இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டும்

0
410

(வை.எம்.பைரூஸ்)

Muslim islam dhuaநாட்டில் சுமார் முப்பது வருடங்கள் தலைவிரித்தாடிய விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்துக்கு கடந்த கால மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்தது. இருப்பினும், இலங்கை இராணுவம் அரசாங்கத்தின் பூரண ஒத்துழைப்புடன் போர் செய்கின்றோம் என்ற போர்வையில் சர்வதேச போர் விதி முறைகளை மீறி இரசாயண ஆயுதங்களை இறுதி ஈழப்போரில் மேற்கொண்டு தாக்குதல்களில் உபயோகித்ததாகவும், இத்தாக்குதலில் சிறுவர்கள், பெண்கள், முதியோர்கள் என பலர் கொல்லப்பட்டதாகவும் குற்றம சுமத்தப்பட்டுள்ளது.

அதே நேரம், இந்த யுத்தத்தை முன்னின்று நடாத்திய முன்னாள் ஜனாபதி மஹிந்த ராஜபக்சவுக்கெதிராக பல குற்றச்சாட்டுக்கள் சர்வதேச நாடுகள் தொட்டு ஐக்கிய நாடுகள் சபை வரை கொண்டு செல்லப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி, அதற்கெதிராக இன்றும் விசாரணைகள் நடந்த வண்ணமேயுள்ளது. ஆனால், கொடூர யுத்தம் நாட்டில் தலை விரித்தாடிய போது, இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஈவிரக்கமின்றி புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை யாரும் இலகுவில் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.

ஆனால், அவைகள் சர்வதேசத்துக்கு கொண்டு செல்லப்பட்டதென்பது மிக மிக அரிதே. கொண்டு செல்லப்படாமை கவலைக்குரிய விடயமே.

கடந்த கால மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியிலும் இனவாதக் குழுக்களினால் பல்வேறு இன்னல்களையும் தாக்குதல்களையும் முஸ்லிம்கள் எதிர்கொண்டதுடன், மார்க்க விழுமியங்களை பின்பற்றுவதில் பல இடையூறுகளையும் சந்தித்து வந்தததையும் இன்று வரையும் பல்வேறு வடிவங்களில் அவை தொடர்வதையும் நாம் யாரும் இலகுவில் மறந்து விட முடியாது.

அதற்கப்பால் நடந்த ஜனாதிபதித்தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டுமென்ற ஒரே குறிக்கோளோடு முஸ்லிம்கள் அனைவரும் ஏகோபித்த முடிவாக இருந்ததன் விளைவாகவும், ஏற்கனவே தமிழ் மக்களும் அவ்வரசாங்கத்துக்கெதிராக செயற்பட்டதன் விளைவாகவும் பெரும்பான்மை மக்களின் ஆதாரவோடும் மஹிந்த அணியினர் ஆட்சியிலிருந்து தூக்கி வீசப்பட்டனர்.

பின்பு கடந்த வருடம் தொட்டு ஆரம்பித்த மைத்திரி பால சிரி சேனவின் நல்லாட்சி அரசாங்கத்திலாவது முஸ்லிம்கள் நிம்மதியாக தங்களது வணக்க வழிபாடுகளையும், பொருளாதாரத்தையும் பேணி பாதுகாக்கலாம் என்றிருந்த நிலையில், இந்நல்லாட்சி அரசாங்கம் பாதுகாப்புக் கொடுத்துள்ளதா என்றால் அதுவும் கேள்விக்குறியான விடயமாகவேயுள்ளது.

இன்று நாட்டில் தலைவிரித்தாடுகின்ற இரண்டு பெரும்பான்மை இனவாத அமைப்புக்களாக பொது பலசேன , சிங்ஹலே போன்ற அமைப்புக்கள் உள்ளன. இவ்வமைப்புக்கள் பெரும்பான்மை இன மக்கள் செறிந்து வாழ்கின்ற ஊர்கள் மற்றும் தலைநகர் கொழும்பு போன்ற பிரதேசங்களில் தனக்குச் சார்பான மக்களை அழைத்துக்கொண்டு கூட்டங்களையும், ஊடகவியலாளர் மாநாடுகளையும் நடாத்துகின்றனர்.

