தான் பந்து வீசியதிலேயே கடினமான பேட்ஸ்மென் யார் – ஷோயப் அக்தர் கருத்து

0
132

sachin_bowled_2992516fவாசிம் அக்ரம் நடத்திய தி ஸ்போர்ட்ஸ்மென் என்ற ஷோ-வில் ஷோயப் அக்தர் தான் வீசியதிலேயே கடினமான பேட்ஸ்மென் யார் என்ற தகவலை வெளியிட்டார்.

“நிறைய பேட்ஸ்மென்களைக் கூற முடியும். ஆனால் அவர்களை விடவும் வீழ்த்துவதற்கு மிகவும் கடினமான வீரர் இன்சமாம் உல் ஹக்தான். அவரை நான் வலைப்பயிற்சியில் கூட வீழ்த்த முடிந்ததில்லை.

அவரை விட என்னை சிறப்பாக ஆடிய வீரர் இல்லை என்றே கூறிவிடலாம். அவரது கால்நகர்த்தல்கள் விரைவாக இருக்கும். அவர் கிரீசில் பந்தை ஆட நிலைப்படுத்திக் கொள்ளும் விதம், பந்தை அவர் ஒரு விநாடி முன்னதாகவே கணித்து விடுவார், நான் என்ன வேகம் வீசினாலும் அதனை எதிர்கொள்ள சரியான நிலையில் தன்னை நிறுத்திக் கொள்வார்” என்றார்.

இன்சமாம் உல் ஹக் ஆட்டத்தில் ஒரு ‘லேசி எலிகன்ஸ்’ இருக்கும் என்று பலரும் அவரை விதந்தோதியுள்ளனர். 120 டெஸ்ட் போட்டிகளில் 8,830 ரன்களை எடுத்தவர். சராசரி 49.60. 378 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 11,739 ரன்களை 39.52 என்ற சராசரியில் எடுத்த அபாரமான பேட்ஸ்மென்.

இன்சமாமைக் கூறிய ஷோயப் அக்தர் அடுத்ததாக 1999-ல் கொல்கத்தாவில் திராவிட், சச்சினை அடுத்தடுத்து யார்க்கர்களில் காலி செய்த கணத்தை தனது கனவுக் கணம் என்றார்.

வாசிம் அக்ரமிடம், “நீங்கள் உணவு இடைவேளைக்குப் பிறகு என்னிடம் பந்தை அளித்த போது இப்படி வீசு அப்படி வீசு என்று கூறிக்கொண்டிருந்தீர்கள். அதன் பிறகு நீங்கள் பேசாமல் இருந்தீர்கள், நான் எனக்குள்ளேயே யோசித்து திராவிடுக்கு ஒரு வேகமான பந்தை வீச முடிவெடுத்தேன். திராவிட் பவுல்டு ஆன பிறகு சச்சின் களமிறங்குவதைப் பார்த்தேன்.

நான் என் பவுலிங் மார்க்கிற்குச் சென்ற போது நீங்கள் (வாசிம் அக்ரம்) துல்லியமாக ஸ்விங் செய்தால் லெக்ஸ்டம்ப் மிஸ் ஆகாது என்றீர்கள். நான் எனக்குள்ளேயே கூறிக்கொண்டேன், ‘யா அல்லா, இந்த விக்கெட்டை வீழ்த்தினால் கொல்கத்தாவில் என் கனவு நிறைவேறும்’ என்று. சச்சினின் பேட்டிற்கும் கால்காப்பிற்கும் இடைவெளி லேசாக திறந்தது, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் செய்து ஸ்விங் செய்தால் சச்சின் நிச்சயம் பந்தை விடுவார் என்று ஒரு நம்பிக்கை. அவர் பந்தை விட்டு விடுவார் என்றே நான் நம்பினேன். பந்து மிடில் ஸ்டம்பைத் தாக்கியதும் அது ஒரு அற்புதமான கணமாக அமைந்தது” என்றார்.

அதன் பிறகு 2003 உலகக்கோப்பையிலும் 2004 முல்டான் டெஸ்டிலும் சச்சினும் சேவாகும் இவரைப் புரட்டி எடுத்தது வரலாறு என்பது குறிப்பிடத்தக்கது. சேவாக் தனது முச்சதத்தை எடுத்த டெஸ்ட் போட்டியாகும் அது.

LEAVE A REPLY