மாவட்டத்தில் அதிகம் குற்றச் செயல்கள் இடம்பெறுகின்ற இரண்டாவது பொலிஸ் பிரிவாக ஏறாவூர் உள்ளது

0
865

மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தினேஸ் கருணானாயக்க

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ssp-dinesh-karunanayake“மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகம் குற்றச் செயல்கள் இடம்பெறுகின்ற இரண்டாவது பொலிஸ் பிரிவாக ஏறாவூர் உள்ளது. இதனை குற்றச் செயல்கள் அறவே இடம்பெறாத இடமாக மாற்ற வேண்டும்” என மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தினேஸ் கருணானாயக்க பிரதேச பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

பொலிஸ் சேவையின் 150வது வருடத்தை சிறப்பிக்குமுகமாக ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை கணேசா வித்தியாலயத்தில் இன்று (25) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இடம்பெயர் சேவையை ஆரம்பித்து வைத்து அவர் உரையாற்றினார்.

ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அங்கு சமூக ஆர்வலர்கள், ஊர்ப்பிரமுகர்கள் மத்தியில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தினேஸ் கருணானாயக்களூ பிரதேசங்களில் குற்றச் செயல்கள் அதிகரித்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை சீரழிக்கப்பட்டு விடும், அமைதி குலையும், பழிவாங்கும் உணர்வுகள் அதிகரிக்கும். அதனால் அழிவுகள் எற்படும்.

குற்றச் செயல்களை ஒரு போதும் சமூகத்திலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது, சமூகத்தில் அங்கமாக இருக்கின்ற ஒருவரோ, இருவரோ அல்லது குழுக்களோதான் எல்லா வகையான குற்றச் செயல்களையும் புரிந்து வருகின்றார்கள்.

எனவே, இந்த விடயத்தில் சமூகம் பாராமுகமாக இருந்து விட முடியாது.

பொலிஸார் பொதுமக்களின் பிரச்சினைகளையும் குறைநிறைகளையும் அறிந்து கொள்ள வேண்டும். அதேபோல் பொதுமக்கள் பொலிஸாருடன் மிக நெருக்கமான நல்லுறவைப் பேணுவதன் மூலம் குற்றச் செயல்களை இருசாராருமாக இணைந்து ஒழிக்க முடியும்.

பொலிஸ் பொதுமக்கள் இணைந்தால் அபிவிருத்தியும் அமைதியும் ஏற்படும்.
ஏற்கெனவே குற்றச் செயல்கள் புரிந்து தண்டனை அனுபவித்து விட்டு கிராமங்களுக்கு வந்து மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களிலீபடுவோர், குற்றச் செயல்களைத் தூண்டுவோர், எதிர்காலத்தில் குற்றச் செயல்களிலீடுபடலாம் என மக்களால் சந்தேகிக்கப்படுவோர் குறித்து மக்கள் கண்ணும் கருத்துமாக இருந்து கொள்ள வேண்டும்.

அது போன்று குற்றச் செயல்களுக்கு ஆதரவாக இருக்கும் பொலிஸ் அதிகாரிகள் குறித்தும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருந்து கொண்டால் அதுபற்றியும் நாம் கடுமையான நடவடிக்கை எடுத்து குறித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்.

இந்த விடயத்திலே நீங்கள் அச்சப்பட வேண்டாம், எந்தவொரு ஊழல் புரியும் பொலிஸ் உத்தியோகத்தரையும் சட்டத்தின் முன் நிறுத்த நாம் தயங்கப் போவதில்லை.’ என்றார்.

இந்த இடம்பெயர் சேவையில் பொலிஸ் முறைப்பாடுகள், ஆளடையாள அட்டை சாரதி அனுமதிப்பத்திரம், ஆகியனவும் பதியப்பட்டதோடு, இரத்த தானம், பாடசாலை உபகரணங்கள் விநியோகம், மரக்கன்றுகள் விநியோகம், இலவச வைத்திய சேவைகள் என்பனவும் இடம்பெற்றன. ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர் உட்பட இன்னும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY