(Poem) இப்படியும் ‘தியாக’த் திருநாள்

0
76

hajj28(Mohamed Nizous)

முடி வெட்டும் கடையினிலே
கொடிகட்டும் தியாகம்
காத்திருக்கும் தியாகத்தால்
வேர்த்து போடும் சிலருக்கு.

வட்டிலப்ப சட்டியிலே
முட்டையுடன் முட்டி மோதி
திருமதிகள் செய் தியாகம்
வெகுமதிகள் தர வேண்டும்.

ஆட்டிறைச்சி வாங்குதற்கு
போட்டி போடும் வாப்பாமார்
காட்டுகின்ற தியாகம்
பாட்டில் பாட முடியாது.

வேலையில்லா சில பேர்கள்
ஆளையாள் முந்துவதற்கு
பைக்கில் ஓடி விழும் தியாகம்
மைக்கில் சொல்லி முடியாது.

எந்த வீடு சென்றாலும்
இனிப்பு இனிப்பாய் தருவதனை
நொந்து கொண்டே உண்ண வேண்டும்
நோ சொல்ல முடியா தியாகம்

கஞ்சி நீங்கா சாரன்களை
கஷ்டப்பட்டு உடுத்துக் கொண்டு
பஞ்ச வர்ணக் கிளி நடையில்
பாதை நடை தனி தியாகம்

பெருநாள் பஸார் சனத்துக்குள்ளே
பிள்ளையைத் தூக்கிக் கொண்டு
கரும்பையும் தூக்கிக் கொண்டு
கால் நடை ஒரு தியாகம்.

இது போல தியாகங்கள்
இன்னும் இருக்கின்றன.
குதூகலமாய் கொண்டாட
கோடி வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY