விக்ணேஸ்வரனின் கூற்று தமிழ்த் தலமைகளின் குறுகிய மனநிலையையே வெளிப்படுத்துகின்றது: முபீன்

0
192

வடமாகாண முதலமைச்சர் திரு.சீ.வி.விக்ணேஸ்வரன் அண்மையில் மட்டக்களப்பில் நடந்த வைபவமொன்றில் முஸ்லிம்கள் தொடர்பில் கூறிய கருத்து முஸ்லிம்கள் தொடர்பில் அவரும் சில தமிழ்த் தலமைகளும் கொண்டுள்ள குறுகிய மனநிலையையே காட்டுகிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் முபீன் தெரிவித்தார்.

மேற்படி வைபவத்தில் உரையாற்றிய முதலமைச்சர் விக்ணேஸ்வரன் முஸ்லிம்கள் அரசியல் இலாபத்துக்காகவே மதத்தை முண்ணிலைப்படுத்துகின்றனர்.அவர்கள் தமிழைப் பேசுகின்றனர் தமிழில் கவிதை பாடுகின்றனர்.அவர்கள் தமிழுக்குள்ளும் தமிழ் கலாச்சாரத்துக்குள்ளும் வருவர் என்று கூறியிருந்தார்.இக்கூற்று தொடர்பில் லண்டன் பீபீசி வானொலி முபீனிடம் கேட்ட போதே மேற்கண்டவாறு முபீன் தெரிவித்தார்.

முபீன் மேலும் தெரிவிக்கையில்,

முதலில் முதலமைச்சர் விக்ணேஸ்வரனின் கருத்தை முற்றாக நிராகிப்பதுடன் அதற்கு எனது கண்டனத்தையும் தெரிவிக்கிறேன் எனவும் காலம் காலமாக முஸ்லிம் சமூகத்தை அடக்கி ஆண்டு ஆதிக்கம் செலுத்த நினைக்கின்ற தமிழ் தேசியத்தின் வக்கீர மனநிலையையே இக்கூற்று வெளிப்படுத்துகிறது. முஸ்லிம்கள் தங்களை தனித்துவ சமூகமாக அடையாளப்படுத்துவது தாம் பின்பற்றும் மார்க்கத்தின் ஊடாகவேயாகும். அரசியலுக்காக ஒரு போதும் தமது மதத்தை பயன்படுத்துவதில்லை.

ஆரம்ப காலத்திலிருந்தே தமிழ் தலமைகள் இலங்கை முஸ்லிம்களை ஒரு இனமாக ஏற்றுக் கொள்ள மறுத்து வந்தனர். இதற்கெதிரான முஸ்லிம்கள் தெடர்ந்து போராடி வந்துள்ளனர். முஸ்லிம்களின் போராட்டம் காரணமாக பின்னர் தமிழ்த் தலமைகள் முஸ்லிம்களை இஸ்லாமியத் தமிழர்கள் என அழைத்தனர்.

அதற்கெதிராகவும் முஸ்லிம்கள் போராடினர்.பின்னர் தமிழ் பேசும் மக்கள் என்றனர். இதனை முறியடித்து முஸ்லிம்களின் தனித்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் அரசியல் கட்சியை மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் உருவாக்கினார்.ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சியோடு இணைந்து அரசியல் செய்த அஷ்ரப் முஸ்லிம்களுக்கான ஒரு தனிக்கட்சி உருவாக்கவேண்டிய அவசியத்தை தமிழ் தலமைகளின் ஆதிக்க மன நிலையே ஏற்படுத்திக் கொடுத்தது. இதற்கு சிறந்த உதாரணம் 1987 இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் முஸ்லிம்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டமையாகும்.

தமிழ் கலாசாரத்தை முஸ்லிம்கள் பின்பற்றுகின்றனரே என பீபீசி நிறுபர் கேட்டபோது அதற்கு பதிலளித்த முபீன் முஸ்லிம்களின் கலாச்சாரமென்பது தமிழர் கலாச்சாரத்திலிருந்து வந்ததல்ல. முஸ்லிம்களின் கலாச்சாரமென்பது இஸ்லாத்தின் அடிப்படையில் அமைந்ததேயாகும்.

இஸ்லாமிய வரையறைகளை ஒரு முஸ்லிம் மீறும் போது அவன் இஸ்லாத்திலிருந்து வெளியேறியதாக கருதப்படும் என கூறியதுடன் இன்று நாட்டிலே நல்லிணக்கம் புதிய அரசியல் கலாச்சாரம் என்பவைகள் உருவாக முயற்சிகள் எடுக்கப்படுகின்ற சூழ்நிலையில் இத்தகைய கருத்துடன் விக்ணேஸ்வரன் ஐயா இருப்பது வேதனையளிக்கிறது.

அத்துடன் விக்ணேஸ்வரன் ஐயாவை தலைவராகக் கொண்ட தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட அரசியல் யாப்புச் சீர்திருத்தம் தொடர்பான பிரேரணையிலும் முஸ்லிம்களை ஒரு குழுவாகவே காட்டப்பட்டுள்ளது. இலங்கை முஸ்லிம்களை சர்வதேசமே தனியானதொரு இனமாக ஏற்றுக் கொண்ட ஒரு சூழ்நிலையில் இத்தகையதொரு மனநிலையில் தமிழ் தலமைகள் இருந்தால் தமிழ் முஸ்லிம் நல்லுறவு எப்படி ஏற்படும்? என முபீன் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY