1.8 மில்லியன் காஷமீர் மக்கள் ஏதோ ஒரு வகையில் உளப் பாதிப்புகளுக்குள்ளாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்

0
225

(எம்.ஐ.அப்துல் நஸார்)

e61733a2c49a4f1dbeaea0a6f9fc0bcd_18ஹாபிஸா பானுவுக்கு 52 வயது. சில வேளைகளில் விட்டத்தைப் பார்த்தவாறு கூரைப் பலகைகளை எண்ணிக்கொண்டிருப்பார் அல்லது கதவின் வரிகளை எண்ணிக்கொண்டிருப்பார் அல்லது தரை விரிப்பில் காணப்படும் பூக்களை எண்ணிக்கொண்டிருப்பார்

அந்தப் பெண்மணியின் வீட்டில் மூன்று சிறிய அறைகளும், ஒரு சமையலறையும் இருக்கின்றன. களி மண்ணால் பூசப்பட்ட ஒரு அறையில் விசேட தேவையுள்ள உறவினர் ஒருவர் வசிக்கின்றார், மற்றுமொரு அறை வரவேற்பறையாகப் பயன்படுத்தப்படுகின்றது. மூன்றாவது அறை இறந்து போன அப்பெண்ணின் மகளினதும், ‘காணாமல் போன’ மகனினதும் நினைவுகளை சுமந்து கொண்டிருக்கின்றது.

அந்த அறையில்தான் ஹாபிஸா உறங்குகிறார். அந்த அறையில் அப்பெண்ணிண் மகனின் புகைப்படமொன்றும், ஒரு பாத்திரம் நிறைய அன்றாடம் பயன்படுத்த வேண்டிய மருந்து மாத்திரைகளும், கட்டிலுக்கருகில் துணித் துண்டினால் கட்டப்பட்ட உடைந்த வானொலியொன்றும் காணப்படுகின்றன.

அப்பெண்மணி ஒவ்வொரு இரவிலும் கனவில் தனது மகனுக்காக பெருநாளுக்கான ஆடைகளைக் கொள்வனவு செய்கின்றார். பெரும்பாலும் காலையில் அழுதுகொண்டே எழுந்திருக்கின்றார்.

இசையினைக் கேட்டாலாவது சிந்தனையினை மாற்றிக் கொள்வார் என்ற எதிர்பார்ப்பில் அப்பெண்ணின் குடும்பம் அந்த வானொலியை அவருக்கு கொடுத்துள்ளது. ஆனால் இவையெல்லாம் ஹாபிஸாவின் உள நிலையினைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.

காஷ்மீரில் உளச் சுகாதாரம் என்ற விடயம் தொடர்பில் விரிவான அறிக்கையொன்றினை எல்லை கடந்த வைத்தியர்கள் என்ற அமைப்பு அண்மையில் வெளியிட்டது. அந்த அறிக்கையின் முடிவுரை அந்தப் பள்ளத்தாக்கில் வசிக்கும் அனைவரிலும் அரைவாசிப்பேருக்கு ‘உளநலப் பிரச்சினைகள் உண்டு’ எனக் குறிப்பிடுகின்றது.

8773cd5f321441608392b293a29d15ee_18காஷ்மீரின் வளர்ந்தோர் சனத்தொகையில் 45 வீதமானோர் அதாவது 1.8 மில்லியன் பேர் ஏதேனுமொரு மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பான்மையாக 93 வீதமானேர் முரண்பாடுகளில் சிக்குண்டு அதிர்ச்சியடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.

காஷ்மீரிலுள்ள வளர்ந்த ஒரு சராசரி மனிதனை எழுத்துக் கொண்டால் அவன் தனது வாழ்நாளில் குறைந்த பட்டசம் எட்டு அதிர்ச்சிகளை நேரடியாக அனுபவித்திருக்கின்றார்.

70 வீதத்திற்கும் மேற்பட்டோர் தமக்குத் தெரிந்த ஒருவரின் திடீர் மரணத்தை அல்லது வன்முறையால் ஏற்பட்ட மரணத்தை நேரில் கண்ட அனுபவத்தை கொண்டவராகக் காணப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் பிரகாரம் 50 வீதமான பெண்களும் 37 வீதமான ஆண்களும் உளச்சோர்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர், 36 வீதமான பெண்களும் 21 வீதமான ஆண்களும் கலக்க மனநிலைப் பிறழ்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர், 22 வீதமான பெண்களும் 18 வீதமான ஆண்களும் அதிர்ச்சிக்குப் பிற்பட்ட அழுத்தப் பிறழ்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மனநலம் தொடர்பில் எல்லை கடந்த வைத்தியர்கள் அமைப்பினால் தயாரிக்கப்பட்ட மூன்றாவது அறிகை இதுவாகும். இதற்கு முன்னதாக எல்லை கடந்த வைத்தியர்கள் அமைப்பினால் ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்திய நிருவாகத்திற்குட்பட்ட காஷ்மீரில் மூன்று பிராந்தியங்கள் காணப்படுகின்றன. ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் ஆகியனவே அம் மூன்று பிராந்தியங்களுமாகும்.

c0b78e0b185b4b4487ce166ddd991cd0_18புதுடெல்லி அரசாங்கத்திற்கு எதிரான கிட்டத்தட்ட 27 ஆண்டுகளாகக் கிளர்ச்சி செய்யும் கிளர்ச்சிக்குழு இந்தப் பள்ளத்தாக்கிலேயே நிலை கொண்டுள்ளது. அந்தப் பிரதேசத்திலிருந்தே தற்போது அதிகளவான உள நோய்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன.

அங்கு நிலைகொண்டுள்ள இலட்சக்கணக்கான இந்திய இராணுவத்திற்கு எதிராக ஆயுதக் குழுக்கள் சண்டையில் ஈடுபட்டு வருகின்றன. – சிலர் சுதந்திரம் கேட்டுப் போராடுகின்றனர், சிலர் பாக்கிஸ்தானோடு இணைய வேண்டும் என்பதற்காகப் போராடுகின்றனர்.

முரண்பாடு ஆரம்பித்த 1989ஆம் ஆண்டு காஷ்மீரில் இருந்த ஒரேயொரு மனநல மருத்துவமனைக்கு 1,700 பேர் சிகிச்சைக்காகச் சென்றனர். கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை ஒரு இலட்சத்தையும் தாண்டியது.

இது மிகப் பெரும் பிரச்சினையாகும் என மனநல மருத்துவர் முஸ்தாக் மர்கூப் தெரிவித்தார்.

1989ஆம் ஆண்டுக்கு முன்னர் அதிர்ச்சிக்குப் பிற்பட்ட அழுத்தப் பிறழ்வு காணப்படவில்லை, ஆனால் தற்போது அது காஷ்மீரில் பரவிவருகின்றது. தலைமுறை தலைதுமுறையாக இந்தப் பாதிப்புகள் ஏற்பட்டே வருகின்றன. யாராவது ஒருவர் கொல்லப்பட்டால் அல்லது தாக்குதலுக்கு இலக்கானால் நிலைமை கவலைக்கிடமானதாக மாறுகின்றது. எனவே இது தலைமுறை தலைதுமுறையாக கடத்தப்படும் அதிர்ச்சியாகும்.

இராணுவம் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் இவை இரண்டுமே மக்களும் அவர்களது மனநலமும் பாதிக்கப்படுவதற்கு காணமாவதனை ஆளும் மக்கள் ஜனநாயகக் கட்சி ஏற்றுக்கொள்கின்றது. ‘இந்தப் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்கான உபாயங்களைக் கண்டறிவதற்கு முயற்சித்து வருகின்றோம்’ என மக்கள் ஜனநாயகக் கட்சியின் பேச்சாளர் வஹீட்-உர்-ரஹ்மான் பரா தெரிவித்தார்.

வன்முறை நிகழும் ஒரு பிரதேசத்தில் நீங்கள் வாழும்போது, அது உங்களது மனநலனையும் மனநிலையினையும் பாதிப்படையச் செய்கின்றது. வன்முறைகள், கட்டுப்பாடுகள் தாக்குதல்கள், ஊரடங்குச் சட்டங்கள் ஆகியன மனநலனையும் ஸ்திரமற்றதாக்குவதில் பங்களிப்புச் செய்கின்றன. இந்த பாரதூரமான பிச்சினையினைக் கையாள்வதற்கு அரசாங்கத்திற்கு விரிவான கொள்கையொன்று அவசியமாகும்.

6668e66e8ca44543b2e3cef1a05fb218_181993ஆம் ஆண்டு குளிர் காலத்தின்போது தெற்கு மாவட்டமான புல்வாமாவில் தனது வீட்டில் பகலுணவை குடும்பத்தாருடன் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஹாபிஸாவின் 13 வயது மகன் ஜாவிட் அஹமட் இந்திய எல்லைக் காவல் படையினரால் கொண்டு செல்லப்பட்டது தொடக்கம் ஹாபிஸாவின் மனநலனில் பாதிப்பு ஏற்பட்டது.

‘ஜாவிட் அஹமட் இந்திய எல்லைக் காவல் படையினரால் கொண்டு செல்லப்பட்டபோது காஷ்மீரில் ஊடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அப்போது கோடைகாலத் தலைநகரான ஸ்ரீநகருக்கு அண்மித்ததாகவுள்ள ஹஸரத்பால் தர்ஹாவுக்கருகில் ஆயுதததரிகள் இந்தியப் படையினருடன் மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்’ எனத் தெரிவித்த ஹாபிஸா ‘தர்ஹா முற்றுகையிடப்பட்டிருந்தது.

