(கண்ணீரை வரவழைக்கும் கோரச்சம்பவம்) ஏறாவூரில் கரிநாளாகிய திருநாள் – இரட்டைக் கொலை A-Z

0
20431

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

விடிந்தால் அறபா நோன்பு மறுநாள் ஹஜ்ஜுப் பெருநாள் ஆனால், அதைத்தான் பாவிகள் கொண்டாட விடவில்லையே! இரண்டு அப்பாவி உயிர்களைக் காமுகர்கள் வன்கொடுமை புரிந்து கொன்றொழித்து விட்டார்களே!

‘ஏறாவூர் முகாந்திரம் வீதி முதலாவது ஒழுங்கையில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்டு விட்டார்கள்’ என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (11.09.2016) நண்பகல் வேளை ஏறாவூர் முழுக்க கைப்பேசிகள் மூலம் குறுந்தகவல்கள் பரவ ஆரம்பித்தன.

தகவல்கள் பரிமாறப்பட்டுக் கொண்டிருக்கும்போதே ஏன் இந்த அநியாயம் நடந்தது? யாருக்கு நடந்து? என்ற துயரம் நிறைந்த பல கேள்விகளுடன் மக்கள் உரிய இடத்தை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அங்கு ஓடிச் சென்றவர்களை ‘குற்றச் செயல் நடந்த பிரதேசம், உட் செல்லத் தடை’ என்று வீட்டைச் சுற்றி பொலிஸாரால் கட்டப்பட்ட மஞ்சள் நிறப் பட்டி குற்றச் செயல் நடந்த இடத்தை நெருங்க விடாமல் மக்களைத் தடுத்திருந்தது.
அங்கு சோகத்தில் திரண்டிருந்தோர் ‘ஓதித்தாற உம்மாவையும், ஜெனீரா பபாவையும் கொன்று விட்டார்களே!’ என்று துயரமாய் முணுமுணுத்துக் கொண்டார்கள்.

நீதிபதி ஸ்தலத்திற்கு வந்து விசாரணைகளை முடித்துச் செல்லும்வரை எவரும் படுகொலை இடம்பெற்ற வீட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

ஓதித்தாற உம்மாவின் வீட்டிற்குள்ளும் வளவுக்குள்ளும் பொலிஸாரும், மோப்ப நாய் பிரிவினரும், விஷேட துப்பறியும் அணியினரும், நீதிபதியும் என எல்லோரும் பரபரப்புடன் நிறைந்திருந்தார்கள்.

வழமையாக அமைதியாக இருக்கும் ஓதித்தாற உம்மாவின் தெரு அன்று அல்லோலகல்லோலப்பட்டு அமைதியிழந்திருந்தது.

‘எங்கே போவதென்றாலும் ஓதித்தாற உம்மாவும் மகளும்தான் ஒன்றாகப் போவார்கள். அதுபோல அவர்களது மறுமையை நோக்கிய பயணமும் ஒன்றாகவே பீஸபீல் மௌத்தில் (இறைவனின் பாதையில் ஏற்படுகின்ற மரணம்) முடிந்து விட்டது’ எனக் கூறி கருணையுள்ள உள்ளங்கள் பல கண்கலங்கத் தொடங்கின.

ஓதித்தாற உம்மா என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் ஸாலிஹான (சிறந்த) பெண்மணிதான் 56 வயதான நூர்முஹம்மது உஸைரா.

இந்தப் பிரதேசத்திலுள்ள பெரும்பாலானோருக்கு இவர் அல்குர்ஆனை எழுத வாசிக்கக் கற்றுக் கொடுத்தார் என்பதால்தான் இந்த ஓதித்தாற உம்மா எனும் பெயர் இவரோடு ஒட்டிக் கொண்டது.

உஸைராவின் கணவர் யூசுப் ஒரு ஆசிரியர். உஸைரா யூசுப் தம்பதிகளுக்கு ஜெனீரா பானு எனும் ஒரேயொரு மகள் (தற்போது வயது 32). ஜெனீரா பானு கைக்குழந்தையாக இருக்கும்போதே தந்தை யூசுப் மரணித்து விட்டார்.

