(Full Update) ஏறாவூரில் தாயும் மகளும் பொல்லால் தாக்கிப் படுகொலை: தடயவியல் பரிசோதனை முடிவு

4
488

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

unnamed-2மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர் நகர் முகாந்திரம் வீதிமுதலாவது ஒழுங்கையில் தாயும் மகளும் பொல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை (செப்ரெம்பெர் 10, 2016) நள்ளிரவுக்குச் சற்றுப் பிந்தி இப்படுகொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

நூர்முஹம்மது சித்தி உசைரா (வயது 55) மற்றும் அவரதுமகளான ஜனீரா பானு மாஹிர் (வயது 34 ) ஆகியோரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

நீண்டகாலமாக தாயும் மகளுமே இந்தவீட்டில் வசித்து வந்ததாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர். கொல்லப்பட்ட ஜனீரா பானுவின் கணவர் தற்சமயம் மத்திய கிழக்கு நாடான கட்டாரில் கடந்த 6 மாதங்களாகத் தொழில் புரிந்துவருவதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

unnamed-1வீட்டின் கூரையை கழற்றி வீட்டுக்குள் இறங்கிய கொலையாளிகளே இப்படுகொலையைப் புரிந்திருப்பதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்திருக்கின்றது.

இரவு 11.30 மணிவரைதாயும் மகளும் தனது வீட்டுக்கு வந்துபேசிக் கொண்டிருந்து விட்டுச் சென்றதாக இவர்கள் வசித்த வீட்டுக்கு முன்னாலுள்ள வீட்டில் வசிக்கும் அயலவரான பாயிஸா எனும் பெண்மணி தெரிவித்தார்.

வழமையாக இரவு வேளையில் தாயும் மகளும் வந்து பேசிக் கொண்டிருந்து விட்டு அவர்களது வீட்டுக்குச் செல்வார்கள். கடைசியாக அவர்கள் கொல்லப்படுவதற்கு முன்னர் வீட்டை விட்டுச் செல்லும் போது மறுநாள் (ஞாயிறு 11 ) அறபா நோன்பு தினமாகையால் தாங்கள் இருவரும் நோற்பதற்கான ஆயத்தங்களிலீடுபடவேண்டும் என்று கூறிவிட்டுச் சென்றதாகவும் அயலவரான பெண்மணி கூறினார்.

வீட்டுக்குச் சென்ற ஜனீரா பானு தனது தோழிகளுக்கு அறபா தின நோன்பின் மகிமையைப் பற்றியும் தவறாமல் நோன்பை நோற்குமாறும் குறுந்தகவல் அனுப்பியிருக்கின்றார்.

அதேவேளை ஞாயிறு அதிகாலை 1.30 மணியிலிருந்து கட்டார் நாட்டிலுள்ள தனது கணவருடன் 14 நிமிடங்கள் 14 செக்கன்கள் பேசியிருக்கின்றார். எனவே, அதன் பின்னரே இந்தக் கொலை நடந்திருக்கக் கூடும் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

வீட்டுக் கதவின் தாழ்ப்பாழ் பொல்லால் தாயும் மகளும் தாக்கப்பட்டிருப்பது தடயவியல் பரிசோதனையின் போது தெரியவந்திருக்கின்றது.

அதேவேளை, ஜனீரா பானு பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டிருப்பதற்கான சாத்தியங்களும் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஸ்தலத்திற்கு விஜயம் செய்து கொலை இடம்பெற்ற சூழ்நிலைகளை அவதானித்த மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதிபதி சி. சின்னையா சடலத்தை சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.

தாய் மற்றும் மகள் ஆகியோரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கொலையாளி சமையலறைப் பக்கமிருந்த ஓடுகளைக் கழற்றிவிட்டே வீட்டினுள்  இறங்கியிருப்பது அவதானிக்கப்பட்டிருக்கின்றது.

மோப்ப நாய் சகிதம் தடயவியல் நிபுணர்களும் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளில் ஈடுபட்டனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

4 COMMENTS

LEAVE A REPLY