பிரிந்த கிழக்கு மாகாணத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமல் வட கிழக்கு இணைப்பிற்கு ஆதரவு கோருவது நியாயமில்லை: உதுமாலெப்பை

0
289

(எம்.ஜே.எம்.சஜீத்)

unnamedபிரிந்த கிழக்கு மாகாணத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் முஸ்லிம் சமூகத்தின் நியாயமான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமல் வட கிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம் சமூகத்தை ஆதரவு வழங்குமாறு கோருவது நியாயமில்லை என கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

மூதூரில் நேற்று (9) நடைபெற்ற சுதந்திர கிழக்கு பிரகடனப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்….

முஸ்லிம் சமூகத்தின் எந்தவிதமான அங்கிகாரத்தினையும் பெறாமல் வட மாகாண முதலமைச்சரும், வட மாகாண சபையும் தங்களின் தீர்வு திட்டத்தினை சமர்ப்பித்துள்ளனர். தமிழ் மக்கள் வாழும் வட கிழக்கு மாகாணங்கள் ஒரு மாநிலமாகவும், சிங்கள மக்கள் வாழும் ஏனைய ஏழு மாகாணங்கள் ஒரு மாநிலமாகவும், முஸ்லிம் மக்களுக்கும் மலையக மக்களுக்கும் தன்னாட்சி பிராந்திய சபைகள் அமைக்கப்பட வேண்டும் என தீர்மானித்துள்ளனர்.

குறிப்பாக முஸ்லிம் அரசியல் கட்சிகள், புத்திஜீவிகளிடம் எவ்விதமான கருத்துக்களும் பரிமாரப்படாமல் இத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறித்து முஸ்லிம் சமூகம் கவலை அடைந்துள்ளது. அதேவேளை அண்மையில் முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டின் மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் நடந்த முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமான விசேட கூட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அழைக்கப்பட்டு அந்நிகழ்வில் அவர் கலந்துகொண்டார்.

1988ம் ஆண்டில் நடைபெற்ற இணைந்த வட கிழக்கு மாகாண சபை தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் பூர்வீகமாக வாழும் முஸ்லிம் சமூகம் தங்களுக்கான மாகாண சபை பிரதிநிதிகளை வேட்பாளராக அறிவித்து சுதந்திரமான முறையிலே வேட்பாளரின் பெயரை குறிப்பிட்டு முஸ்லிம் மக்களிடம் வாக்கு கேட்கும் உரிமையற்ற ஊமைச் சமூகமாக ஆக்கப்பட்டோம்.

வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடாமல் வட கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் உள்ள மாகாணங்களைச் சேர்ந்த முஸ்லிம் வேட்பாளர்களை வட கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே போட்டியிடவைத்து அந்த வேட்பாளர்களின் பெயர்களிலே வட கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் மக்களிடம் வாக்கு கேட்டு தங்களின் மாகாணத்துவ பிரதிநிதிகளைப் பெறவேண்டிய உரிமையற்ற சமூகமாக முஸ்லிம் சமூகம் இருந்தது.

கிழக்கு மாகாணம் தனியாக பிரிக்கப்பட்டதன் பயனாக இன்று கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பிரதிநிதிகள் கிழக்கு மாகாண முதலமைச்சர்களாகவும் மாகாண அமைச்சர்களாகவும் பதவி வகிப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த 30 வருட காலமாக வட கிழக்கு மாகாணத்தில் இடம் பெற்ற கொடூர யுத்த நிகழ்வுகளால் நேரடியாக பாதிக்கப்பட்ட பிரதேசம் மூதூர் பிரதேசமாகும். வட கிழக்கு மாகாணங்கள் இணைந்த மாகாண நிருவாகத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட அநியாயங்களை அருகிலிருந்து நேரடியாக பார்க்கக் கூடிய சந்தர்ப்பம் திருகோணமலை மாவட்ட மக்களுக்கு கிடைத்தது.

அதே போல் கிழக்கு மாகாணம் தனியாக பிரிக்கப்பட்டு கிழக்கு மாகணத்திற்கு என தனியான மாகாண நிருவாகம் உருவாக்கப்பட்டதனால் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டிருக்கின்ற வரலாற்று இன உறவுகளையும் வரலாற்று அபிவிருத்திப் பணிகளையும் நேரடியாக காணக்கூடிய சந்தர்ப்பம் திருகோணமலை மாவட்ட மக்களுக்கு கிடைத்துள்ளது.

