வடிச்சல் கிராம குழாய் நீர் விநியோகத் திட்டத்திற்கு 3 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு

0
165

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

unnamed (2)மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு பதுளை வீதிக் கிராமமான வடிச்சலுக்கு குழாய் நீர் விநியோகம் செய்வதற்காக நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சு 3 மில்லியன் ரூபாவை முதற்கட்டத் திட்டத்திற்கு ஒதுக்கியுள்ளதாக ஏறாவூர் பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம். ஷயீட் தெரிவித்தார்.

மேற்படி பதுளை வீதிக் கிராமங்களில் வாழ்ந்த பல நூற்றுக் கணக்கான குடும்பங்கள் 1985ஆம் ஆண்டு இடம்பெற்ற இனவன்செயல்களின் போது இடம்பெயர்ந்து தற்சமயம் அவர்களது சொந்த முயற்சியில் பழைய இடங்களில் குடியமர்ந்து வருகின்றார்கள் என்றும் அவர் கூறினார்.

அரசாங்தினதோ அல்லது உதவி நிறுவனங்களினதோ எதுவிதமான உதவிகளுமின்றி வடிச்சல் கிராமத்தில் மீள் குடியேறியுள்ள 58 முஸ்லிம் குடும்பங்களும் குடி தண்ணீரின்றிப் பரிதவிப்பதை நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானாவை நேரில் அழைத்துச் சென்று சுட்டிக் காட்டியதற்கிணங்க அமைச்சர் றவூப் ஹக்கீமின் உத்தரவின் பேரில் வடிச்சல் கிராம மக்களுக்கு குழாய் நீர் விநியோகம் செய்வதற்கு முதற்கட்டமாக 3 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்படி வடிச்சல் கிராமத்திற்கு அருகிலுள்ள உறுகாமம் குளத்திலிருந்து நீரைப் பெற்று சுத்திகரிப்புச் செய்து அந்த நீர் மீள்குடியமர்ந்த மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.

குழாய் நீர் விநியோகத்திற்கான விரிவான வேலைத் திட்ட வரைவு மற்றும் ஆவணங்கள் மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கிராமிய நீர் விநியோகத் திட்ட நிருமாண பிராந்திய முகாமைப் பொறியியலாளர் ஏ.எல்.எம். பிர்தௌஸ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானாவுக்கு கடந்த 30.08.2016 அன்று எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY