போதைப் பொருள் பாவனையை ஒழிப்பதில் பொலிஸாருடன் பொதுமக்களும், பொது நிறுவனங்களும் மத அமைப்புக்களும் கைகோர்க்க வேண்டும்: பொலிஸ் பொறுப்பதிகாரி சிந்தக பீரிஸ்

0
159

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

unnamedஏறாவூர் நகர பிரதேசத்தில் செப்ரெம்பெர் மாதம் முழுவதையும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்குரிய மாதமாக ஏறாவூர் பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் பிரகடனப்படுத்தி நடவடிக்கையில் இறங்கியிருப்பதை தான் வரவேற்பதாக ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் தெரிவித்தார்.

ஏறாவூரில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக வினவியபோது ஞாயிறன்று (ஓகஸ்ட் 04, 2016) அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த சிந்தக பீரிஸ், போதைப் பொருள் விற்பனை, பாவனை என்பவையெல்லாம் ஒரு போதும் சமூகத்திற்கு வெளியே இடம்பெறுவதில்லை. ஆதலால், மக்கள் சமூகத்திலுள்ள அனைவரும் போதைப் பொருள் சீரழிவு குறித்து மிகுந்த எச்சரிக்கையுடனும், அவதானத்துடனும், சமூகப் பொறுப்புடனும் செயற்பட வேண்டும்.

வெறுமனே பொலிஸார் மாத்திரம் போதைப் பொருள் விற்பனை, பாவனை, மற்றும் சமூகத்தில் நடக்கின்ற குற்றச் செயல்கள், நாசகாரச் செயல்களைக் கட்டுப்டுத்தவும் இல்லாதொழிக்கவும் வேண்டும் என்று சமூகம் நினைத்து விட்டு செயலற்றுப் போய் இருந்து விடக் கூடாது.

சமூத்திலுள்ள ஒவ்வொரு தனிப்பட்ட பிரஜை, பொதுமக்கள், சமூக நிறுவனங்கள், மத அமைப்புக்கள் என்பவை போதைப் பொருள் மற்றும் குற்றச் செயல் ஒழிப்பில் பொலிஸாருடன் கைகோர்க்க வேண்டும்.

இந்த தரப்பினர் அனைவரும் தமது ஒருமித்த ஒத்துழைப்பை பொலிஸாருக்கு வழங்குவார்களாயின் போதைப் பொருள் பாவனை, விற்பனை என்பனவற்றையும் இதர குற்றச் செயல்களையும் நாள் குறிப்பிட்டு ஒழிக்க முடியும்.

போதைப் பொருள் பாவனையோடு அல்லது விற்பனையோடு சம்பந்தப்பட்ட ஒருவரைக் கைது செய்து அவரைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வருவதற்கு முன்பாகவே அந்த நபரை விடுதலை செய்யுமாறும் அவர் அப்பாவி என்றும் சமூகத்திலுள்ள பலர் குரல் கொடுக்கின்ற நிலைமை இன்னமும் சமூகத்தில் காணப்படுகின்றது.

இது பொலிஸாருக்கு சங்கடத்தை ஏற்படுத்துகின்றது. இந்த நிலைமை முற்றாக மாறி போதைப் பொருள் மற்றும் சமூகக் குற்றச் செயல்கள் குறித்த விழிப்புணர்வு சமுதாயத்திலுள்ள அனைத்துத் தரப்பினருக்கும் தேவை. அந்த வகையில் ஏறாவூரில் தொடங்கப்பட்டுள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரகடன விழிப்புணர்வு நடவடிக்கையை ஒரு குறியீடாக எடுத்து அதனை ஏனைய பகுதிகளுக்கும் வெற்றியளிக்கச் செய்ய வேண்டும்” என்றார்.

LEAVE A REPLY