அபிவிருத்தி என்பது பெயருக்காக மாத்திரம் செய்யப்படுவதல்ல: பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

0
283

(எம்.ரீ. ஹைதர் அலி)

அபிவிருத்தி என்பது பிரயோசனம் அற்றதாக, வெறுமெனே பெயரளவில் மாத்திரம் செய்யப்படுகின்ற ஒன்றாக இருக்கக்கூடாதென்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்களின் பணிப்பின் பேரில் அவரின் பங்குபற்றுதலுடன் மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பான சந்திப்பு ஒன்று இன்று சனிக்கிழமை (24.09.2016) காத்தான்குடி அல்-ஹிரா வித்தியாலயத்தில் இடம்பெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ ZA. ஹாபீஸ் நசீர் அஹமட், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் M. ஷிப்லி பாறூக், மாகாண கல்வி பணிப்பாளர் MTA. நிசாம், மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி பணிப்பாளர் MI. சேகு அலி ஆகியோர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் காலந்து கொண்ட இக்கூட்டத்தில் காத்தான்குடி, காங்கேயனோடை, கர்பலா, பூநொச்சிமுனை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 30ற்கும் அதிகமான பாடசாலை அதிபர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தமது பாடசாலை தொடர்பான விடயங்களையும், குறைபாடுகளையும் முன்வைத்தனர்.

பாடசாலை பௌதீக வளங்கள் தொடர்பான பற்றாக்குறை, ஆசிரியர் மற்றும் ஏனைய ஆளணி பற்றாக்குறைகள், பாடசாலைகளை தரம் உயர்தல் தொடர்பான பிரச்சனைகள், மாணவர்களின் கல்வி தரத்தினை மேம்படுத்துவது தொடர்பான விடயங்கள் ஆகியன இக்கலந்துரையாடலின் போது விரிவாக ஆராயப்பட்டது.

இந்நிகழ்வின் போது தொடர்ந்து உரையாற்றிய அவர்…

காத்தான்குடி நூரானியா வித்தியாலயம் மற்றும் அல் ஹிரா பாடசாலையின் முன்புறமுள்ள கட்டிட தொகுதிகளின் அமைப்புக்கள் சரியான முறையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படாத அபிவிருத்திகளுக்கு உதாரணங்களாகும். இக்கட்டிடங்கள் ஒன்றை ஒன்று மிகவும் நெருங்கியதாகவும் மிகவும் இருளாகவும் காணப்படுகின்றது. இவ்வாறன ஒரு சூழலில் மாணவர்களால் எவ்வாறு சிறந்த மன நிலையில் கல்வி கற்க முடியும்? ஆகவே எதிர்காலதில் இடம்பெறும் அபிவிருத்திகள் சிறந்த முறையில் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும் 2015ஆம் ஆண்டுக்கான கணக்கு விபரங்களின் படி தற்போதுள்ள பாடசாலைகளில் 73% பெண் ஆசிரியைகளும் 27% ஆண் ஆசிரியர்களும் கடமை புரிகின்றனர். இந்த நிலை தொடர்ந்தும் அதிகரித்தால் ஆண் மாணவர்களினுடைய கல்வி நிலையிலே பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஆகவே இவ்வாறன பிரச்சனைகளுக்கு மாகாண ரீதியாக நாங்கள் ஆய்வு செய்து தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது.

மேலும் வெறுமனே கல்வியினை மாத்திரமன்றி மாணவர்களின் ஆரோக்கியம் சம்மந்தமான விடயங்களிலும் நாங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவையுள்ளது. முன்னைய காலங்களில் பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் ஒவ்வொரு வருடமும் இடம்பெற்றது. ஆனால் இப்போது சில பாடசாலைகளில் அவ்வாறன விளையாட்டுப் போட்டிகள் ஐந்து அல்லது பத்து வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறுகின்ற நிலை உருவாகியிருக்கின்றது. இவ்விடயம் தொடர்பாக நாங்கள் விஷேட கவனமெடுத்து ஒரு கல்வி கோட்டத்திற்கு ஒரு மைதானம் என்ற வகையிலேனும் அபிவிருத்தி செய்து அக்கல்வி கோட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் அதனை பயன்படுத்தி ஆரோக்கியமுள்ள எதிர்கால சந்ததி ஒன்றை உருவாக்குவதற்கு நாம் ஆலோசித்திருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

மேலும் இக்கலந்துரையாடலின் போது காத்தான்குடி பாத்திமா பாலிகா வித்தியாலயத்தினுடைய அதிபர் தமது பாடசாலைக்குரிய சரியான இடம் இதுவரை காலமும் கிடைக்காமை பற்றியும் தமது பாடசாலைக்கென வழங்கப்பட இருந்த அரச காணியை தனியார் நிறுவனமொன்று தமது இடம் என கூறி மோசடியாக நடந்து தமது பாடசாலையினுடைய அவிபிருத்தியினை முடக்கியது சம்மந்தமாகவும் தெரிவித்த போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் இவ்விடயம் தொடர்பாக முதலமைச்சர் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு மேலதிக தகவல்களை வழங்கி தெளிவுபடுத்தினார்.

இது தொடர்பாக அவர் கூறிய போது இப்போது பாத்திமா பாலிகா அமைந்திருக்கும் கட்டிடமானது வேறு எங்கும் காணமுடியாத ஒரு நிலையில் அதாவது கழிவு நீர் செல்லுகின்ற வடிகானுக்கு மேல் அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் மாகாண சபை மூலம் இப்பாடசாலைக்கென அதற்கு அண்மையிலுள்ள ஒரு காணியை (Reservation) தெரிவுசெய்து மாகாண சபை நிதியொதிக்கீட்டின்கீழ் முதல் கட்டமாக 55 இலட்சம் ரூபாவினையும் இரண்டாம் கட்டமாக மேலும் 55 இலட்சம் ரூபாவினையும் ஒதுக்கி மொத்தமாக 11 மில்லியன் செலவில் இப்படசாலைக்கான மூன்று மாடி கட்டடத்தை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அக்கட்டத்திற்கான அடிக்கல் நாட்ட முற்பட்ட வேளையிலே குறித்த காணி எமக்கு சொந்தமானது எனக்கூறி தனியார் அமைப்பொன்று திட்டமிட்ட முறையில் அந்த அபிவிருத்தியினை தடை செய்திருந்தனர்.

தற்போது 400 மாணவர்கள் கல்வி கற்கின்ற இப்பாடசாலைக்கென மலசலகூட வசதி இல்லாத நிலையில் அண்மையிலுள்ள வீடுகளில் மாணவர்கள் தமது மலசலகூட தேவைகளை நிறைவு செய்ய வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பிரதான வீதியொன்றின் இரு புறமும் பாடசாலை அமைந்திருப்பதன் காரணமாக மாணவர்கள் விபத்துகளுக்கு உள்ளாகக்கூடிய சந்தர்பங்களும் அதிகம் உள்ளது. எனவே மாகாண முதலைமைச்சர் என்ற வகையிலும் மாகாணத்தின் அனைத்து அமைச்சுக்களின் அதிகாரத்தையும் கொண்டவர் என்ற வகையிலும் காணி அமைச்சருடன் தொடர்புகொண்டு இந்த பிரச்சனைக்கு சரியான ஒரு தீர்வினை பெற்றுத்தர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

LEAVE A REPLY