சிரியாவில் வன்முறைகளை தவிர்த்து, மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டு வர உலகின் அதிகார சக்திகள் முன்வர வேண்டும்! முஜீபுர் றஹ்மான்

0
208

முஜீபுர் றஹ்மான் பாராளுமன்றத்தில் வேண்டுகோள்!

2010ம் ஆண்டு டிஸம்பர் மாதம் டியூனிசியா நாட்டில் அரபு எழுச்சி ஆரம்பமானது. 2012ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இறுதியில் டியூனிசியா, எகிப்து, லிபியா, மற்றும் யெமனை நீண்ட காலமாக ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் பதவிகளிலிருந்து இறக்கப்பட்டனர்.

பஹ்ரைனிலும், சிரியாவிலும் மக்கள் எழுச்சி போராட்டங்களாக தொடர்ந்திருக்கின்றன. இன்னும் பல அரபு நாடுகளில் ஆட்சியாளர்களுக்கெதிராக எதிர்பலைகள் எழுந்த வண்ணமுள்ளன.

டியூனிசியாவை தவிர்த்து, ஜனநாயகத்திற்காகவும்;, சுதந்திரத்திற்காகவும் போராடும் ஏனைய அரபு மக்களின் போராட்டம் மூர்க்கத்தனமாக அடக்கப்பட்டன. அல்லது பூகோள மற்றும் பிராந்திய அரசியல் சக்திகளின் அரசியல் நலன்பேணும் சிவில் யுத்தங்களாக மாற்றம் பெற்றுள்ளன.

இதன் மூலம் பாரிய இழப்புகளுக்கு அந்நாட்டு பொதுமக்கள் முகம் கொடுத்துள்ளனர். அவர்களின் வாழ்க்கை சூறையாடப்பட்டிருக்கிறது.
மத்திய கிழக்கில் இன்று தோன்றியுள்ள இந்த அபாயகரமான நிலை வேறு எப்போதும் தோன்றியதில்லை.

சிரியாவிலும், யெமனிலும், ஈராக்கிலும், பாலஸ்தீனிலும் மிகப்பெரிய மனித அவலங்கள் இடம்பெற்று வருவதை நாம் அறிவோம்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஐ.நா பாதுகாப்புச் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கு பொறுப்பான செயலாளர் ஸ்டீவன் ஒ பிரயன் கருத்து தெரிவிக்கும் போது, சிரியாவின் வணிக கேந்திர நிலையமான அலப்போ நகரம் இப்போது அச்சத்தின் உச்சமாக மாறியிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

சிரியாவின் தற்போதைய நிலை, தொடராக மனித உயிர்களை காவு கொள்கின்ற, குண்டுகளின் அழிவுகளுக்கு மத்தியில் உயிர்களை காத்துக் கொள்வதற்காக அழிவில் குறைந்த இடங்களை தேடி ஓடுகின்ற, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத துயரங்களை கொண்டதாக அமைந்திருக்கிறது.

ஐந்து வருடங்களைக் கடந்த சிரியா யுத்தத்தில் சுமார் 250,000 முதல் 500,000 மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. தொடரும் சிவில் யுத்தம் மிகப்பெரிய அகதிகள் அவலத்தையும் தோற்றுவித்திருக்கிறது. 2015ம் ஆண்டில் 4.8 மில்லியன் அகதிகள் எகிப்திலும், ஈராக்கிலும், ஜோர்தானிலும், லெபனான் மற்றும் துருக்கியிலும் இருப்பதாகவும், 6.6 மில்லியன் மக்கள் சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளாக்கப்பட்டிருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

ஐ.நா மனிதநேய முகவர் அமைப்புகளும் அதன் பங்கு நிறுவனங்;களும் மிக்பெரிய மனிதநேய நடவடிக்கை திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளன. இத்திட்டத்திற்கு 3.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இதுவரை செலவிடப்பட்டுள்ளன. இதன் மூலம் கடந்த ஆகஸ்ட் வரை பாதிக்கப்பட்டோரில் 33 வீதமான மக்களையே இந்த திட்டத்தால் அணுக முடிந்துள்ளது.

உதவி ஒத்தாசைகள் அவசியப்படும் இந்த தருணத்தில் இலங்கை அரசாங்கம் சிரியா மக்களுக்கு தனது ஆதரவை வழங்குவதோடு, வன்முறைகளை தவிர்த்து மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் சர்வதேச சமூகத்திடம் முன்வைக்க வேண்டும்.

சிரியா விடயத்தில் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை சாதகமான ஒரு நிலையை அடையாதது வருந்தத்தக்க நிகழ்வாகும்.

மனிதாபிமான நிலையை கருத்திற்கொண்டு சிரியாவில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வருமாறு உலக அதிகார சக்திகளிடமும் சர்வதேச சமூகத்திடமும் வேண்டுகோளை முன்வைக்க வேண்டும் என்று நான் இந்த சபையை வேண்டி நிற்கிறேன்.

LEAVE A REPLY