12 ஆண்டுகளின் பின்னர் முதல் தடவையாக இஸ்ரேலிய சிறையில் தனது தந்தையைச் சந்தித்த பலஸ்தீன யுவதியின் அனுபவம்

0
1047

(எம்.ஐ.அப்துல் நஸார்)

257b06e0aacd4395905ff8c0cb964729_1812 ஆண்டுகளின் பின்னர் முதல் தடவையாக இஸ்ரேலிய சிறையில் தனது தந்தையைச் சந்தித்தபோது தனக்கு ஏற்பட்ட மன உணர்வுகளை வெளிப்படுத்துகிறார் பலஸ்தீன யுவதி

இஸ்ரேலிய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் தனது தந்தையினை 12 ஆண்டுகளின் பின்னர் முதல் தடவையாக அவரது சிறைக்கூடத்தில் சந்திப்பதற்கும் கட்டித் தழுவிக் கொள்வதற்கும் பதினெட்டு வயதான யாரா அல்-சராபதிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அல்-அக்ஸா தியாகிகள் படையணி, பதாஹ் ஆயுதப் பிரிவு ஆகியவற்றுடன் தொடர்புகளை பேணிவந்த ஐமன் அல்-சராபதி 1988 ஆம் ஆண்டு ஜெருஸலத்தில் இஸ்ரேலியர் ஒருவர் கொல்லப்படுவதற்கும் மற்றுமொருவர் காயமடைவதற்கும் காரணமாய் அமைந்த தாக்குதலை நடத்தியமைக்காக கைது செய்யப்பட்டார்.

கைதிகளுக்கு ஆதரவாகச் செயற்படும் அட்டமீர் அமைப்பின் கருத்தின்படி, பாதுகாப்புத் தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் இஸ்ரேலிய சிறைகளிலுள்ள பலஸ்தீனக் கைதிகளை அவர்களது குடும்பத்தினர் சென்றுபார்ப்பது தொடர்பில் தொடர்ச்சியாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதோடு, தனிமைப்படுத்தப்படுதல் மற்றும் இராணுவ நீதிமன்ற நெருக்குதல்களையும் எதிர்கொள்கின்றனர்.

5ed3450face2452a8ddbcb4467bdd16f_18மேற்குக் கரையில் இருந்து இஸ்ரேலிய ஆள்புல எல்லைக்குள் நுழைவதற்கு முன்னதாக கைதிகளின் குடும்பத்தினர் இஸ்ரேலிய சிவில் நிருவாகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை செஞ்சிலுவைச் சங்கம் செய்கின்றது. குடும்பத்தினர் கைதிகளைச் சென்றுபார்க்கும் நிகழ்வினைக் குறைக்க வேண்டும் என கடந்த மாதம் அந்த அமைப்பினால் எடுக்கப்பட்ட தீர்மானம் பல்வேறு தரப்பிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

தற்போது 7,000 பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் 458 பேர் ஆயுள் தண்டனையினை அனுபவித்தது வருபவர்கள் 700 பேர் அரசியல் கைதிகள். இவர்கள் குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாமல், விசாரணைகளும் நடாத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஜுலை மமாதம் 10ஆந் திகதி நடைபெற்ற இந்த சந்திப்பு பற்றி யாரா அல்-சராபதி விபரிக்கையில், நான் கதவினைத் தாண்டி உள்ளே நுழைந்தேன். எனது தந்தையைக் கண்டதும் ஓடிச் சென்று அணைத்துக் கொண்டேன். சுமார் நான்கு நிமிடங்கள் அவ்வாறே நின்றிருந்தேன்.

எமது சந்திப்பிற்கான நேரம் முடிவடைந்து விட்டதாக அங்கிருந்த காவலர் தெரிவித்ததும் எனது தந்தை அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எமது நேரம் குறைக்கப்பட்டதற்கான காரணம் இது வழக்கமான சந்திப்பல்ல, விசேட சந்திப்பாகும்.

5ec40d3f1631499dba3f310decad9429_18அதன் பின்னர் இரு காவலர்கள் உள்ளே நுழைந்தனர், ஒருவர் ஆண் மற்றவர் பெண், ஆண் காவலர் எனது தந்தையையும், பெண் காவலாளி என்னையும் இழுத்துப் பிரித்தனர். ‘இது நீங்கள் இருவரும் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கான நேரம்’ என அவர்கள் தெரிவித்தனர். பின்னர் அவர்களது புகைப்படக் கருவி மூலம் புகைப்படமெடுத்தனர். அதனை அடுத்து எமது சந்திப்பு முடிவடைவதாக தெரிவித்தனர்.

