சமூக மாற்றத்திற்கு டாக்டர் ஆரிப் போன்று துணிச்சலுடன் களமிறங்க துறைசார் நிபுணர்கள் முன்வர வேண்டும்!

0
217

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சமூக சீர்திருத்தத்திற்கும் புரட்சிகரமான மாற்றத்திற்கும் டாக்டர் நாகூர் ஆரிப் போன்று துணிச்சலுடன் தம்மை அர்ப்பணிக்க துறைசார் நிபுணர்கள் அனைவரும் முன்வர வேண்டும் என சிரேஷ்ட ஒளிபரப்பாளரும் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் நாடாளுமன்ற விவகார இணைப்புச் செயலாளருமான அல்ஹாஜ் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கவிஞர் டாக்டர் நாகூர் ஆரிப் எழுதிய “இன்று மாறும் நாளை” கவிதைத் தொகுதி வெளியீடு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை கல்முனை சாஹிரா கல்லூரி எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் நடைபெற்றபோது சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தடாகம் கலை, இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் கவிஞர் நவாஸ் செளபி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

அத்துடன் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல்.அலாவுத்தீன் ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் மட்டக்களப்பு சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவையின் தலைவர் சமூக ஜோதி புரவலர் அல்ஹாஜ் மீராசாஹிப் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

அங்கு ஏ.ஆர்.எம்.ஜிப்ரி மேலும் பேசுகையில்;

“டாக்டர் நாகூர் ஆரிப் தனது முகநூலில் எவருக்கும் அஞ்சாமல் மிகவும் தைரியமாக சமூகப் பிரச்சனைகளை எழுதி வருகின்றார். அவ்வாறு எழுதியவற்றுள் சில கவிதைகளை தேர்ந்தெடுத்து புத்தகத்தை வெளியிடுவது மாத்திரமன்றி, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலயத்தின் விஷேட தேவையுடைய மாணவர்களுக்கு அன்பளிப்புச் செய்ய தீர்மானித்திருப்பது மிகவும் பாராட்டுக்குரிய விடயமாகும்.

இதுவொரு சிறந்த முன்மாதிரியாகும். இதனை எல்லோரும் பின்பற்ற வேண்டும். சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் கல்வியியலாளர்கள், துறைசார் நிபுணர்கள் அலட்டிக் கொள்ளாமல் இருந்து விட முடியாது. சமூக வியாதிகளை ஒழித்து, சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு முன்னிற்க வேண்டியது தமது கடமை என்பதை உணர்ந்து செயற்பட முன்வர வேண்டும். அதற்கு உதாரண புருஷராக டாக்டர் நாகூர் ஆரிப் திகழ்கின்றார். அவர் வழியில்,எல்லோரும் களமிறங்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார்.

இந்நிகழ்வில் எழுத்தாளர்களான எஸ்.எல்.மன்சூர், ஜெஸ்மி எம்.மூஸா நூலாலாய்வுரைகளையும் கலைமகள் ஹிதாயா றிஸ்வி வாழ்த்துறையையும் நிகழ்த்தியதுடன் கவிஞர் வில்லூரான் கவி வாழ்த்து பாடினார். நூலாசிரியரின் புதல்வர் ஏ.அஹமத் ஆரிப் நன்றியுரை நிகழ்த்தினார்.

இதன்போது நூலாசிரியர் டாக்டர் நாகூர் ஆரிப், சாய்ந்தமருது நலன்புரி அமைப்பினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சிரேஷ்ட பிரதித் தலைவர் ஏ.எல்.அப்துல் மஜீத், சாய்ந்தமருது ஜம்மியத்துல் உலமா தலைவர் யூ.எல்.எம்.காசிம் மௌலவி உட்பட மற்றும் பல கல்விமான்கள், எழுத்தாளர்கள், ஊர்ப்பிரமுகர்கள் என பெரும் எண்ணிக்கையானோர் பங்கேற்றிருந்தனர்.

LEAVE A REPLY