பாகிஸ்தானுக்கான பதில் தூதுவராக ஓட்டமாவடி முஹம்மது அனஸ் ஆசிரியர் நியமனம்

0
610

nmm-anas(வை.எம். பைரூஸ்)

ஓட்டமாவடியைச் சேர்ந்த நூர் முஹம்மது முஹம்மது அனஸ் ஆசிரியர் பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானியராலயத்தின் முதல் நிலை செயலாளராக நியமனம் பெற்றுள்ளார்.

நாளை (23.09.2016) முதல் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்கும் அவர், பாகிஸ்தானுக்கான இலங்கை உயர் ஸ்தானியராலயத்தின் பதில் தூதுவராகச் செயற்படவுள்ளதாகவும் அறிய முடிகிறது.

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவரான முஹம்மது அனஸ், கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியுமாவார். அவர் தான் கற்ற பாடசாலையில் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டு முதல் குவைத்துக்கான இலங்கை உயர்ஸ்தானியராலயத்தின் முதல் நிலை செயலாளாராக நியமனம் பெற்ற அவர், அதே பதவியில் 2014ம் ஆண்டு வரை சிறப்பாகச் சேவையாற்றியதோடு, 2014ம் ஆண்டு தொடக்கம் 2015 வரை குவைத்துக்கான இலங்கை உயர்ஸ்தானியராலயத்தின் பிரதித்தூதுவராகப் பதவியுயர்வு பெற்று, சிறப்பான சேவையை வழங்கி, குவைத் நாட்டின் நன்மதிப்பைப் பெற்றதோடு, இலங்கைக்கும் நற்பெயரைப் பெற்றுக்கொடுத்து, தான் பிறந்து வளர்ந்து கல்வி கற்ற ஓட்டமாவடி மண்ணுக்கும் பெருமை சேர்த்திருந்தார்.

அத்துடன், அடுத்தாண்டு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவுள்ள ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய) பாடசாலையின் பழைய மாணவர் சங்க கொழும்புக்கிளையின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு அர்ப்பணிப்புடன் பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வரும் அவர், தனது ஆளுமையினாலும், திறமையினாலும் பாகிஸ்தானின் பதில் தூதுவராக தெறிவு செய்யப்பட்டு தனது பாடசாலைக்கும்,தனது ஊருக்கும் பெருமை சேர்த்து கொடுத்துள்ளார்.

அவரின் சேவை எம் நாட்டுக்கும், சமூகத்துக்கும் பயனுள்ளதாகா அமைய நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக.

LEAVE A REPLY