ஏறாவூரில் நீதி கோரி மாபெரும் கண்டன மனித சங்கிலிப் போராட்டம். பூரண கடையடைப்பு, ஊர் மக்கள் திரள்வு, நோன்பு வைத்து போராட்டம் ஆரம்பம்

0
2286

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

ஏறாவூரில் கடந்த 11.09.2016 அன்று தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரி வியாழக்கிழமை 22.09.2016 மாபெரும் கடையடைப்பு மக்கள் சங்கிலிப் போராட்டம் இடம்பெறவுள்ளதாக ஏறாவூர் பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.

ஏறாவூர் நகரம் முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீட்டில் வசித்துவந்த தாயான நூர்முஹம்மது உஸைராவும் (வயது 56) அவரது திருமணமாகிய மகளான ஜெஸீரா பானு மாஹிரும் (வயது 32) கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11.09.2016) மீட்கப்பட்டன.

இக்கொலை தொடர்பான சந்தேக நபர்களில் முக்கிய சூத்திரதாரி கைது செய்யப்பட்டிருக்கின்ற போதும் பல மறைமுகமான பணப்பரிமாற்றங்கள், அரசியல் அழுத்தங்கள் காரணமாக நீதி விசாரணையில் தலையீடுகள் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே தாங்கள் இத்தகைய மாபெரும் மக்கள் எதிர்ப்பு ஹர்த்தால் மற்றும் கடையடைப்புக்கும் தள்ளப்பட்டிருப்பதாக சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த ஹர்த்தால் கடையடைப்பு எந்த விதமான வன்முறைகளும் அற்ற விதத்தில் மனித சங்கிலிப் போராட்டமாக அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை ஹர்த்தால் மேற்கொள்ளப்படுகின்ற அதேவேளை ஊர் மக்கள் நோன்பு நோற்று பிரார்த்தனைகளில் ஈடுபடுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, ஏறாவூர்ப் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் திங்கள் மாலை மற்றும் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்யப்பட்ட, படுகொலைச் சம்பவத்தின் மிக முக்கிய சூத்திரதாரிகள் என சந்தேகிக்கப்படும் இருவரையும் தொடர்ந்து 24 மணித்தியாலங்களுக்கு பொலிஸ் விசாரணையில் வைத்திருக்க ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவு வழங்கியுள்ளது.

பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய இச்சந்தேக நபர்களை மேலும் ஒரு நாள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2 சந்தேக நபர்களும் புதன்கிழமை (செப்ரெம்பெர் 21, 2016) நீதிபதி எம்.ஐ.எம். றிஸ்வி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட 32 வயதுடைய பெண்ணினது கணவரின் சகோதரனைக் கைதுசெய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY