இருந்து தமிழர்களை விடுவிக்க வேண்டும்; ஜனநாயகப் போராட்டத்தில் இருந்து அவர்களை அகற்ற வேண்டும்.

அரசியல் தீர்வு முயற்சிகள் மாத்திரமன்றி அதனுடன் இணைந்ததான அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் காணிகள் விடுவிப்பு போன்றவை மீதும் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அரசியல் தீர்வுக்கு முன்னதாக இந்தப் பிரச்சினைகள் அனைத்துக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும்.

இந்த எல்லாப் பிரச்சினைகளுக்கும் தமிழர்கள் சர்வதேசத்தின் ஊடாகவே தீர்வை எதிர்பார்ப்பது இந்த நல்லாட்சிக்கு நல்லதல்ல. இந்தப் பிரச்சினைகளை மேலும் இழுத்தடிப்பதற்கு நியாயமான காரணங்கள் எவையும் இல்லை என்பதையும் அரசு உணர வேண்டும்.

அரசு நினைத்தால் எல்லாப் பிரச்சினைகளையும் உடன் தீர்க்க முடியும் என்பதற்கு ஆட்சி மாற்றத்தின் பின் நிகழ்த்தப்பட்ட சில நிகழ்வுகள் சிறந்த உதாரணமாகும்.

LEAVE A REPLY