ஆயுத வன்முறைகள் ஏற்படுத்திய இடைவெளியை மனிதநேய ஆயுதத்தால் குறைக்க வேண்டும்: எஸ்.ஏ. முஹம்மத் நழீம்

0
143

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

unnamed-6கடந்த 30 வருட காலத்தில் தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களுக்கிடையில் ஆயுத வன்முறைகள் ஏற்படுத்திய இடைவெளியை இனி மனிதநேயம் எனும் ஆயுதத்தால் குறைக்க வேண்டும் என “ஸலாமா” சமூகநல கலாசார அபிவிருத்திப் பேரவை தலைவரும் ஏறாவூர் நகர பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தருமான எஸ்.ஏ. முஹம்மத் நழீம் தெரிவித்தார்.

“ஸலாமா” சமூகநல கலாசார அபிவிருத்திப் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட அயற் கிராமத்தில் வாழும் தமிழ் சமூகச் சிறார்களுக்கு பெருநாள் இனிப்புக்கள், பண்டங்கள் வழங்கும் நிகழ்வு ஏறாவூர் ஐயன்கேணிக் கிராமத்தில் திங்களன்று (செப்ரெம்பெர் 12, 2016) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றும்போது;

பெருநாட்கள், கொண்டாட்டங்கள் சமூகங்களுக்கிடையில் வெவ்வேறான அமைப்பிலிருந்த போதும் தமிழ் முஸ்லிம் ஆகிய இரு சமூகங்களும் அந்த பெருநாள் சிறப்புக்களை ஒன்றாகவே இணைந்து கொண்டாடியிருக்கின்றோம் என்பதை எமது தாய் தந்தையர் வழியாக நாம் கேட்டு வந்திருக்கின்றோம்.

ஆயினும், இந்த வழக்காறுகளை அனுபவிக்க விடாது கடந்த 30 வருடகாலமாக இடம்பெற்ற ஆயுத வன்முறைகள், மனித உறவுகளைப் பிரித்து கூறுபோட்டு அழிவுகளை பிரிவினைகளையும் ஏற்படுத்தி விட்டுச் சென்றிருக்கின்றது.

ஆயினும், இப்பொழுது யுத்தம் முடிவடைந்து சமாதானக் காற்றைச் சுவாசிக்கின்ற இத்தருணத்தில் மீண்டும் எமது இன ஐக்கிய சமூக சகவாழ்வை துளிர்க்கச் செய்ய வேண்டியிருக்கின்றது.

இனிமேலும் எமது இளஞ் சந்ததிகளை இனக்குரோதக் கண்ணோட்டத்தோடு பார்ப்பதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது. மனிதம் என்கின்ற பெருந்தகைப் பண்பை வளர்த்தெடுக்க வேண்டும். ஓடும் குருதியிலும், சுவாசிக்கும் காற்றிலும், அருந்தும் நீரிலும் வாழ்ந்து மறையும் மண்ணிலும் இன பேதம் இல்லை.

ஆயுத வன்முறைகள் அமைதியைக் குலைத்து ஏற்படுத்திய இடைவெளியை நாம் குறைத்து விட்டு அமைதிக்கான அஹிம்சைப் பாலத்தை அமைக்க வேண்டும். அதனாலேயே இந்த தியாகத் திருநாளில் அந்யோந்ய அமைதி வாழ்வை வலியுறுத்தும் வகையில் அடுத்துள்ள கிராமத்தில் வாழும் தமிழ் சகோதர சிறார்களுக்கு இனிப்பு வழங்கி இதயபூர்வ வாழ்த்துக்களைக் கூற விரும்புகின்றோம்” என்றார்.

இந்நிகழ்வில் ஐயன்கேணி வேப்பையடிப் பிள்ளையார் ஆலய பூசகர் பிரம்மஸ்ரீ திஸான் ஷர்மா, ஐயன்கேணி கிராமவாழ் தமிழ் மக்கள் மற்றும் ஸலாமா நிறுவன அலுவலர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். சிறார்களும் அவர்தம் பெற்றோரும் இனிப்பும் பெருநாள் பண்டங்கள் வழங்கி உபசரிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY