(Poem) சனிக் கிழமை

0
81

(நிஷவ்ஸ்)

சனிக்கிழமை காலை
இனிக்கின்ற வேளை.
இன்னிக்கு வேலை இல்லை
இருக்கலாம் எனப் பார்த்தால்
அன்னிக்கு பார்த்து
ஆயிரம் வேலை வரும்.
தண்ணீர் கட்டாகும்
தாங்கியால் லீக்காகும்.
பன்னாள் கூட்டாளி
பார்ட்டிக்கு கூப்பிடுவான்.
என்னங்க எனும் சொல்
இடை விடாது றிங் ஆகும்.
ஒன் லைன் கூட்டாளி
ஊட்டுக்கு வாரன் என்பார்.
கண்ணாடி தொலைந்து போய்
கடுப்பேற்றி தேட வைக்கும்.
கண்ட படி புழுதி பட்ட
காரைக் கழுக வேண்டும்.
சின்னவளின் கிளாஸுக்கு
விண்ணப்பம் கொடுக்க வேண்டும்.
திண்ணையின் ஒட்டடைகள்
என்னைப் பார் எனச் சொல்லும்.
தொன் கணக்கில் தூக்கம்
தொன தொனக்கும் உள்ளுக்குள்.
புண்ணுக்கு மருந்து போட
போக வேணும் ஹொஸ்பிட்டல்.
மண்ணுக்கு உரம் போட்டு
மரத்தை நாட்ட வேண்டும்.
மின்சார பில் கட்டிவிட்டு
மீன் வாங்கி வர வேண்டும்.
முன் வீட்டுப் பாத்திஹாவில்
முகத்தைக் காட்ட வேண்டும்.
மொண்டஸூரி கூட்டத்துக்கு
சென்று கொஞ்சம் தூங்க வேண்டும்.
மெண்டலாக்கும் பேஷ்புக்கை
மேலால தட்ட வேண்டும்.
எதிலே தொடங்கி
எங்கே முடிப்பதென
மூளையைக் கசக்கியும்
முடிவெடுக்க முடியாமல்
ஆளை விட்டால் போதுமென
அப்படியே போர்த்திக்கிட்டு
மூலையிலே படுத்தால்
முகத்திலே கிள்ளி
விளையாட வா என்று
இளையவள் கூப்பிடுவாள்.
சனிக்கிழமை காலை
இனிக்கின்ற வேளை.
இன்னிக்கு வேலை இல்லை
இருக்கலாம் எனப் பார்த்தால்
அன்னிக்கு பார்த்து
ஆயிரம் வேலை வரும்.

LEAVE A REPLY