நிமோனியா காய்ச்சலால் ஹிலாரி கிளிண்டன் அவதி

0
92

201609121027359677_hillary-clinton-diagnosed-with-pneumonia_secvpfநிமோனியா காய்ச்சலால் அவதிப்படும் ஹிலாரி கிளிண்டன் தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார்.

இவர் தீவிரமான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று நியூயார்க்கில் வர்த்தக மையம் மீது அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. அதில் ஹிலாரி கிளிண்டன் கலந்து கொண்டார்.

அப்போது அவருக்கு திடீரென உடல் நலக் கோளாறு ஏற்பட்டது. எனவே, அவரை டாக்டர் பர்டாக் பரிசோதித்தார். அப்போது அவரது உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதாகவும், அதன் காரணமாக நிமோனியா எனப்படும் நுரையீரல் அழற்சியால் காய்ச்சல் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

எனவே, ஹிலாரி கிளிண்டன் நன்றாக ஓய்வு எடுக்கும் படியும் அறிவுறுத்தினார். அதை தொடர்ந்து அவர் நியூயார்க்கில் உள்ள தனது மகள் செல்சியாவின் வீட்டில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார்.

இதையடுத்து கலிபோர்னியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசார கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. அவர் 2 நாட்கள் கலிபோர்னியாவில் தங்கி தேர்தல் பிரசாரம் மற்றும் நிதிதிரட்டும் கூட்டங்களில் பங்கேற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஏற்கனவே, ஹிலாரி கிளிண்டனுக்கு இருமல் தொடர்பான அலர்ஜி இருந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக தொடர்ந்து இருமலில் அவதிப்பட்டு வந்த அவருக்கு நியூயார்க்கில் உடல் நலக் கோளாறு ஏற்பட்டது. அதை தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டதில் அவருக்கு நிமோனியா காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஹலாரிகிளிண்டனின் உடல் நலக்குறைவு வீடியோ காட்சிகள் டி.விக்கள் மற்றும் சமூக வலை தளங்களில் ஒளிபரப்பபட்டன. அதில் நியூயார்க் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் உதவியாளர்களால் கைத்தாங்கலாக வேனுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

தற்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது குறித்து எதிர்க்கட்சியான குடியரசு கட்சி தொண்டர்கள் சாதகமாக பயன்படுத்தி பிரசாரம் செய்ய தொடங்கி விட்டனர். உடல்நலக்குறைவால் அவதிப்படும் ஹிலாரி கிளிண்டன் அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் என தெரிவிக்கின்றனர்.

கடந்த மாதம் நடந்த பிரசாரத்தின் போது இதே கருத்தை தான் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து இருந்தார். ஆனால் ஹிலாரி நல்ல உடல் தகுதியுடன் இருப்பதாக அவரது டாக்டர் பர்டாக் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

LEAVE A REPLY