கணவர் மரணித்த பிறகு கணவரது சம்பளத்திலும் மற்றும் தையல் போன்றவற்றைச் செய்தும் ஜீவனோபாயத்தை நடாத்தி வந்தார் உஸைரா.

ஏறாவூர் 6ஆம் குறிச்சி முகாந்திரம் வீதியின் முதலாம் குறுக்கில் இவர்களின் வீடு அமைந்துள்ளது. அங்கு தாயும் மகளும் ஒன்றாகவே வசித்து வந்தார்கள்.
அது எப்போதுமே ஒரு அமைதியான தெருதான். பொதுவாக சன நடமாட்டம் என்பதே இருக்காது.

உஸைரா தனது மகள் ஜெனீரா பானுவுக்கு கடந்த 2010.10.10 இல் மாஹிர் என்பவரைத் திருமணம் முடித்துக் கொடுத்தார்.

திருமணத்தின் பின்னர் மாஹிர் மத்திய கிழக்கு நாடான கட்டாருக்குத் தொழில் வாய்ப்புப் பெற்றுச் சென்று விட்டார். கணவன் இடைக்கிடை இலங்கைக்கு வந்து செல்வதுண்டு. ஜெனீரா பானுவும் இவ்வாண்டின் துவக்கத்தில் தனது கணவன் தொழில் புரியும் கட்டார் நாட்டுக்குச் சென்று 3 மாதங்கள் கணவனுடன் தங்கியிருந்து விட்டு வந்திருக்கின்றார்.

இந்தப் படுகொலை நடக்கும் தருணம்வரை ஜெனீரா பானுவும் அவரது தாயும் தமது வீட்டிலேயே வாழ்ந்து வந்துள்ளார்கள்.

தாயையும் மகளையும் பகலிரவு சன நடமாட்டமுள்ள வேளைகளில் கண்ணில்படும்படி எவரும் காண முடியாது என்று அயலவர்கள், உறவினர்கள் நண்பர்கள் என எல்லோரும் கூறுகின்றார்கள்.

தாய் தனது சகோதரர்களைத் தவிர ஆண்களின் பார்வையில் படுமளவுக்கு நடமாடியதே இல்லை. அந்தளவுக்கு கண்ணியமும், அமைதியும் நிறைந்ததாக அவர்களது நாளாந்த வாழ்க்கை அமைந்திருந்தது என எல்லோரும் பெருமைப்பட்டுக் கூறிக் கொள்கின்றனர்.

தவிர்க்க முடியாத காரணங்களால் வீட்டுக்கு வரும் ஆண்களுடன் பேச வேண்டுமாக இருந்தால் திரைக்குப் பின்னால் இருந்துதான் ஓதித்தாற உம்மா பேசுவார்.

இப்படிப்பட்ட ஒரு சிறந்த தாய்க்கும், சிறந்த பண்புகளுள்ள மகளுக்கும் நடந்த கொடூரத்தை எண்ணித்தான் இன்றளவும் ஏறாவூர் மக்கள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

படுகொலைகளும், இரத்தக் கறைகளும், அகதி வாழ்க்கையும் ஏறாவூர் மக்களுக்குப் புதிதல்ல என்றாலும் தற்போதைய அமைதி நிலவும் காலத்தில் தாயும் மகளும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பது துயரத்தை வரவழைக்கின்றது.

உஸைராவின் காருண்யத்தைப் பற்றி அவரோடு பழகியவர்கள் உள்ளத்தை உருக்கும் பல கதைகளைக் கூறுகின்றனர்.

