ஏறாவூர் இரட்டைப் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட முக்கிய சூத்திரதாரி உட்பட மேலும் ஒருவர் கைது, நகைகள் மீட்பு.

0
5031

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஏறாவூரில் கடந்த (11.09.2016) ஞாயிறன்று அதிகாலை இடம்பெற்ற படுகொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் முக்கிய இருவர் திங்கட்கிழமை மாலையும் செவ்வாய்க்கிழமை காலையும் (20.09.2016) கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தகவலொன்றின் அடிப்படையில் திங்கட்கிழமை மாலை ஏறாவூர் வாவிக்கரையோரத்தில் மறைந்திருந்த முக்கிய சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு அவரிடமிருந்து கொல்லப்பட்ட இரு பெண்களினதும் வீட்டில் களவாடப்பட்ட தங்கச் சங்கிலி மற்றும் பென்ரனும் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து திருகோணமலை மாவட்டம் முள்ளிப்பொத்தானை 10ஆம் கொலனிக்கு ஒரு கிலோமீற்றர் தொலைவில் உள்ள காடுகளடர்ந்த பகுதியொன்றின் பாழடைந்த வீடொன்றிலிருந்து திங்கட்கிழமை இரவு மேலும் ஒரு தொகை நகைகள் மீட்கப்பட்டதாகவும் அந்த நகைகளும் கொலை இடம்பெற்ற வீட்டில் திருடப்பட்டவை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களின் சூத்திரதாரி எனக் கருதப்படும் பிரபல நபர் ஒருவர் ஏறாவூர் நகர மத்தியில் மறைந்திருந்த சமயம் செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணியளவில் புலனாய்வுப் பொலிஸாரினால் மிகச் சாதுரியமாக மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸ் நிலையம் கொண்டு வரப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேக நபர்களும் திங்களன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது பொலிஸாரின் வேண்டுகோளுக்கிணங்க சந்தேக நபர்களை மேலும் ஒரு நாள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கியிருந்தார்.

அதனடிப்படையில் பொலிஸார் தொடர்ச்சியான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண்ணான ஜெனீரா பானுவின் கணவனான மாஹிர் என்பவரின் சகோதரன் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை நீதி மன்றத்தில் ஆஜராக்கப்பட்டு 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவு ஏறாவூர் நகர் முகாந்திரம் வீதி முதலாவது ஒழுங்கையில் உள்ள வீட்டில் ஒன்றாக வசித்து வந்த நூர்முஹம்மது சித்தி உசைரா (வயது 56) மற்றும் அவரது மகளான ஜெனீரா பானு மாஹிர் (வயது 32) ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மர்மமான முறையில் பொல்லால் தாக்கப்பட்ட நிலையிலும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையிலும் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கிணங்க கொலையாளிகளைத் தேடி 17 விஷேட பொலிஸ் குழுக்களும் 80 இற்கு மேற்பட்ட புலனாய்வு உத்தியோகத்தர்களும் இரவு பகலாக புலன் விசாரணைகளில் ஈடுபட்டிருந்தனர்.

LEAVE A REPLY