மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்த சிறைக் கைதி மலசலகூட ஜன்னல் வழியாகத் தப்பியோட்டம்

0
20

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

jail-escapeமட்டக்களப்பு சிறைச்சாலைக் கைதியொருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சமயம் மலசலகூட ஜன்னல் வழியாகப் பாய்ந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேக நபரான ஏறாவூர் மிச்நகர் கிராமத்தைச் சேர்ந்த முபாறக் கனி அல்லது முபாறக் கசீர் (வயது 24) என்றழைக்கப்படும் சந்தேக நபர் ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இக்கைதி இன்று (04) ஞாயிற்றுக்கிழமை தனக்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகவும் உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியதற்கிணங்க சிறைச்சாலைப் பொலிஸார் அவரை மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையின் 11ஆம் வார்ட்டில் இன்று காலை அனுமதித்துள்ளனர்.

காலை 10.30 மணியளவில் இவர் மலசலகூடம் செல்ல வேண்டும் என்று தனக்கு காவல் நின்ற பொலிஸ் உத்தியோகத்தரிடம் கூறியுள்ளார்.

அதனடிப்படையில் பொலிஸ்காரர் அவரை 2ஆம் மாடியிலுள்ள 11ஆம் வார்ட்டின் மலசலகூடத்திற்கு அழைத்துச் சென்று உள்ளே செல்ல விட்டு விட்டு வெளியே காவலுக்கு நின்றுள்ளார்.

நெடுநேரமாகியும் மலசலகூடத்திற்குள் சென்ற கைதி வெளியே வராததால் சந்தேகம் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் அவரை மலசல கூடத்திற்குள் தேடிய பொழுது அவர் அங்கிருந்து ஜன்னல்வழியாகக் குதித்து தப்பிச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.

தற்சமயம் தப்பியோடிய கைதியைத் தேடி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சுற்றுவட்டாரத்திலும் கைதியின் சொந்த இடமான ஏறாவூரிலும் பொலிஸார் வலைவிரித்துள்ளனர்.

சென்ற வருடம் ஜுன் 27 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலையும் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து கைதியொருவர் தப்பியோடிய சம்பவம் தொடர்பில், சிறைச்சாலை அதிகாரிகள் நால்வர் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன், மட்டக்களப்பு சிறைச்சாலையின் உயரதிகாரியும் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

பல்வேறுபட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் சிறைவைக்கப்பட்டிருந்த கேகாலையை வசிப்பிடமாகக் கொண்ட நபரே சென்ற ஆண்டு தப்பியோடியிருந்தார்.

LEAVE A REPLY