ஐந்து நிமிட நேர ஒதுக்கீட்டில் ஒரு நிமிடம் மீதமிருந்த போதிலும் எமக்கு நான்கு நிமிடங்களை மாத்திரமே வழங்கினர்.

எடுக்கப்பட்ட புகைப்படம் உடனடியாக எனக்குக் கிடைக்கவில்லை. எனது தந்தையை சந்திக்கச் செல்பவர்கள் அடிக்கடி சிறைச்சாலை நிருவாகத்திடம் அதனைக் கேட்டதைத் தொடர்ந்து, ஒரு மாதத்தின் பின்னரே எடுக்கப்பட்ட புகைப்படம் எனக்குக் கிடைத்தது. அதனால்தான் அதனை முகநூலில் பதிவேற்றம் செய்வதற்கு ஒரு மாதம் சென்றது.

நான் எனது தந்தையை சிறையில் சந்திப்பது இது இரண்டாவது தடவையாகும். முதல் தடைவ சந்தித்தபோது எனக்கு வயது 06. தற்போது எனது வயது 18. எனது தந்தை சிறையில் இருக்கும் போதுதான் நான் பிறந்தேன். ஆனால் எனக்கு 06 வயதாகும் வரை அது எனக்குத் தெரியாது. அப்போது அந்த அளவுக்கு அறிவு இருக்கவில்லை.

எனது தந்தையினை அணைத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வும் இருக்கவில்லை. இப்போது இது இரண்டாவது சந்திப்பாக இருந்தாலும் உண்மையில் இதனை நான் முதலாவது சந்திப்பாகவே கருதுகின்றேன். ஏனென்னால் ஒரு தந்தையின் அரவணைப்பு என்றால் என்ன என்பதை இப்போதுதான் முதல் தடவையாக உளப்பூர்வமாக உணர்கின்றேன்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் எனது தந்தை என்னை தனிப்பட்ட ரீதியில் சந்திப்பதற்காக இஸ்ரேலிய சிறைச்சாலை சேவைக்கு வேண்டுகோளொன்றை சமர்ப்பித்தார். அவர் அந்த வேண்டுகோளைச் சமர்ப்பித்தபோது நப்ஹா சிறைச்சாலையில் இருந்தார். அந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.

பின்னர் ஹதாரிம் சிறைச்சாலையில் இருக்கும்போது இரண்டாவது தடவையாக அந்த வேண்டுகோளை சமர்ப்பித்தார். அதுவும் மறுக்கப்பட்டது. மீண்டும் பீர் சபா சிறைச்சாலையில் இருக்கும்போது சமர்ப்பிக்கப்பட்ட வேண்டுகோளும் நிராகரிக்கப்பட்டது. ஜில்போ சிறைச்சாலையில் இருக்கும்போது சமர்ப்பிக்கப்பட்ட வேண்டுகோளே ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நான் கடந்த மூன்று ஆண்டுகளாக எனது தந்தையைப் பார்க்கவில்லை. அதற்கான அனுமதிநிறுத்தப்பட்டுள்ளது. மறுமுறைபார்ப்பதற்கு எப்போது அனுமதிகிடைக்கும் என்பது இப்போது கூட எனக்குத் தெரியாது, அதற்கான காரணமும் தெரியவில்லை. பாதுகாப்புத் தடை இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

எனக்கு ஞாபகம் இருக்கிறது, நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போது எமது தந்தையைப் பார்க்கச் செல்லும் தினத்தில், அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்துவிடுவோம், ஆனால் எங்கள் நால்வரையும் எழுப்பி எடுப்பதற்கு எமது தாயார் கடுமையாக பிரயத்தனம் எடுப்பார். இறுதியில் எங்களை நித்திரையிலிருந்து எழுப்பிவிடுவார். நாங்கள் நான்குபிள்ளைகள், அந்தநேரத்தில் நாம் அனைவரும் சிறுவர்கள்.

ஜெரூசலத்தின் புறநகர்ப் பகுதியான ஈஸாரியாவிலுள்ள எமதுவீட்டிலிருந்து பெத்தலஹேமுக்குச் செல்வோம், பின்னர் பெதலஹேம் சோதனைச் சாவடியிலிருந்து ஜெரூசலத்திற்கும் அங்கிருந்து எனது தந்தை அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிறைச்சாலைக்குச் செல்வோம்.

எமது தந்தையை பார்க்கின்ற மிக நெகிழ்ச்சியான தருணமாக அது இருக்கும், ஆனாலும் எமது சட்டித்தனங்களால் தாயாரை தொந்தரவு செய்து கொண்டிருப்போம். தடித்த கண்ணாடித் தடுப்பின் ஊடாகவே எங்களது தந்தையைப் பாhக்க முடியும். தந்தை பேசத் தொடங்கியதும் எமது வேதனைகள் அனைத்தையும் மறந்து விடுவோம். இது வழக்கமாக அதிகாலை 5 மணி தொடக்கம் முற்பகல் 11 மணிவரை நடைபெறும். இதன்போது சோதனைச் சாவடிகளில் சோதனைக்குட்படுத்தப்படுவதும், பஸ்வண்டிகள் பலவற்றில் மாறி மாறிப் பயணிப்பதும் வழக்கமான நிகழ்வுகளாக இருக்கும்.

தடித்த கண்ணாடித் தடுப்பின் ஊடாகப் பார்த்தவாறு பேச வேண்டியேற்படுவதால் பேசுவது தெளிவாகக் கேட்காது. தொலைபேசி ஊடகவே நாங்கள் உரையாடுவோம். ஆனால் அதுவும் தெளிவாக இருக்காது. அவர்கள் வேண்டுமென்றே குரல் தெளிவாக கேட்காதவாறு குறுக்கீட்டுச் சத்தங்களை உருவாக்குகிறார்கள் என நான் நினைக்கின்றேன். ஏனென்றால் தொலைபேசியில் உரையாடும்போது எதுவும் துல்லியமாக கேட்பதில்லை.

பாடசாலையைப் பற்றிக் கேட்பார். நான் வளர்ந்து பெரியவளானதும் என்ன படிக்க விரும்புகின்றேன் என்பதைக் கேட்பார். எப்போதும் என்னை ஊக்கப்படுத்துவார். எனது மனவுறுதியை ஏற்படுத்தும் விடயங்களைக் கூறுவார். எனது தாயையும், உடன்பிறப்புக்களையும் கவனமாகப் பார்த்துக்கொள்ளும்படி கூறுவார். எமது தாய்மண்ணைப் பற்றியும் எமது தாய்நாடு எவ்வளவு பெறுமதியானது என்பதையும் கூறுவார். வீட்டில் உள்ள மரங்களையும், எமது தோட்டத்தையும் பார்த்துக்கொள்ளும்படி கூறுவதோடு வீட்டினை கவனமாகப் பராமரிக்குமாறும் கூறுவார்.

எனது தந்தை சிறையில் இருக்குமபோதே கவிதைகள் மற்றும் சிறுகதைகளை எழுதுவார். அவற்றை வாசிக்குமாறும், அபிப்பிரயத்தை சொல்லுமாறும் கேட்பார். என்னை எழுதுமாறும் வாசிக்குமாறும் நன்றாகப் படிக்குமாறும் ஊக்கப்படுத்துவார். கல்வியே மிகவும் முக்கியமானது, அனைத்திற்கும் திறவுகோலானது எனக் கூறுவார். நான் தற்போது பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்விகற்று வருகின்றேன். நோய் நிலைக் குறைப்பு தொடர்பான பாடநெறியைப் பயின்று வருகின்றேன். இதன் மூலமாகத்தான் எனது தேசத்து மக்களுக்கும் எனது தாய் மண்ணிற்கும் உதவப்போகின்றேன்.

எனக்கு நன்றாக ஞாபகமிருக்கின்றது, ஒரு தடவை எனது தந்தையைப் பார்ப்பதற்காக எனது தாயார் அஷ்கிலோன் சிறைச்சாலைக்குச் சென்றார். திரும்பி வரும்போது மிகுந்த ஏமாற்றத்துடன் காணப்பட்டார். சிறுவர்களாக இருந்த நாம் என்ன நடந்தது என வினவினோம். ஆனால் தாயார் உடனடியாக எமக்கு பதிலளிக்கவில்லை. எங்களது தாயாரால் தந்தையினைச் சந்திக்க முடியவில்லை என்பதையும் அவர் மற்றுமொரு சிறைக்கு மாற்றப்பட்டுவிட்டார் என்பதையும் நாம் பின்னர் புரிந்துகொண்டோம்.

சிறைக் கைதிகளை குடும்பமாகச் சென்று பார்ப்பதைக் குறைத்தல் என்ற செஞ்சிலுவைச் சங்கத்தின் தீர்மானம் எம்மைப் பாதிக்காது ஏனென்றால், எப்படிப் பார்த்தாலும் எங்களுக்கு அனுமதி கிடைக்கப்போவதில்லை. எனது தந்தையின் சகோதரி மாத்திரம் செல்ல முடியும். அவருக்கு வயது 55 இனை விட அதிகமாகும். அவர் அனுமதியின்றி அங்கு செல்ல முடியும். மருமகனை தனது மகனைப் போலவே கருதும் எனது தந்தையின் மாமியார் கடந்த 19 வருடங்களில் ஒரு தடவையேனும் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை, ஏனெனில் நேரடி உறவினர்களுக்கு மாத்திரமே அவர்கள் அனுமதியளிக்கின்றனர்.

பிரான்ஸில் கல்விகற்றுக்கொண்டிருக்கும் எனது மூத்த சகோதரன் அலா தந்தையினப் பார்ப்பதற்காக வருடத்திற்கு ஒரு தடவை மாத்திரம் அனுமதி வழங்கப்படுவதால், அதற்காகவே அங்கிருந்து வருவார். மேற்குக்கரை அடையாள அட்டையைக்கொண்டவர்கள் இஸ்ரேலிய சிவில் நிருவாகப் பிரிவினை அணுகி அவர்களூடாகவே அனுமதியினைப் பெற்றுக்கொள்ள வேண்டும். சிறைக் கைதி தண்டிக்கப்பட்டிருந்தால் அந்தக் கைதியின் குடும்ப உறுப்பினர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அனுமதி இடைநிறுத்தப்படும்.

என்னைப் பொறுத்தவரை தந்i இல்லாமல் வளர்வதென்பது அத்தனை சுலபமானதல்ல. எனது வயதையொத்த ஏனைய பாடசாலைப் பிள்ளைகளுடன் ஒப்பிடும்போது நான் எப்போதும் வேறுபாட்டினை உணர்கின்றேன். அவர்களுக்கு ஒவ்வொரு இடங்களுக்கும் அழைத்துச் செல்வதற்கு அவர்களது தந்தைமார் அருகிலேயே இருக்கின்றனர்.

தினமும் நான் உறங்குவதற்கு முன்பதாக, எனது தந்தை அருகில் இல்லை என்பதை உணர்கின்றேன். எனக்கு ஆறு வயதாக இருக்கும்போது நாங்கள் அனைவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்துக்கொள்வேன்.

தற்போது எனது தந்தையை பார்த்துக்கொள்ள புதிய புகைப்படமொன்று கிடைத்திருக்கின்றது. எனக்கு தற்போது மேலதிகமாக புதிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக உணர்கின்றேன். ஏனென்றால் எனது தந்தையின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கும் அவருக்கு பெருமை சேர்ப்பதற்கும் நான் இன்னும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கின்றது.

வளரும்போது ஆசைகளும் தேவைகளும் அதிகரிக்கும், சிறுவர்களாக இருக்கும்போது அதை அவர்கள் உணர்வதில்லை.

எனது தாயின் மூலமாகவே நான் தந்தையினைப் பற்றி அதிகம் தெரிந்துகொண்டேன். ஏனென்றால் எனது தந்தையினைப்பற்றி அவர் அதிகம் பேசுவார். தாய்மண்ணுக்காக தனது வாழ்க்கையை எவ்வாறு தியாகம் செய்திருக்கின்றார் என்பது பற்றி எனக்கு விளக்கியிருக்கின்றார்.

எனது தந்தையினைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் மூலமாகவும் அறிந்திருக்கின்றேன். எனது தந்தை ஏனையோரை நான்கு மதிக்கக்கூடியவர் எனவும் அனைத்திலும் நேர்த்தியானவர் எனவும் மிகவும் நல்ல மனிதர் எனவும் சிலாகித்துக் கூறியிருக்கின்றனர். அடிக்கடி என்னிடம் இது பற்றி கூறுவார்கள்.

நான் எனது தந்தையைச் சந்தித்த அன்றைய தினம் அவரது 48 ஆவது பிறந்தநாள். அவர் தனது 26ஆவது வயதில் சிறையிலடைக்கப்பட்டார்.

எனது பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாவதற்கு ஒரு நாள் இருக்கையிலேயே இந்த சந்திப்பு நடைபெற்றது. ‘எதைப் பற்றியும் கவலைப்படாதே, அனைத்தும் நன்றாகவே நடக்கும்’ என தந்தை கூறினார். மறு நாள் பெறுபேறுகள் வெளியாகின, நான் சித்தி பெற்றேன், வெற்றி பெற்றேன்

LEAVE A REPLY