இவ்வாறான மாநாடுகளூடாக இவர்கள் பெரும்பான்மை மக்களின் மனதில் இஸ்லாம் பற்றிய தப்பபிப்பிராயத்தை விதைப்பதுடன், முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் கீழ்த்தரமான வார்த்தைகளால் தூற்றுவதுடன், எச்சரிக்கையும் விடுகிறார்கள். ஆனால், இவ்வாறான மத நிந்தனை, இனவாதச் செயற்பாடுகள் தொடர்பில் காவல் துறையாே, பாதுகாப்புத்தரப்பினரோ, பொறுப்பு வாய்ந்தவர்களோ நடவடிக்கை மேற்கொள்ளாது வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

ஆகவே தான், இவ்வாறான முஸ்லிம்களுக்கெதிரான, இஸ்லாத்திற்கெதிரான செயற்பாடுகளை, அநியாயங்களை, அட்டூழியங்களை தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் முன்னெடுக்கின்ற போது, ஆட்சியிலுள்ள அரசும், சட்டமும் நடவடிக்கை மேற்கொள்ளாது, வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்குமானால், இந்த விடயங்களை சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டிய தேவையும் பாரிய பொறுப்பும் உள்ளது.

அதே நேரம், சர்வதேசத்துக்கு எத்தி வைப்பதை விட வேறு வழியில்லை. அதனை எவ்வாறு எத்தி வைப்பதென்பதே அடுத்த கேள்வியாகும்.

சனத்தொகை அடிப்படையில் மூன்றாம் சாராராக வாழக்கூடிய முஸ்லிம் சமூகத்திற்கு தேசிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டதொரு கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உண்டென்பதை யாரும் மறுப்பதற்கில்லை. முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் குறிப்பாக, அளுத்கமை பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கெதிராக நடைபெற்ற கண்மூடித்தனமான தாக்குதலை வண்மையாகக் கண்டித்திருந்தது.

ஆனால், மஹிந்த அரசு அதற்கெதிராக நடவடிக்கை மேற்கொள்ள தவறியிருந்த நிலையிலும், அதனை பொடு போக்காக விட்டதன் விளைவாகவும் அதனை சர்வதேசம் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமைத்துவமும எடுத்துச் சென்றது.

இது ஒரு புறமிருக்க இன்று முஸ்லிம் அரசியல்வதிகள் ஆளுக்கொரு கட்சியை ஆரம்பித்துக்கொண்டு ஒரே கூரையின் கீழிருந்த முஸ்லிம்களைத் திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள். இது முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுத்தரக்கூடிய முஸ்லிம் அரசியல் சக்திகளை தமது சுயநல அரசியலுக்காக வலுவிழக்கச் செய்கின்ற செயற்பாடுகளாவே எமக்குத் தென்படுகிறது.

நாம் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அர­சியல் யாப்பு ரீதி­யாக சிறு­பான்மை இன ­மக்­களின் பாது­காப்­புக்கு உத்­த­ர­வாதம் வழங்கப்­ப­ட­ வேண்டுமென்று சர்­வ­தேச சமூ­கத்தின் அழுத்­தத்­துக்கு மத்­தியில் தமிழ்­ மக்­க­ளுக்­கான ஒரு அர­சியல் தீர்வை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் புலம்­பெயர் தமிழ் அமைப்­புக்­களும் சர்­வ­தேச சமூ­கமும் அக்­கறை கொள்ளுமள­வுக்கு முஸ்லிம் சமூ­கத்­துக்­கான ஒரு தீர்வு பற்றி இன்னும் முஸ்லிம் அரசியல்வாதிகள் மௌனித்து இருப்­பது வேத­னைக்­கு­ரி­ய­ விடயமே.

இணைந்த வட கிழக்கை மீண்டும் இணைப்பதற்கு தற்பாதேு தமிழ் சமூகம் கோரி நிற்­கின்­ற­ போது, முஸ்லிம் சமூ­கத்­தி­லி­ருந்து சில அரசியல்வாதிகள் சிறு­பிள்ளைத்தன­மான கோரிக்­கை­களையும் கருத்­துக்­களையும் கூறி வருவது ஆரோக்கியமானதல்ல.

எனவே, எந்தவிதத் தீர்­வொன்றும் அரசியல் சட்டத்தில் மாற்றப்படுமிடத்து அதனை அரசியல்வாதிகள் முஸ்லிம் சமூகத்தின் நிகழ்காலத்தை மற்றும் பார்த்து முடிவெடுக்காமல் எதிர்காலத்தையும் சிந்தித்தே தீர்வுகளைப் பெற வேண்டும்.

இந்நாட்டின் இனப்பிரச்சினையாே வேறு ஏதாதவது பிரச்சினைகளோ முஸ்லிம் சமூகத்திற்கெதிராக வரும் போது, அதற்கான தீர்வு இந்நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்களின் ஒருமித்த குரலாக இருக்கின்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சியும் ஒரு சில சிவில் அமைப்புக்களுமே அதனை சர்வதேசத்துக்கு எடுத்துச்சென்று அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுப்பதன் மூலம் குறைக்க முடியுமென்பதே எதார்த்தமான உண்மையுமாகும்.

LEAVE A REPLY