எமது பிள்ளைகள் வழிகேட்டில் சென்றுவிடாது சரியான வழியில் செல்வதற்கு பெற்றோர்கள் காவலர்களாக இருக்க வேண்டும்

0
196

(எம்.எம்.ஜபீர்)

unnamed (5)மாணவர்களின் கல்வியில் பெற்றோர்கள் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும். தற்போது இலத்திரனியல் யுகத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம். அனைவரது கைகளிலும் தொலைபேசியும், கணனியும் காணப்படுகின்றது. ஆகையால் எமது பிள்ளைகள் வழிகேட்டில் சென்றுவிடாது சரியான வழியில் செல்வதற்கு பெற்றோர்கள் காவலர்களாக இருக்க வேண்டும்.

இவ்வாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் இறக்காமம் வரிப்பத்தான்சேனை அல்-அமீன் வித்தியாலயத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் 6.2 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இரு மாடி வகுப்பறை, கணனி ஆய்வுகூட கட்டிடத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.

பாடசாலை அதிபர் யூ.மன்சூர் தலைமையில் இடம்;பெற்ற நிகழ்வில் சம்மாந்துறை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.எஸ்.உமர்மௌலானா, கோட்டக் கல்வி அதிகாரி யூ.எல்.மஹ்மூது லெப்பை, இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஐ.நைஸர், உறுப்பினர்களான என்.எம்.ஆசிக், யூ.எல்.சுலைமா லெப்பை, ஜூம்மா பள்ளிவாசல் தலைவர் ஏ.ஆதம்லெப்பை உட்பட மேலும் பலர் கலந்து கொண்டனர்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 17 வயதுடைய பாடசாலை மாணவன் இந்த நாட்டின் ஜனாதிபதியினுடைய இணையத்தளத்தில் ஊடுருவி பல்வேறு மோசடிகளை செய்துள்ளான் என அண்மையில் கேள்வியுற்றிருப்பீர்கள். ஒரு புறத்தில் பார்க்கப் போனால் மாணவன் செய்தது குற்றச் செயல் தண்டிக்கப்பட வேண்டியது. மறுபுறத்தில் பார்த்தால் அவன் கெட்டிக்கார மாணவன். பிரச்சினை என்னவென்றால் தமது கெட்டித்தனத்தை எதிர்காலத்தின் நலன்கருதியும் நாட்டின் நலன்கருதியும் அதனை பயன்படுத்தியிருந்தால் அது அவர்களுக்கும், நாட்டிற்கும் பிரயோசனமாக இருந்திருக்கும்.

அவ்வாறான மாணவர்களுக்கு சரியான பாதையை காட்ட வேண்டியது பெற்றோர்களினதும், அரசியல்வாதிகளினதும் கடமையாக இருக்கின்றது. எங்களுடைய கடமையை நாங்கள் ஓரளவு செய்கின்றோம். பெற்றோர்களாகிய நீங்கள் உங்களின் கடமையை சரியாக செய்தீர்களானால் எமது இளம் தலைமுறையினர் எதிர்காலத்தில் நற்பிரஜைகளாக மிளிர்வார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இங்கிருக்கின்ற மாணவர்கள் எதிர்காலத்தில் உயர்பதவிகளை பெறுகின்ற போது பிறந்த ஊரையும், கல்வி கற்ற பாடசாலையையும் மறந்துவிடக் கூடாது. மாணவர்கள் பெறுகின்ற கல்வி வெறுமனே உலகக்கல்வியோடு மாத்திரம் அடங்கி விடாமல் மார்க்கக்கல்வியையும் கற்று பூரணமான சமுதாயமாக மாற வேண்டும்.

யுத்தத்தனால் சின்னாபடுத்தப்பட்ட எந்தவித அபிவிருத்தியும் காணாத கிராமங்களுக்கு வரலாற்றில் என்றுமில்லாதவாறு கோடிக்கணக்கான பணம் இப்போது கல்விக்காக செலவு செய்யப்படுகின்றது. கிழக்கு மாகாண சபையைப் பொறுத்த வரையில் திறமைவாய்ந்த கல்வி அமைச்சராக இருக்கின்ற தண்டாயுதபாணி கல்வித்துறையோடு நீண்டகால ஈடுபாட்டுடன் மாகாண கல்வி பணிப்பாளராகவும் இருந்த அனுபவத்தின் மூலம் நீதியாக, நேர்மையாக வளங்களை பங்கீடு செய்துவருகின்றார்.

அந்தவகையிலே என்னுடைய முயற்சியினால் இறக்காமம், சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு நிதிகளைப் ஒதுக்க கிடைத்ததையிட்டு நான் சந்தோசமடைகின்றேன். வெறுமனே நகரப் பகுதிகளில் இருக்கின்ற பாடசாலைகளை ஊக்குவிப்பது ஒரு அபிவிருத்தியாக அமையாது. அந்த பிரதேசத்திற்கு கிடைக்கின்ற சகல வளங்களும் தேவைகள் கூடிய பின்தங்கிய பிரதேசங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நல்லாட்சியின் அடிப்படையில் வரிப்பத்தான்சேனை பிரதேசத்திற்கும் கூடுதலான நிதிகளை கல்விக்காக வழங்கியுள்ளேன்.

கல்விக்காக மட்டுமல்ல வரிப்பத்தான்சேனை பள்ளிவாசலுக்கு 75 ஆயிரம் றியால்களை பெற்றுக் கொடுத்துள்ளளேன் என்ற சந்தோசமான செய்தியை சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். மாகாண சபை உறுப்பினராகி ஒருவருடம் நிறைவுபெறவில்லை. இவ்வாறு எங்கெங்கு சென்று தேவைகள் கூடிய கிராமங்களான இறக்காமம், வரிப்பத்தான்சேனை, வாங்காமம், நல்லதண்ணிமலை, குடிவில், மத்தியமுகாம் போன்ற பிரதேசங்களுக்கு பணங்களை பெற்றுக்கொடுக்க முடியுமே அங்கெல்லாம் சென்று உரியவர்களை சந்தித்து இந்த பகுதியின் நிலைமைகளை எடுத்துக்கூறி உதவிகளை பெற்றுக் கொடுத்துள்ளேன்.

எதிர்காலத்திலும் நிதிகளை பெற்றுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றேன். இந்நிகழ்விற்கு வருவதற்கு முன்னர் வாங்காமத்திற்கு சென்று சில அபிவிருத்தி வேலைகளை ஆரம்பித்து வைத்துவிட்டுத்தான் வந்தேன். வாங்காமத்தில் செய்ய வேண்டிய பல அபிவிருத்தி வேலைகளை அடையாளம் கண்டிருக்கின்றேன்.

வெறுமனே பேச்சளவில் மாத்திரம் வாக்குறுதி வழங்கிவிட்டு செல்ல நான் இங்கு வரவில்லை. உறுதியான நிலையான வேலைகளை செய்வதற்காகத்தான் வந்துள்ளேன். எவர் எதனைக் கொண்டு வந்தாலும் அதனை இன்முகத்துடன் பெருமனம் கொண்டு பெற்றுக் கொள்ள வேண்டும். கட்சி பேதம் பார்க்க கூடாது. தேர்தல் வருகின்ற போது விரும்பிய கட்சிக்கும் வேட்பாளருக்கும் வாக்களியுங்கள்.

ஆனால் மற்றைய காலங்களில் எவர் எங்களது பிரதேசத்திற்கு கூடுதலான அபிவிருத்தியை செய்கின்றாரோ அவரின் பின்னால் சென்று அபிவிருத்திகளை கிராமத்திற்கு கிடைப்பதற்குரிய வழியை செய்யுங்கள். அதுமாத்திரமல்ல எங்களால் தெரிவு செய்யப்பட்ட எத்தனையோ பிரதிநிதிகள் இந்த பிரதேசத்திற்கு வராமலிருக்கின்றார்கள் அவர்களை நாடிச் சென்று இந்த பிரதேசத்தின் குறைபாடுகளை எடுத்துக்கூறி இயலுமான உதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டியது உங்களின் கடமையாகவுள்ளது. பொறியியலாளர் மன்சூர் கடந்த மாதம் ஜனாதிபதியினால் இறக்காமம் பிரதேச அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதையிட்டு சந்தோசமடைகின்றேன்.

இருந்தாலும் அடுத்த தடவை இன்னுமொரு வைபவத்தில் உங்களை நான் சந்திக்கின்ற போது உங்களது பதவியினால் இந்த பிரதேசத்திற்கு என்ன அபிவிருத்தி செய்துள்ளீர்கள் என்பதை மக்கள் சொல்லக்கூடிய வகையில் கிடைத்துள்ள பதவியை பயன்படுத்த வேண்டுமென வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன். இந்த பிரதேசத்தின் கல்வி நடவடிக்கைகள் சம்பந்தமாக குறிப்பாக இறக்காமம் பிரதேசத்தின் ஆசிரியர் மற்றும் வளப்பற்றாக் குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர், முதலமைச்சர், மாகாணக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருடன் பலதடவை கலந்துரையாடல் செய்திருக்கின்றேன். சுமார் 180ற்கு மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் இங்கு காணப்படுகின்றன.

கல்விக் கல்லூரிகளில் பயிற்சியை முடித்து வெளியேறும் இந்த பிரதேசத்தை சேர்ந்தவர்களை இங்கேயே நியமிக்குமாறும், வெளியூர்களில் இருக்கின்ற இந்த பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியர்களை மிக விரைவில் அவர்கள் இருக்கின்ற பிரதேசங்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படாத வகையில் இந்த பிரதேசத்திற்கு கொண்டு வருவதற்கும் நாங்கள் தீர்மானம் எடுத்துள்ளோம்.

உங்களின் பிரதேசத்தில் இயலுமான உதவிகளை செய்வதற்கு மாகாண சபை என்று மாத்திரம் எல்லைக் கோட்டில் நிற்காமல் மத்திய அரசாங்கத்திலே எங்கெல்லாம் சென்று முயற்சி செய்து அபிவிருத்தி செய்ய முடியுமோ அங்கெல்லாம் சென்று பிரதேசத்தின் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டுமென நான் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் றஊப்ஹக்கீம் எங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

கடந்த இருவாரங்களுக்கு முன்னர் எமது கட்சியை சேர்ந்த பிரதி அமைச்சர் பைசால் காசீம், மாகாண அமைச்சர் நஸீர் உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்களும் இங்கு வந்து வரிப்பத்தான்சேனையிலுள்ள மஜீட்புரத்தில் ஒரு கோடி ரூபா பெறுமதியான வைத்தியசாலை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினோம். அதேபோல் இறக்காமம் வைத்தியசாலையில் தாதியர் விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டியது உட்பட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை அன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைத்தோம் எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY