கல்குடாவும் மறைந்த தலைவர் அஷ்ரபும் : சுபைரின் அனுபவப்பகிர்வு

0
170

தொகுப்பு: (எம்.என்.எம்.யஸீர் அறபாத்)

unnamedஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இதயம் என வர்ணிக்கப்படும் கல்குடாப் பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸ் முதல் முதலில் காலெடுத்து வைத்த வரலாற்றையும், அதற்கு உந்து சக்தியாக இருந்த போராளிகளையும் நாம் மறந்தாலும், வரலாறு ஒரு போதும் மறக்கப்போவதில்லை.

அவ்வாறான ஒரு போராளியின் கடந்த கால அரசியல் வாழ்க்கையும் இக்கட்சியை கல்குடாவுக்கு கொண்டு வருவதற்காக முழு மூச்சாக நின்று செயற்பட்ட மூத்த போராளி ஆதம் லெப்பை சுபைரின் அனுபவத்தினையும், வரலாற்றையும் நேர்காணலாக இங்கே பகிர்ந்து கொள்வதில் பெருமிதமடைகின்றேன்.

கல்குடாப் பிரதேசத்தில் மீராவோடையைப் பிறப்பிடமாகக்கொண்ட ஆதம் லெப்பை சுபைர் ஆகிய நான், இக்கட்சியை முதல் முதலில் கல்குடாப் பிரதேசத்தில் காலெடுத்து வைப்பதற்கு உறுதுணையாக இருந்ததிருக்கின்றேன் என்ற படியால் உங்கள் வேண்டுகோளுக்கிணங்க சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் என எத்தணிக்கின்றேன்.

1977ம் ஆண்டில் எனக்கு பதினெட்டு வயதிருக்கும் அந்த வயது தொடக்கம் 1985ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் கே.டபிள்யூ.தேவநாயகம் ஐயா அவர்களின் ஆதரவாளராக நான் செயற்பட்டு வந்தேன். 1986ல் எம்.எச்.எம்.அஷ்ரப் என்பவர் முஸ்லிம்களைத் தனித்துவப்படுத்தி கட்சியொன்றை இஸ்தாபித்திருப்பதாகவும், அதன் மூலம் அவர் மக்களை விழிப்புணர்வு செய்து வருவதாகவும் அன்றைய நாட்களில் நான் கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைந்திருக்கின்றேன்.

என் உள்ளத்தில் ஒரு ஆசை இருந்து. அந்தக்கட்சியில் நானும் ஒன்று சேர வேண்டுமென்றும், அவருடன் கை கோர்த்து அந்தக்கட்சியை வளர்க்க வேண்டுமென்பதுமாகும். இத்தனைக்கும் அவரை நான் நேரில் கண்டதுமில்லை. முன் பின் அறிமுகமுமில்லை. இவ்வாறிருக்கும் போது தான், நானும் எனது நண்பர் எஸ்.எம்.ஹுஸைனும் பத்திரிகை வாசிப்பதற்காக அடிக்கடி நூலகம் செல்வது வழக்கம். அவ்வாறு ஒரு நாள் செல்லும் போது தான் அங்கு எதிர்பாராத விதமாக தற்போதய மூத்த எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

அப்போது அவர் மிருக வைத்தியராக இருந்தார். அது மாத்திரமில்லை, அவர் அப்போதும் இளம் எழுத்தாளர் அக்காலத்தில் அவரின் எழுத்தாக்கங்களில் கவரப்பட்ட ரசிகனாகவும் நான் இருந்து வந்துள்ளேன்.

நூலகத்தில் என்னைக்கண்ட அவர், முதலில் என்னிடம் கேட்டார் என்னடா சுபைர்! எமக்கென்று ஒரு கட்சி உருவாகியிருக்கு. நாம் ஏன் எமது ஊரில் ஒரு பொதுக்கூட்டமும் நடத்த முடியாமே இருக்கம் இங்கிருக்கிற அரசியல்வாதிகள் சமூகத்திற்காக எதுவும் செய்யமாட்டாங்க., அவர்களை நம்பியிருந்தால் நாமும் எமது ஊரும் எப்போதும் அரசியல் அநாதையாகவே இருக்க நேரிடும் என்றார். நீங்க எல்லாம் இப்படி இருந்தா எப்படிடாப்பா அரசியல் செய்ரே? என்றும் கேட்டார்.

அவரின் அந்த வார்த்தை என் மனதில் ஏதோ ஒரு வகையில் ஒரு உள் தாக்கத்தை ஏற்படுத்தியது. உடனே அதற்கு நான் என்ன செய்யனும் என்று எதிர்பார்க்கிறீங்க? என்று வினவினேன்.

அதற்கு அவர் நம்மட தலைவரை அதாவது (மர்ஹூம் அஷ்ரப்) அவர்களை நாம் எமது ஊருக்குக்கூட்டி வரனும் இங்கு பொதுக்கூட்டம் ஒன்று போடனும். தலைவரை அறிமுகப்படுத்தனும். நம்மட கட்சியை நாம் தான் பலப்படுத்த வேண்டுமென்று என்னை மென்மேலும் உற்சாகப்படுத்தினார்.

அதற்கு சரி வெள்ளிக்கிழமை கூட்டமென்று போடுவோமா? என்று நானும் என்னுடன் இருந்த எனது நண்பர் ஹுஸைனும் சேர்ந்து கேட்டோம். அதற்கு அவர் ஏழுமாடா? என்று கேட்க நாங்க சொன்னோம் வெள்ளிக்கிழமை கூட்டம் போடுவோம். நீங்க தலைவருடன் பேசுங்க என்றோம்.

அதற்கு அவர் தலைவரை இங்கு கொண்டு வருவது என்னுடைய பொறுப்பு என்று கூறிச்சென்றார். இதன் பின்னர் நாங்கள் கூட்டம் போடுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினோம். கூட்டம் போடுவதற்காக இடம் தேடித்தேடித் திரிந்தோம்.

காலையில் போய் காணியைக் கேட்டால் உரிமையாளர்கள் தருகிறோம் என்பார்கள். மாலையில் மறுத்து விடுவார்கள். இதன் பின்னணியில் உள்ளூர் அரசியல் செயற்பட்டு வந்ததே அதற்கான காரணமாகும்.

இவ்வாறு அலைந்து கொண்டிருக்கையில், வெள்ளிக்கிழமை கூட்டத்துக்கு வர தலைவரும் சம்மதித்து விட்டார் என்ற செய்தி எட்டியவுடன் என்ன செய்வதென்று தெரியாது திக்கு முக்காடிக்கொண்டிருக்கும் போது தான் சேகு முஹம்மது ஜமால்தீன் என்பவர் எங்களை அழைத்து மீரா ஜும்ஆப் பள்ளிவாயலுக்கு முன்னாலுள்ள காடுபத்திக்கிடந்த காணியில் கூட்டத்தை நடத்தச் சொன்னார்.

எவ்வாறு சரி இடம் கிடைத்த சந்தோஷத்தில் காணியை சுத்தம் செய்வதற்கு எங்களுடன் படித்த சுமார் பதினைந்து, இருபது மாணவர்களும் முன் வந்து அந்தப்பணியைச் செய்யலானார்கள். காணி துப்பரவும் செய்யப்பட்டு, கூட்ட ஏற்பாடும் வெகு விமர்சையாக நடைபெற்றதுடன், கூட்டத்தை ஒழுங்குற செய்வதற்காக எங்களுடன் சேர்ந்து எஸ்.எல்.எம்.ஹனிபா அவர்களும் முன் வந்தார். இக்கூட்டத்தை தலைமை தாங்கி வழி நடத்துவதற்காக ஓட்டமாவடி, வாழைச்சேனை போன்ற பிரதேசங்களிலுள்ள முக்கிய பிரமுகர்களையும் அழைத்தோம். ஆனால், சிலர் தலைமை தாங்குவதற்கு ஒத்துழைக்கவில்லை. இன்னும் சிலர் முடியாதென்று மறுத்து தேவநாயகம் ஐயா கோபிப்பார் என்றும் காரணம் கூறினார்கள்.

பின்னர் அந்தக்காலப் பகுதியில் மீராவோடை மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட எனக்கு மாமா முறையுமான எம்.ஐ.எம்.ஹுஸைன் மௌலவியைத் தலைமை வகிக்க அழைத்தோம். அதற்கு அவர் சொன்னார் நான் கிராத் ஓத வேண்டுமென்றால் வாரேன். ஆனால் தலைமை வகிக்க வேறு நபரைப் பாருங்கள் என்று கூறி விட்டார்.

அதன் பின்னர் மீராவோடையை சேர்ந்த முஹம்மது முத்துச்சேர்மன் (தற்பாதைய முஸ்லிம் காங்கிரஸ் கல்குடா மத்திய குழுத்தலைவரின் தந்தை) அவர்களைத்தேடிச் சென்று, அவரிடம் இது தொடர்பாகப்பேசி ஒரு வழியாக சம்மதிக்க வைத்தோம். ஒரு வழியாக கூட்ட ஏற்பாடுகளை முடித்தெடுக்க உள்ளூர் அரசியல் அதிகாரப் பின்னனியினால் அரசியல் கூட்டம் நடத்தக்கூடாதென்று கூட்ட அனுமதி மறுக்கப்பட்டது.

அதனால் நாங்கள் “பதுர் ஸஹாபாக்கள்” தின நிகழ்வு எனப் பெயரிட்டு அனுமதியைப் பெற்ற பின்பு தான் கூட்டத்தை நடாத்தினோம். கூட்ட தினமான வெள்ளிக்கிழமை காலையிலயே தலைவர் அஷ்ரப் அவர்கள் எஸ்.எல்.எம் ஹனிபா அவர்களின் வீட்டிற்கு வருகை தந்தார்.

நாங்கள் அங்கு வைத்து தான் முதன் முதலாக தலைவரைக் கண்டு பேசினோம். அப்போது தலைவர் எங்களைப் பார்த்து ஒரு சில வார்த்தைகளைக் கூறினார். அது இன்னும் எங்கள் காதுகளில் மளிர், மளிர் என ஒழித்துக் கொண்டு தான் இருக்கின்றது. அவர் அன்று சொன்ன வார்த்தைதான் “நாம் சமூகத்திற்காக இறங்கியிருக்கின்றோம்.

நீங்கள் அனைவரும் தியாகஞ்செய்து எங்களுடன் கைகோர்த்து நில்லுங்கள். அப்போது தான் நாம் அரசியல் அதிகாரத்தைப் பெற முடியுமென்று, பின்னர் தலைவர் ஓய்வெடுப்பதற்கேற்றவாறு ஹனிபா அவர்களின் வீடு அந்த காலப்பகுதியில் காணப்படவில்லை.

ஆகையால், தலைவரை ஓய்வெடுப்பதற்கு ஹனிபா அவர்கள் ஓட்டமாவடியிலிருந்த முஸ்தபா வட்டானையின் மகன் சுபைரின் (தற்போதய ஹஸீனா ஹார்ட் வெயார் உரிமையாளர்) இல்லத்துக்கு கூட்டிச் சென்றார். பின்னர் ஜும்ஆத் தொழுகையின் பின்னர் முஸ்தபா வட்டானையின் மகன் சுபைரின் வீட்டிலேயே தலைவருக்கு பகலுணவு தயார் செய்யப்பட்டு, பரிமாறப்பட்டது.

பின்னர் தலைவர் அஷர்த்தொழுகைக்கு மீரா ஜும்ஆப் பள்ளிக்கு வந்து சேர்ந்தார். தொழுகையை முடித்து விட்டு, கூட்டத்துக்கு வந்த தலைவரை அமோக வரவேற்பாக வீதியெங்கும் மக்கள் கூட்டம் தோரனை கட்டி வரவேற்றனர். அன்று ஊர் பெருநாள் போன்றே காட்சியளித்தென்று கூறினாலும் மிகையில்லை. அன்று தான் கல்குடா மண் எங்கும் அஷ்ரப் நாமம் பேசப்பட்டு, பெருந்திரளான மக்களும் ஒரே குரலில் “நாரே தக்பீர்” கூறினார்கள்.

குறிப்பாக, இக்கூட்டத்தில் எஸ்.எல்.எம்.ஹனிபா அவரின் பேச்சும் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது. அன்றிலிருந்து தான் கல்குடா இளைஞர்கள் அணி முஸ்லிம் காங்கிரஸின் பின்னால் முதல் முதலாக அணி திரளத்தொடங்கியது. இக்கூட்டம் சென்று கொண்டிருக்கும் போது, இறுதியாக 8.30 மணி தொடர்க்கம் 10.00 மணி வரை தலைவர் அவர்கள் மிக ஆக்ரோசமாகவும் உணர்ச்சிகரமாகவும் உரை நிகழ்த்தினார். அதில் பெரும்பாலான மக்கள் அவ்வுரையினால் கவரப்பட்டார்கள்.

