வீதி விதிகளை கண்டிப்பாகக் கடைபிடிக்குமாறு காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வேண்டுகோள்

0
134

(எம்.ஐ.அப்துல் நஸார்)

6-dsc06814வீதி விதிகளை கண்டிப்பாகக் கடைபிடிக்குமாறு காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காத்தான்குடிப் பிரதேசத்தில் வாகனப்போக்குவரத்து தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்படி வேண்டுகோளை விடுத்தார்.

தலைக்கவசம் அணியாமல், அதிக வேகத்திலும் பல இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணிப்பது தொடர்பில் தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.

இது பெருநாள் காலமாக இருப்பதால் பெரும்பாலும் அனைத்து வீதிகளிலும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும், இந்த சந்தர்ப்பத்தில் அதிக வேகமாகப் பயணிப்பது வாகனத்தைச் செலுத்துபவருக்கும் ஏனையோருக்கும் ஆபத்தினை ஏற்படுத்திவிடும். இந்த விடயத்தை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சாதாரண காலங்களில்கூட சிறிய விபத்துக்கள் தொடக்கம் உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய விபத்து வரையான பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. அவசரமும், கவனஈனமும், அனைவரையும் முந்திச் செல்ல வேண்டும் என்ற கண்மூடித்தனமான எதிர்பார்ப்புமே பெரும்பாலான விபத்துக்களுக்கு காரணமாகின்றன.

வாடகை வானங்களான முச்சக்கர வண்டிகள் அதிகம் பயன்படுத்தப்படும் காலம் இதுவாகும். அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணிப்பதையும், பொறுமையாகக் காத்திருக்காது சிறு இடைவெளிகளில் கூட நுழைந்து பயணிப்பதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

பாதசாரிகளும், துவிச்சக்கர வண்டிகளில் பயணிப்போரும் தங்களது பயணங்களை மிகக் கவனமாக மேற்கொள்ள வேண்டியதும் அவசியமானதாகும். வயதானவர்களும் விசேட தேவையுடையவர்களும் முடியுமான அளவு இன்னொருவரின் துணையுடன் பயணிப்பது மிகப் பொருத்தமானதாகும்.

முஸ்லிம்கள் அனைவரும் புனித ஹஜ் பெருநாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த மகிழ்ச்சிகரமான நேரத்தினை துக்கமான நேரமாக மாற்றிவிடாமல் இருப்பது அனைவரினதும் கடமையாகும். வீதி விதிகளை கண்டிப்பாக கடைபிடிப்பதன் மூலம் ஏனையோருக்கு எந்தக் கெடுதலும் தொந்தரவும் ஏற்படாத வகையில் மகிழ்ச்சியாக இந்தப் பெருநாளை கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனவும் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர தனது வேண்டுகோளில் தெரிவித்தார்.

LEAVE A REPLY