இலங்கையை வந்தடைந்தார் பான் கீ மூன்!

0
134

Ban-Ki-moonஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று மாலை 7.30 அளவில் இலங்கை வந்தடைந்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது பான் கீ மூன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் மூன்று நாள் இலங்கை விஜயத்திற்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இன்றிரவு 8 மணிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அவர் சந்திக்கவுள்ளார். இதனை தொடர்ந்து நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவர் சந்திக்கின்றார்.
பின்னர், இளைஞர் நிகழ்வொன்றில் பங்குகொள்ளும் பொருட்டு அவர் காலிக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இன்றைய தினம் இரவு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் ராபோசனத்தில் கலந்து கொள்கிறார். வெள்ளிக்கிழமை முற்பகல் 9 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்திக்கிறார்.இதனைத் தொடர்ந்து ‘நீடித்திருக்கும் சமாதானம்’ என்ற தொனிப்பொருளில் சிறப்பு சொற்பொழிவொன்றை கொழும்பில் உள்ள பிரதான விருந்தகம் ஒன்றில் நிகழ்த்தவுள்ளார்.

பின்னர் யாழ்ப்பாணம் செல்லும் அவர், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களையும் சந்திக்க உள்ளார். அதனை தொடர்ந்து மீள்குடியேற்ற பகுதிகளுக்கு விஜயம் செய்ய உள்ளார். இதனைத் தொடர்ந்து மூன் லக்ஷ்மன் கதிர்காமர் மத்திய நிலையத்தில் விஷேட உரையாற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து தமது விஜயத்தின் நிறைவாக செப்டம்பர் 2ஆம் திகதி மாலை 6.30 அளவில் கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை பான்கி மூன் மேற்கொள்ள உள்ளார். அதனை அடுத்து தமது இலங்கை விஜயத்தை நிறைவு செய்து கொண்டு பான் கீ மூன் இரவு 10.30க்கு இலங்கையில் இருந்து புறப்பட்டு, சீனாவில் இடம்பெறவுள்ள ஜீ20 மாநாட்டில் பங்குகொள்ளும் பொருட்டு சீனா செல்கிறார்.

LEAVE A REPLY