அன்று தான் கல்குடா சமூகத்தின் எதிர்கால அரசியல் மாற்றங்கள் முதல் முதலாக மாற்றம் காண ஆரம்பித்தது. ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டையாக இருந்த கல்குடா முற்று முழுதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாக மாறியது. தலைவர் தனதுரையில், இறுதியாக கூட்டத்தை ஏற்பாடு செய்த இளைஞர்களுக்கும், ஊர் நலன் விரும்பிகளுக்கும் எங்களுக்கும் நன்றி கூறிச் சென்றார். அன்றையிலிருந்து தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அத்திவாரம் கல்குடா மண்ணில் பலமாக இடப்பட்டது.

அன்று தொடங்கிய எங்களது போராட்டம் இன்றுவரை பல எதிர்ப்பு அரசியலுக்கு மத்தியிலும் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது என்றால், அதற்கு முழுக் காரணமும் மறைந்த பெரும் தலைவர் அஷ்ரப் அவர்களின் விடா முயற்சியுடன் கூடிய தன்னம்பிக்கையே என்றும் கூறலாம்.

அன்று கட்சியை கல்குடாவில் அறிமுகப்படுத்த தலைமை தாங்க மறுத்தவர்கள் எல்லாம் இன்று கட்சியின் அதிகாரங்களை அனுபவித்துக்கொண்டு, சுக போக வாழ்க்கை வாழ்ந்து வருவது வேதனைக்குரிய விடயமே. ஆனால், கடைசியில் எங்களைப் போன்றவர்களுக்கு கிடைத்த நற்பலன் எதுவுமில்லை. வெறும் போராளி என்ற வார்த்தையைத்தவிர, இதுவே எமது ஊருக்கு கட்சி முதல் முதலில் அறிமுகமாகிய வரலாறாகும் என்று கூறி முடித்தார்.

இவர்களைப் போன்ற மூத்த போராளிகளின் தியாகங்களும் அர்ப்பணிப்புக்களுமே கல்குடாவில் இந்தளவுக்கு கட்சி பலம் பொருந்தியிருப்பதற்கு பிரதான காரணமாகும். ஆனால், இன்று சிலர் இக்கட்சியிலிருந்து முகவரி பெற்று அரசியலுக்குள் வந்தவர்கள் எல்லாம் பட்டம், பதவி, சுக போகங்களுக்காக இந்தக் கட்சியை உதசீனப்படுத்தி விட்டு கை விட்டுச் சென்று கட்சிக்கெதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இன்று வரை இந்த சமூகம் பார்த்து கொண்டு தான் இருக்கின்றது.

கட்சியின் வளர்ச்சிக்கு கல்குடா பிரதேசத்தில் உந்து சக்தியாக செயற்பட்ட ஆதம் லெப்பை சுபைர் போன்ற இன்னொறன்ன போராளிகளால் தான் இன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இதயம் என கல்குடா பிரதேசம் வர்ணிக்கப்படுவதற்கு பிரதான காரணியாகும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை.

மிகவும் கலைக்குரிய விடயம் என்னவென்றால், இந்த கல்குடா மண் இவ்வாறான பல மூத்த போராளிகளை தன்னகத்ததே கொண்டிருந்தும் அவர்களுக்கான சரியான அரசியல் வழி நடத்தலும் ஊக்குவிப்பும் இல்லாததுவே. அவர்கள் மெம்மேலும் இக்கட்சிக்காகவும், சமூகத்துக்காவும் களமிறங்கி பணியாற்ற வேண்டும். அதுவே காலத்தின் தேவையாகும் என்பதை இவ்விடத்தில் நான் கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

இவர்களைப் போன்ற கட்சியின் மூத்த போராளிகளை எமது கட்சியும் இனங்கண்டு, அவர்களைக் கௌரவப்படுத்தி, கட்சிக்குள் உள் வாங்க வேண்டும், அது மட்டுமன்றி, அவர்களிடமும் ஆலோசனைகள் பெற்று இந்தக்கட்சியை மென்மேலும் தேசியத்திலும், சர்வதேசத்திலும் வளர்ச்சியின் பாதையில் இட்டுச்செல்ல வேண்டுமென்பதுவே எமது அவாவுடன் கூடிய ஆசையாகும்.

LEAVE A REPLY