கொலைக் குற்றவாளிகளின் வலைப்பின்னலை மேலும் ஆராய வேண்டியிருக்கின்றது: தாமதமானாலும் தண்டனை நிச்சயம்

0
1865

(ஏ.எச்.ஏ. ஹுஸைன் )

தாயையும் மகளையும் படுகொலை செய்த குற்றவாளிகளின் வலைப்பின்னலை மேலும் ஆராய வேண்டியிருக்கின்றது. விஞ்ஞான ரீதியான ஆதாரங்களையும் சமர்ப்பித்து கொலைக்குற்றவாளிகளுக்கு அதி உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்படும் என மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தினேஸ் கருணானாயக்க உறுதிபடத் தெரிவித்தார்.

ஏறாவூரில் இடம்பெற்ற தாய் மகள் ஆகிய இருவரினதும் இரட்டைப் படுகொலைக்கு நீதி கோரி வியாழக்கிழமை (செப்ரெம்பெர் 23, 2016) ஏறாவூர் நகரில் நடத்தப்பட்ட மனித சங்கிலிப் போராட்டத்தில் மக்கள் முன் பிரசன்னமான அவர் ஏறாவூரில் இரட்டைப் படுகொலை நிகழ்வு இடம்பெற்றதன் பின்னர் பொலிஸ் தரப்பில் குற்றவாளிகளைப் பிடிக்க எடுக்கப்பட்டு வந்த பொலிஸாரின் பிரயத்தனங்கள் தொடர்பாகவும் பொதுமக்களுக்கு சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் விதமாகவும் உரையாற்றினார்.

மனித சங்கிலிப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் கவன ஈர்ப்பின் இறுதியில் ஏறாவூர் ஜாமியுல் அக்பர் ஜும்மாப் பள்ளிவாயலில் ஒன்று கூடினர்.
அங்கு சமூக ஆர்வலர்கள், ஊர்ப்பிரமுகர்கள் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தினேஸ் கருணானாயக்க;

சம்பவம் நடைபெற்று அதுபற்றிப் பொலிஸார் அறிந்து கொண்ட கணப்பொழுதிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் நிலையங்களிலிருந்தும் விஷேட பொலிஸ் அணிகள் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கும் பணிப்பின்; பேரில் இரவு பகலாக தங்களை கடமையில் ஈடுபடுத்திக் கொண்டு துரிதமாகச் செயற்பட்டு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளார்கள். இதுவரை இந்த வாரத்தின் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை வரை மொத்தமாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் இதர குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட சூத்திரதாரிகளை விசாரணை செய்து மேலும் அவர்களுக்குள்ள குற்றச் செயல் வலைப்பின்னலை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.

அத்துடன் பிரதான சூத்திரதாரியோடு சம்பந்தப்பட்ட பல்வேறு விசாரணைகளை நாங்கள் பல்வேறு கோணங்களில் மேற்கொண்டு வருகின்றோம். அந்த விசாரணைகள் ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலைக்கும் அப்பாற்பட்டதாக இருக்கும்.

திருடப்பட்ட நகைகள், வீட்டில் கைப்பற்றப்பட்ட தடயப் பொருட்கள், படுகொலை செய்யப்பட்ட பெண்களின் உடற்கூற்றுப் பரிசோதனை, இரத்த மாதிரிகள். மரபணுப் பரிசோதனைகள் என்பனவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளோம்.

குற்றச் செயல்களை ஒழிப்பதிலும் குற்றவாளிகளை கண்டு பிடித்துத் தண்டனை பெற்றுக் கொடுப்பதிலும் பொதுமக்களின் பங்களிப்பு இன்றியமையாததாக இருக்க வேண்டும்.” என்றார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர், மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் உட்பட இன்னும் பல பொலிஸ் அதிகாரிகளும், பொதுமக்களும் பல்வேறு சமூக நல அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர் நகர் முகாந்திரம் வீதி முதலாவது ஒழுங்கையில் வசித்து வந்த தாய் நூர்முஹம்மது சித்தி உசைரா (வயது 56) மற்றும் அவரது மகளான ஜெனீரா பானு மாஹிர் (வயது 32) ஆகியோர் கடந்த ஞாயிறன்று அதிகாலை பொல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

LEAVE A REPLY