வட, கிழக்கு இணைந்திருந்த காலப்பகுதியில் முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய அநீதி: கிழக்கு எதிர்க்கட்சித் தலைவர்

0
161

(எம் .ஜே.எம். சஜீத்)

unnamed (8)இணைந்த வட, கிழக்கு நிருவாகத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டதுடன், முஸ்லிம்கள் அடிமைப்படுத்தப்பட்டதொரு சமூகமாக வாழ்ந்து வந்ததனை வட கிழக்கு மஸ்லிம் மக்கள் ஒருபோதும் மறந்துவிட முடியாதென கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும் தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ் உதுமாலெப்பை தெரிவித்தார்.

ஏறாவூர் ஆற்றங்கரை டாக்டர் அகமட் பரீட் விளையாட்டு மைதானத்தில் (02) நடைபெற்ற சுதந்திர கிழக்கு பிரகடனப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் 1987ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டது. அப்போதைய நிருவாகத்தால் வட,கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் அடிமைப்படுத்தப்பட்டு ஆளப்பட்டு வந்தனர். குறிப்பாக வரலாற்று இன உறவுடன் வட, கிழக்கில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த சமூகங்களுக்கிடையில் இனக்குரோதங்களை ஏற்படுத்தி தனித்தனி சமூகங்களாக சந்தேகங்களுடன் வாழும் நிலைமை உருவாக்கப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் அரசியல் தலைவர்களும் வட கிழக்கு இணைக்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் தங்களின் தீர்மானங்களை மேற்கொண்டு அதற்கான காய்நகர்த்தல்களை செய்து வருகின்றனர். இந்த விடயமாக முஸ்லிம் அரசியல் கட்சிகளான தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஆகியன தங்களின் நிலைப்பாட்டினை வெளிப்படையாக தெரிவித்துள்ளது.

முஸ்லிம்களின் பெரும்பான்மை வாக்குகளை பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் இவ்விடயம் தொடர்பாக மௌனம் காத்து வருவதுடன் சேதாரமில்லாமல் இந்தவிடயத்தை கையாளவுள்ளதாக முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

வட,கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் வட,கிழக்கு இணைப்பால் எவ்வாறு பாதிக்கப்பட்னர் என்ற யதார்த்தத்தினை நன்றாக அறிந்தும் வட,கிழக்கு மாகாண மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சில அரசியல் தலைவர்களின் செயற்பாடு குறித்து நாம கவலைப்பட வேண்டியுள்ளது.

வட,கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் பரஸ்பர இனநல்லுறவுடன் வாழ்ந்துவந்துள்ளனர். அன்று தமிழ் மக்களின் சாத்வீக அரசியல் போராட்டங்களுக்கு முஸ்லிம் முஸ்லிம் தலைவர்களும் முஸ்லிம் மக்களும் தோளோடு தோள் கொடுத்து பாரிய பங்களிப்பு வழங்கி வந்துள்ளதோடு, தந்தை செல்வ நாகயத்துடன் முஸ்லிம்களின் மூத்த அரசியல் பிரமுகர்களான டாக்டர் உதுமாலெப்பை, செனட்டர் மசூர் மௌலானா போன்றோர் இணைந்து தமிழ் மக்களுடைய அரசியல் போராட்டத்துக்கு உதவிய வரலாறுகளும் உள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் மூதூரைச் சேர்ந்த முகம்மட் அலி தமிழரசுக்கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்றம் சென்றார். அதேபோல் அம்பாரை மாவட்டத்தில் எம்.எஸ் காரியப்பர் எம்.எம் முஸ்தபா ஆகியோரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றம் சென்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் தேவநாயகத்துக்கு கனிசமான முஸ்லிம் வாக்காளர்கள் வாக்களித்தனர். முன்னாள் அமைச்சர் அண்ணன் ராசதுரைக்கும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் மக்களும் கனிசமான வாக்குகளை அளித்தனர். அதேபோன்று அம்பாரையில் முன்னாள் அமைச்சர் எம்.ஏ மஜீட் , டாக்டர் ஜலால்தீன் போன்றோருக்கு அம்பாரை மாவட்ட தமிழ் மக்களும் வாக்களித்த வரலாறுகளும் உண்டு.

இந்நிலையில் எப்போது தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக திசைதிருப்பப்பட்டதோ, அன்றிலிருந்து வட கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் மக்களின் உறவுகளில் விரிசல் ஏற்பட்டது இதன் தாக்கத்தினால்தான் மறைந்த பெருந் தலைவர் அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் குரலாக முஸ்லிம் காங்கிரஸ் எனும் அரசியல் கட்சியை உருவாக்கினார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக் காலத்தில் அமைச்சர் பதவியிலிருந்து திடீரென நீக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கிமுக்கு ஆதரவு தெரிவித்து அன்று பிரதிக் கல்வி அமைச்சராகவிருந்த அதாஉல்லா தனது பதிவியினை ராஜினமா செய்ததுடன் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்தனர். இதனைத்தொடர்ந்து அன்று ஏறாவூர் நகரில் பெரும் திரளான மக்கள் கலந்துகொண்ட மாபெரும் பொதுக் கூட்டமொன்றும் நடைபெற்றது. இவ்வாறான போராட்டங்களினால் நமது நாட்டில் ஆட்சி மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது.

நமது நாட்டில் சமாதான உடன்படிக்கை செய்யப்பட்ட போது வடகிழக்கு மாகாணங்களில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும் முஸ்லிம் சமூகத்தைப்பற்றி ஒரு வசனம் கூட குறிப்பிடப்படாமல் வட கிழக்கிலே வாழும் ஏனைய சிறு குழுக்கள் என உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. முஸ்லிம் சமூகத்தை ஒரு தனித்துவமான சமூகமாக அடையாளப்படுத்துவதற்குக்கூட எங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. அன்று முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்தவாறே வட கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களுக்கு ஏற்படும் அநீதிகளை கண்டிக்கும் நோக்குடன் அன்று மூதூரிலே இருந்து ஏறாவூறூடாக பொத்துவில் வரை இன்றைய தேசிய காங்கிரசியுடைய தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம் அதாவுல்லா அவர்கள் முஸ்லிம் மக்களை விளிப்பூட்டும் நோக்கத்துடன் பாத யாத்திரை மேற்கொண்டதனை எமது மக்கள் மறந்துவிட முடியாது.

இன்று ஏறாவூரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சுதந்திர கிழக்கு பிரகடன நிகழ்வு கிழக்கு மாகாணத்திலுள்ள சகல கிராமங்களிலும் முன்னெடுக்கப்பட்டு கிழக்கு மாகாணம் வடக்கோடு இணைவதால் முஸ்லிம் மக்களுக்கு ஏற்படக்கூடிய அபாயத்தினை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தேசிய காங்கிரசின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம் அதாஉல்லா, விசேட உரையாற்றியதுடன், முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும், மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ் சுபையிர், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட், தேசிய காங்கிரசின் சிரேஷ்ட பிரதி செயலாளர் டாக்டர் ஏ. உதுமாலெப்பை மற்றும் பல அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டு உரையாற்றினர்.

LEAVE A REPLY