பெறுமதி சேர் வற் வரி அதிகரிப்பு; வர்த்தமானி நள்ளிரவு வெளியானது

0
207

tax-imageபெறுமதி சேர் வரியை (வற்வரி) 15 வீதமாக அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று (14) நள்ளிரவு வெளியிடப்பட்டது. இத்திருத்தம் மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

வற் வரியை 15 வீதமாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாகவும், இதற்கமைய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுடன் திருத்தத்திற்காக இது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு திருத்தம் அங்கீகரிக்கப்படும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

எனினும், அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்தில் “வற்” திருத்தம் சபையில் சமர்ப்பிக்கப்படாது என்று தெரிவித்த அவர், உரியகால அவகாசத்துடன் பாராளுமன்றத்தில் இத்திருத்தம் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படுமெனவும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்து வற் வரி அதிகரிப்பு அமுல்படுத்தப்படும் என்றும் இணை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக குறிப்பிட்டார்.

நிதி அமைச்சர் என்ற ரீதியில் ரவி கருணாநாயக்க முன்வைத்த வற் வரி திருத்தத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய வற் வரி 15 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளது. வருடாந்தம் 50 மில்லியன் ரூபாவுக்கு மேல் (காலாண்டுக்கு 12.5 மில்லியன்) புரள்வினைக் கொண்டிருக்கும் மொத்தவிற்பனை மற்றும் சில்லறை விற்பனையில் ஈடுபட்டுள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு 15 வீத வற் வரி அறவிடப்படவுள்ளது.

இதனைவிட, தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் நோயறிதல் சோதனைகள், இரத்த சுத்திகரிப்பு மற்றும் ஓ.பி.டி மருத்துவ ஆலோசனைகள் தவிர்ந்த ஏனைய சேவைகளுக்கு 15 வீத வற் வரி அறவிடப்படவுள்ளது. தொலைத்தொடர்பு சேவைகள், புகையிலை உற்பத்திகள், சீனி அல்லது ஏனைய இனிப்பு பொருட்கள் சேர்க்கப்பட்ட பால்மாக்கள், இலங்கையிலிருந்து வேறு விமான நிலையங்களுக்குச் செல்லும் விமானப் பயணிகளின் விமான டிக்கட்டுக்கள் என்பவற்றுக்கும் புதிய வற் திருத்தத்துக்கு அமைய வற் வரி அறவிடப்படும்.

2015ம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் திகதிக்கு முன்னர் அனுமதிக்கப்பட்ட மூலோபாய அபிவிருத்தி திட்டம் அல்லது (2016- 10 -01 )தினத்திற்கு முன்னர் விற்பனை செய்யப்பட்ட ஒப்பந்தத்திற்குட்பட்ட அல்லது அன்றைய தினம் பூர்த்தி செய்யப்படட திட்டங்களுக்கு இது விலக்களிக்கப்படும். முதலீடு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் தங்குமிட வசதிகளை வழங்குதல், குத்தகைக்கு விடுதல் வாடகைக்கு வழங்குதல் முதலான சேவைகளுக்கும் தற்பொழுது உள்ள வற் வரியிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.

முதலீட்டு சபையினால் தேசிய வர்த்தக சந்தைக்கு விநியோகிக்கப்படும் ஆடைத்தொழிற்துறை தயாரிப்பான ஒரு துண்டுக்கு அடிப்படையில் அறவிடப்படும் வரி 75 ரூபாவினால் அதிகரிக்கப்படுகின்றது.

முன்னைய வரித்திருத்தம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட எதிர்ப்புக்கள் மற்றும் ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டே இந்தப் புதிய திருத்தம் தயாரிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறினார்.

கடந்த அரசாங்கம் பெற்றுக் கொண்ட அதிகளவான கடன்களை மீளச் செலுத்துவதற்காக அவசரமாக பணம் தேவைப்படுவதாலேயே வற் வரியை அதிகரிக்க வேண்டியிருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து நிதியுதவிகள் கிடைத்தவுடன் வற் வரி குறைக்கப்படும் என்றும் கூறினார்.

தனியார் வைத்தியசாலைகளைப் பொறுத்தவரையில் உள்ளக நோயாளர்களுக்கே வரி அறவிடப்படும். இருந்தபோதும் இருதய சத்திரசிகிச்சை போன்ற பாரிய சிகிச்சைபெறும் ஏழைகளிடம் அறவிடப்படும் வற் வரியை மீள அவர்களுக்கு வழங்குவது குறித்த யோசனையை அமைச்சரவையில் முன்வைப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Source: Thinakaran

LEAVE A REPLY