2008ம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தலில் நான் மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் பின் ஜனாதிபதி முன்னிலையில் ஒரு கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக சத்தியப்பிரமானம் செய்ய ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற போது தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் பதவிக்கு உங்களை நான் சிபார்சு செய்திருக்கின்றேன். அந்த அமைச்சைப் பாரம் எடுத்து அந்த அமைச்சின் ஊடாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்;ட கிழக்கு மாகாணத்தில் மூவின மக்கள் வாழும் பிரதேசங்களை அடையாளம் கண்டு உட்கட்டமைப்பு அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்வதுடன் கிழக்கு மாகணத்தில் அறுந்து போயுள்ள இன உறவுகளை வளர்த்தெடுப்பதுடன் குறிப்பாக மூதூர், பொத்துவில் பிரதேசங்கள் அரசியல் அதிகாரம் இல்லாமல் இருப்பதனால் இவ்விரு பிரதேசங்களினதும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் விசேட கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

தேசிய காங்கிரஸின் தலைவரினால் எனக்கு வழங்கப்பட்ட கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் ஊடாக கிழக்கு மாகாணம் முழுவதிலும் மூவின மக்கள் வாழும் பிரதேசங்களில் சிறந்த பணி புரிய இறைவனின் உதவியால் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்ததுடன் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்திலும் எங்களால் முடிந்தளவு அபிவிருத்திப் பணிகளை செய்துள்ளோம். கிழக்கு மாகாணத்தில் இன்று நாம் சுவாசித்துக் கொண்டிருக்கின்ற சுதந்திரமான காற்றை சுவாசிப்பதற்காக கிழக்கு மாகாண மக்களுக்காக தேசிய காங்கிரஸின் தலைவர், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா தைரியமாக குரல் கொடுத்தார்.

தற்போதைய பிரிந்த நிலையில் உள்ள கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக முஸ்லிம் ஒருவர் பதவியில் இருக்கத்தக்கதாக கிழக்கு மாகாண முஸ்லிம் சமூகத்தின் நியாயமான பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றன.

பொத்துவில் பிரதேச மக்களின் நீண்ட கால கோரிக்கையான தனியான கல்வி வலயம் அமைப்பது தொடர்பாக கிழக்கு மாகாண சபை 03 தடவைகள் அங்கீகாரம் வழங்கியும் கிழக்கு மாகாண ஆளுனர் அதற்கான தனது விருப்பத்தையும் தெரிவித்த நிலையிலும் கூட இன்னும் கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவையில் ஒரு தீர்மானம் எடுக்க முடியாத நிலமையில் கிழக்கு மாகாண சபையின் தற்போதைய நிலமை உள்ளது. இதேவேளை இன்னும் 03 வாரங்களுக்குள் பொத்துவிலுக்கான தனியான கல்வி வலயம் அமைக்கப்படும் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சரும் பகிரங்கமாகவே தெரிவித்தும் இதுவரை கிழக்கு மாகாண சபை அமைச்சரவையால் பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலய விடயத்தில் ஒரு தீர்மானத்தை மேற்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலமை கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது.

குச்சவெளி பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் வேண்டும் என்ற பிரேரணை கிழக்கு மாகாண சபையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரினால் சமர்ப்பிக்கப்பட்ட போது அந்த பிரேரனையை கூட அங்கீகரிக்க முடியாத நிலமை கிழக்கு மாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு ஏற்பட்டது. குச்சவெளிக்கான தனியான கல்வி வலய கோரிக்கையினை கிழக்கு மாகாண சபையில் இனிமேல் கொண்டுவரக் கூடாது என்ற மனப்பாங்கில் பல ஆளுங்கட்சி உறுப்பினர்கள் உரையாற்றிய போது எனது கவலையை நான் தெரிவித்தேன்.

வட்டமடு பிரதேசத்தில் கால்நடைகளை உரிமையாளர்களாக முஸ்லிம்களும், தமிழர்களும் உள்ளனர். அதே போல் விவசாயக் காணிகள் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் சொந்தமாக உள்ளது. இரண்டு சமூகங்களும் பேச்சு வார்த்தைகள் ஊடாக தீர்க்கப்பட வேண்டிய விடயம் தற்போது நீதிமன்றம் சென்றுள்ளது. பரம்பரை பரம்பரையாக விவசாயம் மேற்கொண்டு வந்த முஸ்லிம் விவசாயிகள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறாhன பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுத் தரமுடியாத சூழ்நிலையில் வட கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் சமூகம் சம்மதம் தெரிவித்தாக வேண்டும் என சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

பிரிந்த கிழக்கு மாகாண சபையின் ஆட்சியில் முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுவரும் நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டால் நமது முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால நிலைப்பாடு எவ்வாறு அமையும் என்பதை முஸ்லிம் சமூகம் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
Attachments area

LEAVE A REPLY