மாமாவும் தாயும் தாக்கியதால் வீடுகளை விட்டு வெளியேறினோம்: திருகோணமலை மாவட்ட சிறுவர்கள் வாக்குமூலம்

0
232

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

unnamed-1தனது தாய் தன்னை அடிப்பதாக சிறுமியும் தனது மாமா தன்மீது தாக்குதல் நடாத்துவதாக சிறுவனும் மட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸாரிடம் செவ்வாய்க்கிழமை வாக்குமூலமளித்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியும், சிறுவன் ஒருவனும் திங்கட்கிழமை பிற்பகலில் இருந்து காணாமல் போனதாகக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து உப்புவெளிப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 5 பொலிஸ் குழுக்கள் தேடுதல் விசாரணையில் ஈடுபட்டிருந்த வேளையில் குறித்த இரு சிறுவர்களும் மட்டக்களப்பு பாசிக்குடா கடற்கரையில் செவ்வாய்க்கிழமை (செப்ரெம்பெர் 13, 2016) நடமாடியபோது பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

unnamed-2திருகோணமலை மஹிந்தபுரவைச் சேர்ந்த திருகோணமலை விபுலாநந்த கல்லூரியில் 6ஆம் ஆண்டு கற்கும் லலித் பிரியங்க தனுஷ்க (11 வயது), மற்றும் திருகோணமலை அன்புவழிபுரம் கலைமகள் மகா வித்தியாலயத்தில் 4ஆம் ஆண்டு கற்கும் யோகராசா றொஷானா (வயது 09) ஆகிய இருவருமே வாழைச்சேனைப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டவர்களாகும்.

இவ்விருவரும் திங்கசட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வகுப்புக்குச் செல்வதாக தத்தமது வீடுகளில் கூறிவிட்டு சீனன்குடா புகையிரத நிலையத்திற்கு வந்து அங்கிருந்து கொழும்பு செல்லும் புகையிரதத்தில் பயணித்து மாலை 5 மணிக்கு கல்லோயாவை வந்தடைந்து அங்கிருந்து மட்டக்களப்பு செல்லும் புகையிரதத்தில் ஏறியுள்ளனர்.

பின்னர், செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு வாழைச்சேனை புகையிரத நிலையத்தில் வந்திறங்கியுள்ளனர். பின்னர் அங்கிருந்து பாசிக்குடா சென்றுள்ளனர். இவ்வேளையில் பொலிஸாரால் இவர்கள் கைப்பற்றப்பட்டுள்ளனர்.

unnamed-3தனது தாய் அடித்துத் துன்புறுத்துவதாக சிறுமியும், தனது மாமா தன்னை அடிப்பதாக சிறுவனும் கூறியுள்ளனர்.

தாங்கள் பொலிஸாரிடம் பிடிபடாமல் இருந்தால் கொழும்பு செல்லும் உத்தேசம் தங்களுக்கு இருந்ததாக அவர்கள் பொலிஸாரிடம் கூறியுள்ளனர். வாக்குமூலங்களைப் பதிவு செய்து கொண்ட வாழைச்சேனைப் பொலிஸார் இச்சிறுவர்களை மருத்துவப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளதோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY