உலகின் அதிகார சக்திகள் மனித நேயத்தை அடிப்படையாகக்கொண்ட முன்னேற்றத்தை நோக்கி நகர வேண்டும்! பாராளுமன்றத்தில் முஜீபுர் றஹ்மான்

0
373

unnamed-1உலகின் அதிகார சக்திகள் மனித நேயத்தை அடிப்படையாகக்கொண்ட முன்னேற்றத்தை நோக்கி நகர வேண்டும என பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் தனது பாராளுமன்ற உரையின்போது வேண்டுகோள் விடுத்தார். புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றம் தொடர்பான அமர்வு நேற்று 09.09.2016 இடம்பெற்றபோது முஜீபுர் றஹ்மான் இவ்வாறு உரையாற்றினார்.

அவர் தனதுரையில் மேலும் கூறியதாவது,

இன்று காலநிலை தொடர்பாகவும் அதன் அனர்த்தங்கள் தொடர்பாகவும் முழு உலகின் கவனமும் திரும்பியிருக்கிறது. இதற்கான முக்கிய காரணம் மனிதனின் இருப்புக்கு சூழலும் அது சார்ந்த காலநிலையும் அத்தியாவசிமாக அடிப்படையாக இருக்கிறது. உலகின் முன்னேற்றம் சூழலியல் மற்றும் காலநிலை தொடர்பான பல பிரச்சினைளை மனித சமூகத்திற்கு தோற்றுவித்திருக்கிறது. அதனால் வேகமாக வளரும் அபிவிருத்தியோடு சேர்த்து சூழல் மற்றும் காலநிலை தொடர்பான பிரச்சினைகளைப்பற்றி சிந்திப்பதற்கு மனிதனுக்கு அவசியமும் கட்டாயமும் இன்று ஏற்பட்டிருக்கிறது.

உலகின் அபிவிருத்தி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தோடு சேர்ந்து உலகிற்கு சூழல் மற்றும் காலநிலை தொடர்பான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. பல விபரீதங்களுக்கு உலகம் முகம்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. உலகின் முன்னேற்றம் பற்றி நாங்கள் எவ்வளவு கதைத்த போதும் எம்மால் இயற்கையின் வளங்களை பாதுகாக்க முடியாமல் போயுள்ளது. எம்மால் சூழலை பாதுகாக்க முடியாமல் போயுள்ளது.
விஞ்ஞானம் வளர்ந்த போதும் அறிவியல் வளர்ந்த போதும் இயற்கையை பாதுகாத்துக்கொள்ள மனிதனுக்கு இன்று முடியாமல் போயிருக்கிறது.

புவி வெப்பமடைவது தொடர்பான பிரச்சினையைப் பார்த்தால், மனிதன் பலத்த அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறான். புவி வெப்பமடையும் பிரச்சினையால் பலவிதமான அனர்த்தங்களுக்கும், பிரச்சினைகளுக்கும், நோய்களுக்கும் மனித சமூகம் உள்ளாக்கப்பட்டிருக்கிறது.

உலக சுற்றுச் சூழல் அமைப்பின் கணிப்பின் படி வருடத்திற்கு ஒரு லட்சத்து அறுபதாயிரம் பேர் மரணிக்கின்றனர். புவி வெப்பமடைவதன் பிரதி பலனாகவே இந்த அனர்த்தத்திற்கு மனித சமூகம் முகம்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இத்தகைய மரணங்கள் 2020 அளவில் இரு மடங்காக அதிகரிக்கும் என்றும் உலக சுற்றுச் சூழல் அமைப்பு எச்சரிக்கை விடடிருக்கிறது.

அபிவிருத்தியடைந்த நாடுகள் தனது நாட்டின் அறிவியல், அபிவிருத்தி, முன்னேற்றம் தொடர்பாக நிபந்தனைகள் இல்லாமல் செயற்பட முன்வருகின்றன. ஆனால் காலநிலை மாற்றம் சுற்றுச் சூழல் தொடர்பான விவகாரங்களில் மற்றும் மனித சமூகத்தின் நலன் தொடர்பான விவகாரங்களில் இந்த நாடுகள் ஆர்வம் காட்டாமல் இருக்கின்றன. இன்று, புவி வெப்பமடைதல் மற்றும் சுற்றுச் சூழல் மாசடைவதால் ஏற்படும் விளைவுகளால் இந்த நாடுகள் இயற்கையைப் பற்றி சிந்திக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன.

இதிலிருந்து மனிதன் தனது முன்னேற்றத்தை இயற்கையை சூழலை பாதுகாக்கும் விதத்தில் அமைத்துக்கொளவதா அல்லது இயற்கையை அழித்துக்கொண்டு இந்த முன்னேற்றத்தை அடைந்து மனித சமூகத்தை அழிவுக்கு இட்டுச்செல்வதா என்பதை தீர்மானிக்கும் நிலைக்கு உலகின் அதிகார சக்திகள் முடிவு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன.

புவி வெப்பமடைவதை குறைப்பது தொடர்பான விடயத்தில் ஐந்து வருடங்களில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு செயற்படா விட்டால் இயற்கை மிகவும் மோசமான முறையில் எதிர்வினையாற்றும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

அனர்த்தங்கள் தொடர்பாக இன்று உலகிற்கு பல திசைகளிலிருந்தும் எச்சரிக்கைள் விடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உலக சுற்றுச் சூழல் அமைப்பு மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் போன்றவை உலகிற்கு எச்சரிக்கை விட்டிருக்கின்றன. எதிர்வரும் காலங்கள் உலகிற்கு அச்சுறுத்தல் மிகுந்த காலங்களாய் இருக்கும் என்று இந்த அமைப்புகள் எதிர்வு கூறியிருக்கின்றன.

நாங்கள் இயற்கையை சூழலை நேசிக்கின்ற முன்னேற்றம், அபிவிருத்தியை நோக்கி நகர வேண்டும். மனித நேயத்தை அடிப்படையாகக்கொண்ட முன்னேற்றத்தை நோக்கி செல்ல வேண்டும். இந்த பயணத்திற்கு உலகின் அதிகார சக்திகள் எத்தகைய தியாகத்தை செய்ய தயாராய் இருக்கின்றன என்ற கேள்வியே எம் முன்னால் இருக்கின்றன. உலகின் அதிகார சக்திகள் தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை கைவிட்டு மனித சமூகத்தின் நலனை கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் செயற்படுவார்களா என்றே கேள்வியே எம்முன்னால் இருக்கிறது.

LEAVE A REPLY