எனவே அன்று பாடசாலை நடைபெறவில்லை. முழுப் பிரதேசத்திலுமே பதட்டம் நிலவியது. அயலில் இருந்த பிள்ளைகளோடு அவன் விளையாடச் சென்றான். அவன் பசியோடு வீட்டுக்கு வந்தான். சிறிது நேரம் கூட இருக்கவில்லை. திடுதிப்பென படையினை எமது வீட்டினுள் நுழைந்தனர். எங்களது கண் எதிரிலேயே எங்களது மகனை அவர்கள் கொண்டு சென்றனர். அவர்களிடம் எங்கள் மகனை விட்டுவிடுமாறு மன்றாடினோம், ஆனால் அவர்கள் அதை காதில் வாங்கிக்கொள்ளவில்லை’ என நடந்தவற்றை நினைவு கூர்ந்தார் ஹாபிஸா.

‘அவன் அதன் பின்னர் வீடு திரும்பவே இல்லை’ அழுதவாறே கூறினார் ஹாபிஸா.

அன்று 1993ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆந் திகதி, பொலிஸில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்ததாக குடும்பத்தினர் கூறினார்கள். ஒரு வாரத்தின் பின்னர், முறைப்பாடு கிடைத்ததும் வழங்கப்படுகின்ற முதல் தகவல் அறிக்கை பிரதியொன்று கிடைத்தது.

அந்த அறிக்கையில் 13 வயதான அவர் ஆயுதக் குழுவின் உறுப்பினர் எனவும், அவரை வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது தாக்குதல்தாரிகள் மறைந்திருந்து தாக்கியதால் துப்பாக்கிச் கூட்டுக்கு இலக்காகி நவம்பர் 04ஆந் திகதி மாலை உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இருட்டினூடாக ஜாவிட் தப்பிச் செல்ல முனைந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் புனைகதையினை குடும்பத்தினர் ஏற்க மறுத்துள்ளதோடு தங்களது மகன் சாதாரண பாடசாலை மாணவன் எனவும், அவன் அவ்வாறு தப்பித்திருந்தால் எங்களைத் தொடர்புகொண்டிருப்பான் எனவும் வலியுறுத்தினர்.

சட்டத்தரணிகளைப் பிடிப்பதற்காகவும், ஜாவிதைத் தேடி சிறைச்சாலைகளுக்கும், இராணுவ முகாம்களுக்கும் தங்களிடம் இருந்த அனைத்தையும் விற்றுவிட்டதாக அந்தக் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

‘நீதியை வேண்டி நாம் எவ்வளவு செலவு செய்திருக்கின்றோம் என்பது எங்களுக்கே தெரியாது. வீட்டில் இருந்த பெறுமதியான அனைத்தையும் விற்றோம். இறுதியாகத் தரை விரிப்பைக்கூட விற்றோம்’ என தரை விரிப்பு பின்னுபவராக இருந்து தமற்போது முச்சக்கரவண்டி ஓட்டுநராக இருக்கும் ஹபீஸாவின் கணவரான 55 வயதுடைய குலாம் நபி மாட்டு தெரிவித்தார். ‘அதனால் தான் எங்களுக்கு சரியான வாழ்விடம் கூட இல்லை’ எனத் தெரிவித்தார்.

புல்வமா மாகாணத்தின் மொங்கோஹொம் கிராமத்தில் அமைந்துள்ள அவர்களது வீடு களியினாலும் மரத்தினாலும் உருவாக்கப்பட்டது. அண்மைக் காலம் வரை அதற்கு எந்த ஜன்னலும் இருக்கவில்லை. ஆனால் பின்னர், அரச சார்பற்ற நிறுவனமான காணாமல் போனோரின் பெற்றோர்களின் அமைப்பு மரத்தினாலான ஜன்னலொன்றைப் பொருத்திக் கொடுத்தது.

வாஜித் காணாமல் போய் மூன்று ஆண்டுகளின் பின்னர். 14 வயதான ஜாவிதின் சகோதரியான றுக்ஷானா மாரடைப்பால் காலமானார்.

“எனது மகள் 1996ஆம் ஆண்டு ரமழான் மாதத்தின்போது தனது சகோதரனைத் தேடிக்கொண்டிருந்த நிலையில் மாரடைப்பால் காலமானார். ஜாவிதைத் தேடி அலைந்தபோது அவள் எல்லா இடங்களுக்கும் எங்களோடு வந்தாள்” எனத் தெரிவித்தார். ஹபீஸா

தற்போது ஹாபிஸா மற்றும் குலாம் ஆகியோருடன் ஒரேயொரு மகளான 30 வயதான ஷபீக்கா மாத்திமே இருக்கின்றார்.

‘நாங்கள் மிகவும் கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்றோம். நான் தினமும் உளரீதியாக பலவீனமடைந்துகொண்டே வருகின்றேன். நான் எனது மகளை ஒருவருக்கு திருமணம் செய்து கொடுப்பதற்கு முயற்சித்தேன். ஆனால் எங்களது குடும்ப நிலைமை அவர்களது கௌரவத்திற்கு பொருந்தவில்லை என்று திருமணத்திற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டனர்’ என ஹாபிஸா கூறினார்.
குலாமின் விஷேட தேவையுடைய சகோதரன் வாலி மொஹமட் மட்டு இந்தக் குடும்பத்தினருடன்தான் வசித்து வருகின்றார்.

‘எனது விசேட தேவையுடைய மைத்துனர் கடந்த ஆறு ஆண்டுகளாக படுத்தபடுக்கையாக இருக்கின்றார். எனது கணவர் நகரத்திற்கு (ஸ்ரீநகர்) முச்சக்கரவண்டியோடுவதற்குச் சென்று விடுவதால் அயல்வீட்டுச் சிறுவன் ஒருவனின் துணையுடன் நானோ அவரை கழிவறைக்கும் குளிப்பதற்கும் அழைத்துச் செல்கின்றேன்’ (குளியலறையும் கழிவறையும் வீட்டுக்கு வெளியிலேயே இருக்கின்றன). நாங்கள் அவரை பராமரிக்காவிட்டால் ஊரில் உள்ளவர்கள் என்ன சொல்வார்கள்?

ஹாபிஸா மிக அரிதாகவே உறங்குகின்றார். அவருடைய மருத்துவ அறிக்கையின்படி அவர் மனநிலைப் பாதிப்பு மற்றும் ஒற்றைத் தலைவலியுடன்கூடிய ‘பாரதூரமான எதிரிணக்க ஏக்கத்தால்’ பாதிக்கப்பட்டிருக்கின்றார்.
மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளை உட்கொள்வதை கடந்த வாரம் தொடக்கம் அவர் நிறுத்திக்கொண்டுள்ளார், ஏனெனின் அவற்றிற்கு கொடுப்பனவு செய்வதற்கான பொருளாதார நிலை அந்தக் குடும்பத்திடம் இல்லை.

குலாமுக்கும் அவருக்குரிய ஆரோக்கியப் பிரச்சினைகள் உள்ளன. அவருக்கும் கடுமையான முதுகுவலி இருக்கின்றது. ஆனால் மருத்துவப் பரிசோதனைக்கும் வலி நிவாரண மருந்துகளுக்கும் செலவு செய்தால் தனது குடும்பம் பட்டினியால் வாழவேண்டும் எனக் குறிப்பிடுகின்றார்.

‘அவரது முச்சக்கர வண்டியும் எதிர்வரும் சில மாதங்களில் தடை செய்யப்படவுள்ளது ஏனெனில் அது மிகவும் பழைய வாகனம்’ என விபரித்தார் ஹாபிஸா. சுற்றாடல் மாசுபடும் அளவினைக் கட்டுப்படுத்துவதற்கும அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கையால் தமது குடும்பத்திற்கு என்ன பயன் என அந்தக் குடும்பம் கவலை கொண்டுள்ளது.

‘எங்களது குடும்பத்திற்கு இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது? ‘ என கேட்கும்போதே மீண்டும் அவரது கண்ணில் இருந்து கண்ணீர் வடிய ஆரம்பித்தது.

‘எனது மனைவி பைத்திய நிலைக்குச் சென்றுவிடுவாரோ என சிலவேளைகளில் அச்சம் ஏற்படுகின்றது. ஜாவிட் எங்களுடன் இருந்திருந்தால் எங்கள் குடும்பத்தின் நிலை சிறப்பாக இருந்திருக்கும், அவன் பாடசாலைக்கு சென்று வந்துகொண்டு இருந்திருப்பான், ஓய்வு நேரத்தில் அப்பிள் தோட்டங்களில் வேலை செய்திருப்பான்’ என தழுதழுத்த குரலில் கூறினார் குலாம்.
அவன் மிகவும் பொறுப்புள்ள பிள்ளையாக இருந்தான் பாடசாலை விட்டு வந்ததும் அவன் ஐஸ் கிரீம் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்தான்.

‘ஜாவிட் உயிருடன் இருந்திருந்தால், எனக்கு நல்ல மகனாகவும், குடும்பத்திற்கு உதவியாகவும் இருந்திருப்பான்’ எனக் கூறினார் அந்தத் தந்தை.

LEAVE A REPLY