சவூதி அரேபியாவுக்கான பிரித்தானிய தூதுவர் இஸ்லாத்தைத் தழுவினார் – புனித ஹஜ்ஜையும் நிறைவேற்றினார்.

0
304

(எம்.ஐ.அப்துல் நஸார்)

இவ்வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்றிய பத்தொன்பதாயிரம் பிரித்தானிய யாத்திரிகர்களுள் பிரித்தானிய தூதுவர் சிமொன் போல் கொலிஸ் மற்றும் அவரது மனைவி ஹுதா முஜார்கெச் ஆகியோரும் உள்ளடங்கியிருந்தனர்.

அவர் இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டமை சில இராஜதந்திரிகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் மாத்திரமே தெரியும். அவர் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டமை தெரியும் ஆனால் அது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

சவூதி எழுத்தாளரும் கல்வியியலாளருமான பௌஸியா அல்-பக்ர் (@fswziah1) கடந்த செவ்வாய்க்கிழமை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் ஒன்றின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. பிரித்தானிய தூதுவர் சிமொன் போல் கொலிஸ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இஹ்றாம் உடை அணிந்த நிலையில் காணப்படும் இரண்டு புகைப்படங்களை அவர் பதிவேற்றியிருந்தார்.

பிரித்தானிய தூதுவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் மூலம் (@HMASCollis) அல்-பக்ருக்கு நன்றி தெரிவித்து பதிவொன்றை இட்டிருந்தார். பிரித்தானிய தூதுவரின் மனைவி (@HudaMCllis)அல்-பக்ரின் பதிவினை மீள்பதிவேற்றம் செய்திருந்தார்.

கொலிஸ் கடந்த புதன்கிழமை ஊடகங்களுக்கு பேட்டியளிப்பதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தபோதிலும், ‘முப்பது வருடங்களாக முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் வாழ்ந்ததன் பின்னர், ஹுதாவைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னதாக நான் இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டேன்’ எனத் தெரிவித்தார்.

சேர் ஜோன் ஜென்கின்ஸ் இராஜதந்திர சேவையிலிருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து கடந்த வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் சவூதி அரேபியாவுக்கான பிரித்தானிய தூதுவராகக் கொலிஸ் கடமையாற்றி வருகின்றார். இந்தப் புகைப்படங்கள் டுவிட்டர், முகநூல், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டகிராம் ஆகிய சமூக வலைத் தளங்களில் வேகமாகப் பரவிவருகின்றது.

தூதுவருக்கும் அவரது மனைவிக்கும் முதன்முதலாக இருவர் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர். இளவரசர் பஸ்மாஹ் பிந்த் சௌத் (@PrincessBasmah) “தூதுவருக்கும் அவரது மனைவிக்கும் விசேடமான வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டிருந்ததற்கு. ‘நன்றி இளவரசர் பஸ்மாஹ்’ என தூதுவர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தி பிரித்தானிய யாத்திரிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

‘வரலாற்றுச் சிறப்புமிக்க தனது ஹஜ் கடமையினை நிறைவேற்றிக்கொண்ட தூதுவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்’ என பிரித்தானிய ஹாஜிகளுக்கான சபையின் தலைமை நிறைவேற்று அலுவலரான றசீட் மொக்ராடியா தெரிவித்தார். ‘ஈமானியப் பயணத்தில் ஹஜ்ஜை நிறைவேற்றிய ஆயிரக்கணக்கான பிரித்தானிய யாத்திரிகர்களுள் அவரும் ஒருவராவார். அவர் எங்களுக்கு ஊக்கம் தரும் விதத்தில் தனது அனுபவங்களை எம்மோடு பகிர்ந்து கொள்வார் என எதிர்பார்க்கின்றோம்’ என அவர் மேலும் தெரிவித்தார்

விசேடமாக மேற்குலகில் இஸ்லாத்திற்கெதிராகவும், முஸ்லிம்களுக்கெதிராகவும் மோசமான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், பிரித்தானிய தூதுவர் இஸ்லாத்தைத் தழுவியமையினை உலகளாவிய இஸ்லாமிய அழைப்பின் சான்றாக இஸ்லாமிய விசுவாசிகள் கருதுகின்றனர்.

கொலிஸ் அரபு மொழியில் சரளமாகப் பேசக்கூடியவர். 1978 ஆம் ஆண்டு அவர் பிரித்தானிய வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தில் இணைந்தார். அரபு மொழியைக் கற்றதன் பின்னர் பிரதானமாக அரபு நாடுகளில் பணியாற்றினார்.

ஐந்து பிள்ளைகளின் தந்தையான அவர் முதன் முதலாக பஹ்ரைனுக்கான இரண்டாவது செயலாளராக நியமிக்கப்பட்டார் (1981 – 1984). ஈராக்கிற்கான பிரித்தானியத் தூதுவராக 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரை கடமையாற்றியுள்ளார். சிரியாவுக்கான பிரித்தானியத் தூதுவராக 2007ஆம் ஆண்டு தொடக்கம் 2012ஆம் ஆண்டு வரை கடமையாற்றியுள்ளார். கட்டாருக்கான பிரித்தானியத் தூதுவராக 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2007ஆம் ஆண்டு வரை கடமையாற்றியுள்ளார்.

2000ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரை துபாயில் பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகராகவும் 2004 ஆம் ஆண்டு தொடக்கம் 2005ஆம் ஆண்டு வரை பஸ்ராவில் பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகராகவும் கடமையாற்றியுள்ளதோடு 1991ஆம் ஆண்டு தொடக்கம் 1994ஆம் ஆண்டு வரை புது டெல்லியில் முதலாவது செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

LEAVE A REPLY