சு.கவின் எதிர்கால பயணத்துக்கு சிறுபான்மை சமூகம் முழுமையான பங்களிப்பு வழங்கும்: எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

0
89

unnamed (3)65ஆவது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால பயணத்துக்கு வடக்கு – கிழக்கு மற்றும் அதற்கு வெளியே வாழ்கின்ற சிறுபான்மை சமூகம் முழுமையான ஒத்துழைப்பு – பங்களிப்பை வழங்கும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அதில் மேலும் கூறியுள்ளதாவது:-

1951ஆம் ஆண்டு எஸ்.டப்ளியு.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இலங்கை அரசியல் வரலாற்றில் பிரதான பங்குவகிக்கின்றது. பின்வந்த தலைவர்களான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் சுதந்திரக் கட்சியை மேலும் வலுப்படுத்தி அரசியல் அதிகாரத்தைப் பெற்றனர்.

இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்று சிறப்பாக வழிநடத்தி வருகின்றார். கட்சிக்கு எதிராக் சதிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவற்றை முறியடித்து மீண்டும் பலமான நிலைக்கு கட்சியை கொண்டு செல்கிறார்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு சிறுபான்மை சமூகம் தூரமாகியது. எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை சீர் செய்து சிறுபான்மை சமூகத்துக்கும் அங்கீகாரம் வழங்கியுள்ளார்.

தெற்கு அரசியலை மையமாக வைத்து செயற்பட்டு வந்த சுதந்திரக் கட்சியை வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கும் விரிவுபடுத்தி அங்குள்ள தமிழ், முஸ்லிம் மக்களையும் தனது பயணத்தில் இணைத்துக் கொண்டுள்ளார். எனவே, சிறுபான்மை சமூகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால பயணத்துக்காக பூரண பங்களிப்பு – ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

சிறுபான்மை சமூகத்தின் உரிமைகள் இந்த அரசின் மூலமே பெற்றுக் கொள்ள முடியும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கரங்களை நாங்கள் பலப்படுத்துவதன் மூலம் அதனை எம்மால் அடைந்து கொள்ள முடியும்.

எதிர்வரும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை இலக்காக வைத்து பல வேலைத்திட்டங்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொண்டு வருகின்றது. அதுமட்டுமல்லாது சு.க. தலைமையில் ஆட்சியொன்றை அமைப்பதற்கும் ஜனாதிபதி விரும்புகிறார். இவற்றுக்குத் தேவையான தீர்மானங்களை நாளை நடைபெறவுள்ள கட்சி மாநாட்டில் எடுக்கவுள்ளார்.

மிகவும் நெருக்கடியான சூழலிளே கட்சியின் 65ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்படுகின்றது. இது நிச்சயமாக மாபெரும் வெற்றி பெரும். அதற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். – எனத்தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY