“இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அறிவிப்பு கவனமாகவும், பொறுப்புடனும் பரிசீலிக்கப்படுகிறது” NFGG தெரிவிப்பு!

0
440

“NFGG யுடன் இணைந்து செயல் படத் தயார் என்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அறிவிப்பு மிகக் கவனமாகவும் பொறுப்புடனும் பரிசீலிக்கப்படுகிறது” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தெரிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அண்மைய ஒரு அறிவிப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

NFGGயின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டடுள்ளதாவது…

” கடந்த 13.09.2016 அன்று காத்தான்குடியில் நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப் பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் ‘சமூக ஒற்றுமையைக் கருத்திற் கொண்டு NFGG யுடன் எதிர் காலங்களில் இணைந்து செயற்படத் தயார்’ என தெரிவித்திருந்தமை பற்றி எமது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. காத்தான்குடி பிரதேச அரசியலைப் பொறுத்தளவில் இவ்வறிவிப்பு முக்கியத்துவம் பெறுகின்றது. இவ்விடயம் பற்றி NFGG என்ன கருதுகிறது என்பதனைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஊடகங்கள் உட்பட பல்வேறு தளங்களிலும் பரவலாக தெரிவிக்கப்பட்டு வருவதும் அவதானிக்கப்படுகிறது.

இலங்கை சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் விரிவான பொது நன்மைகளை கருத்தில் கொண்டு பல் வேறு முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இணைந்து செயல்படுவது குறித்து NFGG கடந்த காலங்களில் பரவலாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றமை இங்கு குறிப்பிடப்பட வேண்டியதாகும். அந்த வகையில், அரசியல் தளத்தில் ஏற்படும் கூட்டுக்கள் சமூக நலன்களைப் பேணுவதற்கும், உரிமகளை ஒரே குரலில் பேசி வென்றெடுப்பதற்கும் இன்றியமையாததாகும்.

இவ்வாறன சந்தர்ப்பங்களில் வெளிப்படைத் தன்மை பேணப் பட வேண்டும். தனி நபர்களின் நலன்களைத் திரைமறைவில் சாதித்துக் கொள்வதற்கான அரசியல் கூட்டுகள் மிகவும் ஆபத்தானவை. அதே நேரம் பரஸ்பரம் இரு தரப்பும் இதய சுத்தியோடு ஒப்பந்த சரத்துக்களை மதித்து செயல்படும் போது மாத்தரமே சமூக நன்மைக்கான அரசியல் கூட்டணிகள் வெற்றி பெற முடியும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது NFGG மிகவும் துணிச்சலான அரசியல் கூட்டு ஒன்றின் பங்காளியாக இருந்து உழத்தமையும் அதன் மூலம் பொது நன்மைக்கான பாரிய வெற்றி கிடைத்தமையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மாத்திரமின்றி, இது NFGGயின் மேற்கொள்ளப்பட்ட முன்மாதிரி மிக்க கூட்டு அரசியல் நடவடிக்கையுமாகும்.

அது போலவே, கடந்த காலங்களில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கும் NFGGக்குமிடயிலான பேச்சுவார்த்தைகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்களும் , நடாத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளும் இங்கு ஞாபகப்படுத்தப் பட வேண்டியவைகளாகும். குறிப்பாக , கடந்த 2006ம் ஆண்டு நகரசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் மிக விரிவான பேச்சு வார்த்தைகள் அவருடனும் அவரது தரப்பினருடனும் மூன்று கட்டங்களாக நடாத்தப்பட்டன. காத்தான்குடி பிரதேசத்தில் ஒரு முன்மாதிரியான நல்லாட்சி நிருவாகமொன்றை அமைப்பதை நோக்காக கொண்டு நடாத்தப்பட்ட அப்பேச்சு வார்த்தைகள் துரதிஷ்டவசமாக இறுதியில் வெற்றியளிக்கவில்லை.

அந்த வகையில், எதிர் காலங்களிலும் சமூக ஒற்றுமைக்காகவும், மக்களின் நலன்களை வென்றெடுப்பதற்குமான கூட்டு முயற்சிகளையும் கூட்டணிகளையும் நாம் வரவேற்கின்றோம். அந்த வகையில், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களது அறிவிப்பையும் பரிசீலிப்பது எமது பொறுப்பாகும். அவர் சமூக நன்மை தொடர்பில் குறிப்பாக எதனை பிரேரிக்கிறார் என்பதுபற்றி கலந்துரயாடவேண்டிய தேவையும் இருக்கிறது.

NFGG யுடன் இணைந்து செயறபடத்தாயார் என்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் தற்போதைய அறிவிப்பினை நாம் பரிசீலிக்கின்றபோது கடந்த காலங்களில் மேற் கொண்டது போன்றே சமூகத்தின் பல்வேறு தரப்புகளையும் உள்ளிட்டதான விரிந்த ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்படும்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி என்கின்ற முற்போக்கு அரசியல் சக்தியின் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் பங்காளிகளாக இருந்த பல்வேறு தரப்பினர்களும் NFGG மீது உயர்ந்த நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. அவைகள் வீண் போகாதவகையிலேயே அனைத்து அரசியல் பேச்சுவார்த்தைகளும் NFGG யினால் எதிர்வரும் காலங்களிலும் முன்னெடுக்கப்படும். எல்லாம் வல்ல இறைவன் தொடர்ந்தும் எம்மை நேரான பாதையில் நிலைத்திருக்கச் செய்வானாக”

LEAVE A REPLY