ஒருமுறை தெருவைக் கடந்த ஒரு கட்டுப்பெட்டி ஆமைக்குட்டி வாகனத்தில் அடிபட்டு காயம்பட்டு உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்ததைக் கண்ட உஸைரா அதனைப் பத்திரமாக வீட்டுக்கு எடுத்துச் சென்று 6 மாதங்களாக கைவைத்தியம் செய்து பராமரித்து அது குணமடைந்ததும் ஓடவிட்டார் ஆயினும் அந்த ஆமை அவர்களது வீட்டை விட்டு நகரவே இல்லை. அந்த ஆமைக்குப் பெயரும் வைத்தார் உஸைரா. பேர் சொல்லி அழைத்ததும் ஆமை உஸைராவின் பக்கத்தில் வந்து சேர்ந்து விடும்.

அதுபோல, வீட்டு வளவிலுள்ள மரத்தில் உள்ள காகங்களின் கூட்டிலிருந்து ஒரு குஞ்சு பலமான காற்றின் காரணமாக கீழே விழுந்து விட்டது. காயம்பட்ட அந்தக் காகக் குஞ்சையும் உஸைரா நீண்ட நாட்களாகப் பராமரித்து பறக்க விட்டதும் காகமும் உஸைராவை விட்டு நகர மறுத்து விட்டது.

கடைசியாக உஸைரா இறக்கும் வரை அவர் செல்லமாக வளர்த்த பூனை இவர்கள் படுகொலை செய்யப்பட்ட நாளிலிருந்து பக்கத்து வளவிலுள்ள பற்றைகளுக்குள் போய் படுத்துக் கொண்டு பல நாட்களாக உண்ண மறுத்து வாடிப்போய் திரிந்ததாக பலரும் இப்போது கண்கலங்கிச் சொல்கிறார்கள்.

இதேமாதிரியான சோகத்தில்தான் உஸைராவின் உறவினர்களும், உறவினரல்லாத, உஸைராவின் சிறந்த பண்புகளை அறிந்த பலரும் அவரின் இழப்பையிட்டு இன்னமும் வாடிக்கொண்டிருக்கின்றார்கள்.

11.09.2016 இரவு 11.30 மணிவரை தாயும் மகளும் தனது வீட்டுக்கு வந்து பேசிக் கொண்டிருந்து விட்டுச் சென்றதாக இவர்கள் வசித்த வீட்டுக்கு முன்னாலுள்ள வீட்டில் வசிக்கும் அயலவரான பாயிஸா எனும் பெண்மணி தெரிவித்தார்.

வழமையாக இரவு வேளையில் தாயும் மகளும் வந்து பேசிக் கொண்டிருந்து விட்டு அவர்களது வீட்டுக்குச் செல்வார்கள் என்றும் அவர் கூறினார்.

மறுநாள் (ஞாயிறு 11) அறபா நோன்பு தினமாகையால் தாங்கள் இருவரும் நோன்பை நோற்பதற்கான ஆயத்தங்களிலீடுபட வேண்டும் என்று கூறி விட்டுச் சென்றதாகவும் பாயிஸா கூறினார்.

வீட்டுக்குச் சென்ற ஜெனீராபானு தனது தோழிகளுக்கு அறபா தின நோன்பின் மகிமையைப் பற்றியும் தவறாமல் அந்தப் புனித நோன்பை நோற்குமாறும் குறுந்தகவல் அனுப்பியிருக்கின்றார்.

அதேவேளை ஞாயிறு (12.09.2016) அதிகாலை 1.30 மணியிலிருந்து கட்டார் நாட்டிலுள்ள தனது கணவருடன் 14 நிமிடங்கள் 14 செக்கன்கள் பேசியிருக்கின்றார்.

ஞாயிறு காலை 7.30 மணியளவில் உஸைராவின் சகோதரரான அப்துல் வாஹித் என்பவர் உஸைராவின் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டு வெளி மின் விளக்குகள் எரிந்து கொண்டிருந்துள்ளன. வீட்டின் வெளி வாயிற் கதவு பூட்டப்பட்டுக் கிடந்துள்ளது.

தொலைபேசி பேசி மூலம் அழைப்பை ஏற்படுத்த அது பதிலின்றிக் காணப்பட்டுள்ளது.

எனவே, திரும்பிச் சென்றுள்ளார், மீண்டும் அவர் காலை 8.30 மணியளவில் வந்து பார்த்த போதும் அதே நிலைமைதான்.

மீண்டும் அவர் காலை 10.30 மணிக்கு வந்துள்ளார். அப்பொழுதும் அதே நிலைமைதான் காணப்பட்டுள்ளது.

எனவே, பக்கத்து வீட்டாரிடம் இது பற்றிக் கூறி வீட்டு மதிலால் எட்டிப் பார்த்தபோது சமையலறைப் பக்க வீட்டுக் கதவு திறந்து கிடந்துள்ளது. பின்னர் வீட்டு மதிலால் ஏறி வீட்டினுள்ளே சென்று பார்த்தபோது தனது சகோதரியும், மருமகளும் வீட்டு விறாந்தையில் கொல்லப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் வஹாப் மயங்கி வீழ்ந்துள்ளார்.

இதுபற்றி உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்ததும் சற்று நேரத்தில் பொலிஸார் பிரசன்னமாகி விட்டனர். அதனைத் தொடர்ந்து மோப்ப நாய் அணியும், குற்றச் செயல் நடந்த இடத்தில் விசாரணை செய்யும் ‘சோகோ’ அணியும் மட்டக்களப்பிலிருந்து விரைந்து வந்தனர்.

ஸ்தலத்திற்கு விஜயம் செய்து கொலை இடம்பெற்ற சூழ்நிலைகளை அவதானித்த மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதிபதி சி. சின்னையா சடலத்தை சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.

அதன் பின்னர் தாயினதும் மகளினதும் ஜனாஸாக்கள் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

தடயவியல் நிபுணர்கள் கொலை நடந்த இடத்தில் காணப்பட்ட கதவின் தாழ்ப்பாள், கைத்தொலைபேசிகள் 3, பிளாஸ்ரிக் தண்ணீர் போத்தல், பாதணி உட்பட இன்னும் சில பொருட்களை தடயங்களாக எடுத்துச் சென்றனர்.

விடுமுறையில் சென்றிருந்த நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரி (Consultant Judicial Medical Officer) சாலக பெரேரா கடமைக்குத் திரும்பிய நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் (செப்ரெம்பெர் 13, 2016) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைகள் ஆரம்பித்தன.

ஜெனீரா பானுவின் ஜனாஸா முதலில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அது பிற்பகல் 2 மணிக்கு முடிவுக்கு வந்தது.

பின்னர் அவரது தாயின் ஜனாஸா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதன் மீதான பரிசோதனை மாலை 6 மணிக்கு முடிக்கப்பட்டது.

‘தலைப்பகுதியில் பலமான தாக்குதல் இடம்பெற்றதன் காரணமாக மண்டையோடு பிளந்து அதிக இரத்தப் போக்கு இடம்பெற்றதால் மரணம் சம்பவித்துள்ளதாக’ பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, தாயினதும் மகளினதும் உடற்பாகங்கள் மற்றும் இரத்த மாதிரி என்பன இரசாயனப் பகுப்பாய்வுக்காக கொழும்பு இரசாயானப் பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான அறிக்கை 3 வாரகாலத்துக்குள் கிடைக்குமெனவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

ஒரே குழியில் தாயினதும் மகளதும் ஜனாஸாக்கள் நல்லடக்கம்

பிரேத பரிசோதனைகள் நிறைவு பெற்றதும் உடலங்கள் தாமதமின்றி ஏறாவூர் காட்டுப் பள்ளி மையவாடியில் ஊரே சோக மயமாகியிருக்க இரவு 9 மணியளவில் (செப்ரெம்பெர் 13, 2016) ஒரேகுழியில் அருகருகே நல்லடக்கம் செய்யப்பட்டன.

அங்கு பிரார்த்தனை நிகழ்வுகளில் கலந்து கொண்ட உறவினர் மற்றும் உறவினரல்லாத ஆயிரக்கணக்கானோர் விம்மியழுது புலம்பி நின்றதை அவதானிக்க முடிந்தது.

கண்டனம் தெரிவிப்பு

படுகொலை செய்யப்பட்ட அப்பாவிகளான தாய் மற்றும் அவரது மகள் ஆகியோருக்கு சொர்க்கலோக வாழ்வு சௌபாக்கியம் நிறைந்ததாக அமைந்து விட வேண்டும் என்று நாங்கள் இந்த துயர வேளையிலே உள்ளம் உருகி இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் என ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம். ஷயீட் தெரிவித்தார்.

இழப்புக்களைச் சந்தித்த அன்னார்களது குடும்பத்திற்கு அல்லாஹ்வின் அருளும் மன அமைதியும் கிட்ட வேண்டும்.

கணவனை இழந்த தாயும் தந்தையை இழந்த மகளும் மிருக வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டிருப்பதனை ஈவிரக்கமுள்ள அனைத்து உள்ளங்களும் கண்டிக்கின்றன.

தியாகத் திருநாளான ஹஜ்ஜுப் பெருநாளை எதிர்பார்த்திருந்த நமக்கு இந்த இரு ஜீவன்களும் படுகொலையாளிகளின் கைகளில் சிக்கி தங்களைத் தியாகம் செய்து கொண்டு நம்மை விட்டுப் பிரிந்து சென்று விட்டார்கள்.

அதனால் எதிர்பாராத சோகத்தில் இந்த ஊர் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. சகித்துக் கொள்ள முடியாத இந்த வேளையிலே உள்ளக் குமுறலுடன் இருக்கின்றோம்.

கொலையாளிகளைக் கண்டு பிடித்து அவர்களுக்குத் தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று அவாவுறுகின்றோம்.

பொலிஸார் இந்த விடயத்திலே தங்களை முழுமையாக அர்ப்பணித்து இரவு பகல் என்று பாராது உணவு, தூக்கம் இன்றிக் கூட எவ்வாறேனும் கொலையாளிகளைக் கண்டு பிடித்து விட வேண்டும் என்பதில் மிகக் கவனம் எடுத்துச் செயற்படுகின்றார்கள். அவர்களை நாம் மனதாரப் பாராட்டுகின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்தும் வரை ஓயப்போவதில்லை. மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தினேஸ் கருணானாயக்க தாயையும் மகளையும் படுகொலை செய்த குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்தும் வரை ஓயப்போவதில்லை. என மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தினேஸ் கருணானாயக்க சூளுரைத்திருந்தார்.

உண்மையை மறைத்து குற்றவாளிகளைத் தப்ப விடுவதால் எமது எதிர்கால சமுதாயம் பாதிக்கப்படுவதோடு சட்டமும் ஒழுங்கும் சீர் குலையும். அவநம்பிக்கையும் அச்சமும் பீதியும் ஏற்படும். எனவே, இந்த விடயத்தில் பொதுமக்களை ஒதுங்கியிருக்க வேண்டாம் என நாம் உருக்கமாகக் கேட்டுக் கொள்கின்றோம்.

ஏறாவூர் மக்களுக்கு ஏற்பட்ட அச்சத்தைப் போக்க எம்மாலான சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்’ என்றாரவர்.

விசாரணைகள் பல கோணங்களில்

விசாரணைகள் பல கோணங்களில் இடம்பெற்று வந்த நிலையில் ஜெனீரா பானுவின் கணவன் மாஹிர் என்பவருடை சகோதரன் பாஹிர் சம்பவம் இடம்பெற்ற பின்னர் பொலிஸாரின் தொடர்ச்சியான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில் கைது செய்யப்பட்டு தற்போது 14 நாள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

படுகொலைச் சம்பவம் இடம்பெறுவதற்கு (செப்ரெம்பெர் 10, நள்ளிரவு 11 அதிகாலை -2016) முன்னரும் அதன் பின்னரும் மோட்டார் சைக்கிளொன்று படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற வீடு அமைந்துள்ள வீதிக்கு அருகில் பலமுறை நடமாடித் திரிவது கண்காணிப்பு காணொளிப் பதிவில் இருந்தது.

இந்த தெருவின் ஒரு புறத்திலுள்ள பலசரக்குக் கடையொன்றின் முன்னால் வீதியைக் கண்காணித்தவாறு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காணொளிப் பதிவில் மோட்டார் சைக்கிள் ஒன்றின்; நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தப் படுகொலை இடம்பெற்ற வீடு அமைந்துள்ள பகுதியின் மற்றொரு பாதையினூடாகவும் குறித்த மோட்டார் சைக்கிள் 4 தடவைகள் நடமாடித் திரிவது கண்காணிப்பு காணொளிப் பதிவில் அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் சைக்கிளின் இலக்கம் தெளிவாகத் தெரியாத போதும் மோட்டார் சைக்கிளில் தென்பட்ட நபரை அவதானித்த ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்பு புலனாய்வு அதிகாரி சார்ஜன்ற் ஈசாலெப்பை பதூர்தீன் எனும் அதிகாரியின் தனிப்பட்ட தகவலாளி வழங்கிய துப்புத் தகவல்களை வைத்து அந்த மர்ம நபர் துல்லியமாகக் கைது செய்யப்பட்டார்.
தனிப்பட்ட தகவலாளி காணொளிப் பதிவில் காணப்பட்ட நபரை மிகத்துல்லியமாக அடையாளம் கண்டு வழங்கிய தகவலின் அடிப்படையில் மர்ம நபரின் தொலைபேசிக்கு அவரது நண்பனைக் கொண்டு தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.

அதன் மூலம் அவர் படுகொலை இடம்பெற்ற பின்னர் தப்பித் தலைமறைவாகி மூதூருக்குச் சென்றது தெரிய வந்தது.

எனினும், மர்ம நபரின் நண்பனான தனிப்பட்ட தகவலாளியைக் கொண்டு அவரை அழைப்பித்ததும் மர்ம நபர் மூதூரிலிருந்து பஸ்ஸில் பயணிப்பது தெரிய வந்தது.

பஸ் எந்த வழியால் பயணிக்கிறது என்பதைத் துல்லியமாக அறிந்து கொண்ட புலனாய்வு அதிகாரி சார்ஜன்ற் ஈசாலெப்பை பதூர்தீன் பஸ்ஸை ஓட்டமாவடிக்கும் நாவலடிக்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து வழிமறித்து சோதனை செய்து மர்ம நபரைக் கைது செய்தார்.

அந்தக் கைதுதுதான் மர்மக் கொலையில் முதல் திருப்பமாக அமைந்தது.

ஏறாவூரைச் சேர்ந்த 29 வயதான அந்த நபரே ஏனைய சந்தேக நபர்களை அடையாளம் காட்டியதோடு மோட்டார் சைக்கிள் மற்றும் கொலை இடம்பெற்ற சமயம் அணிந்திருந்த இரத்தக் கறை படிந்த சேர்ட் என்பவை எங்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன என்ற தகவலைக் கக்கினார்.

இதன்படி ஏறாவூர் இரட்டைக் கொலை சம்பவத்தோடு நேரடியாகத் தொடர்புபட்ட கொலையாளி தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிளும் இரத்தக் கறை உடைகளும் திருகோணமலை முள்ளிப்பொத்தானையில் உள்ள 10ஆம் கொலனி வீடொன்றில் வைத்து சனிக்கிழமை (18.09.2016) இரவு கைப்பற்றப்பட்டது.

ஏறாவூர் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு சார்ஜன்ற் ஈஸாலெப்பை பதூர்தீன் தலைமையில் சென்ற எம்.ஏ.எம். அஸீஸ் மிஸ்பாஹ், எம்.ஐ. அப்துல் றஸ்ஸாக் ஆகியோரடங்கிய குழுவினர் இவற்றைக் கைப்பற்றினர்.
இது தேடுதலில் பெரிய திருப்பத்தையும் சான்று மற்றும் தடயங்களையும் கிடைக்கச் செய்துள்ளதால் குற்றச் செயல் வலைப்பின்னல் பற்றி மேலும் அறிந்து கொள்ள உதவியுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவு சார்ஜன்ற் பதூர்தீன் தெரிவித்தார்.

இதனிடையே கொலைச் சம்பவம் இடம்பெற்ற சூழ்நிலையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவரும் பின்னர் கைது செய்யப்பட்டவருமான நபர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் ஓட்டமாவடி மற்றும் ஏறாவூர் பகுதிகளைச் சேர்ந்த மேலும் இருவர் சனிக்கிழமையன்றே உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.

‘குற்றவாளிகளுக்காக எதுவும் வேண்டாம்’

படுகொலைக் குற்றவாளிகளுக்காக ‘சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகக் கூடாது, அவர்களுக்கு நீதிமன்றம் பிணைவழங்கக் கூடாது’ எனக் கூறும் பதாதைகளைத் தாங்கியவாறு ஏறாவூரில் சனிக்கிழமை மாலை ஏறாவூர் பொலிஸ் நிலையமருகே திரண்ட பல நூற்றுக்கணக்கான பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கொலைச் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த சமயம் பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தைச் சூழ்ந்து கொண்டு இந்தக் கோரிக்கைகளை முன் வைத்தனர்.

சந்தேக நபர்கள் மூவரும் திங்களன்று 19.09.2016 மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது பொலிஸாரின் வேண்டுகோளுக்கிணங்க சந்தேக நபர்களை மேலும் ஒரு நாள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கியிருந்தார்.

அதனடிப்படையில் பொலிஸார் தொடர்ச்சியான விசாரணைகளில் ஈடுபட்டு வரும் வேளையில் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் தகவலொன்றின் பேரில் திங்கட்கிழமை மாலை ஏறாவூர் வாவிக்கரையோரத்தில் மறைந்திருந்த முக்கிய சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு அவரிடமிருந்து கொல்லப்பட்ட இரு பெண்களினதும் வீட்டில் களவாடப்பட்ட தங்கச் சங்கிலி மற்றும் பென்ரனும் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து திருகோணமலை மாவட்டம் முள்ளிப்பொத்தானை 10ஆம் கொலனிக்கு ஒரு கிலோமீற்றர் தொலைவில் உள்ள காடுகளடர்ந்த பகுதியொன்றின் பாழடைந்த வீடொன்றிலிருந்து திங்கட்கிழமை இரவு (19.09.2016) மேலும் ஒரு தொகை நகைகள் மீட்கப்பட்டதாகவும் அந்த நகைகளும் கொலை இடம்பெற்ற வீட்டில் திருடப்பட்டவை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களின் சூத்திரதாரி எனக் கருதப்படும் பிரபல நபர் ஒருவர் ஏறாவூர் நகர மத்தியில் மறைந்திருந்த சமயம் செவ்வாய்க்கிழமை (20.09.2016) காலை 6.30 மணியளவில் புலனாய்வுப் பொலிஸாரினால் மிகச் சாதுரியமாக மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸ் நிலையம் கொண்டு வரப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மர்மக் கொலையைக் கண்டு பிடிப்பதற்கென்று பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கிணங்க கொலையாளிகளைத் தேடி 17 விஷேட பொலிஸ் குழுக்களும் 80 இற்கு மேற்பட்ட புலனாய்வு உத்தியோகத்தர்களும் இரவு பகலாக புலன் விசாரணைகளில் ஈடுபட்டிருந்தனர்.

(நன்றி தமிழ் மிரர் நாளிதழ் 21.09.2016)

LEAVE A REPLY