தனியார் பஸ்ஸுடன் முற்சக்கர வண்டி மோதியதில் நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதி

0
168

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை-புல்மோட்டை நூரானியா பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ்ஸுடன் முற்சக்கர வண்டி வேகக்கட்டுப்பாட்டை மீறி மோதியதில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த நான்கு பேர் வைத்தியசாலையில் நேற்றிரவு (18) அனுமதிக்கப்பட்டுள்ளதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் முற்சக்கர வண்டியின் சாரதியான புல்மோட்டை-02ம் வட்டாரம் -ரஹ்மானிய்யா நகரைச்சேர்ந்த எம்.சப்ரி (17 வயது) மற்றும் எஸ்.அர்ஜூன் பீவி (45 வயது) எஸ.சபீனா (12 வயது) எஸ்.சஹீலா (18வயது) ஆகியோரே விபத்தில் காயமடைந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது- திருகோணமலையிலிருந்து முல்லைதீவு சென்ற தனியார் பஸ் சென்றுகொண்டிருந்த வேளை வேகமாக வந்த முற்சக்கர வண்டி பின்புறமாகச்சென்று மோதியதினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் மூவர் புல்மோட்டை தள வைத்தியசாலையிலிருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பாக புல்மோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை திருகோணமலை -என்.சீ வீதியில் நேற்று மாலை மோட்டார் சைக்கிளுடன் கெப் வாகனம் மோதியதில் திருகோணமலை-உவர்மலை-கண்ணகிபுரம் பகுதியைச்சேர்ந்த எஸ்.திலகராஷா (50 வயது) படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கெப் வாகன சாரதியான மூதூர்-அக்கறைச்சேனை பகுதியைச்சேர்ந்த எம்.ஆர்.ரம்ஸீன் (30 வயது) என்பவரை கைது செய்துள்ளதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் நிலாவௌி -இக்பால்நகர் பகுதியில் முற்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதே இடத்தைச்சேர்ந்த ஜே.கனேஷ் (37 வயது) காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்துக்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY